Mahadev hill temple!
Mahadev hill temple! 
ஆன்மிகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாதேவர் மலைக் கோயில்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

கோயிலுக்குச் செல்வதென்றாலே அமைதியும் பக்தியும் தானாகவே வந்து விடும். அவ்வகையில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் மகாதேவர் மலைக் கோயிலைப் பற்றித் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

சில கோயில்கள் ஆச்சரியத்தையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்தும். சில கோயில்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தும். தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாய் நிற்கிறது என்பது ஆணித்தரமான உண்மை. மலைக்கோயில் என்றாலே திருப்பதி, சபரிமலை, திருவண்ணாமலை, பழனி தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால், இக்கோயில்கள் அதிக அளவில் பிரசித்திப் பெற்றவை. ஆனால், சத்தமில்லாமல் ஒரு மலைக்கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? அதுதான் நம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மகாதேவர் மலைக் கோயில்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கே.வி. குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் தான், 150 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது மகாதேவர் மலை. இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய, சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் சுயம்புவாக உருவானது எனக் கருதப்படுகிறது. அதே சிவன் கோயிலில் காமாட்சியம்மனுக்கும் ஒரு பிரகாரம் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால், சிவனுக்கு எதிரில் எழுந்தருளியுள்ள நந்தியும் சுயம்புவாக உருவானது என்பது தான். இந்த மகாதேவர் மலையில் உள்ள கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தை ஆண்ட ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் புனரமைக்கப்பட்டு, அவரால் வணங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுயம்புவாக தோன்றிய இந்த பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் காண பக்தர்கள் நித்தமும் குவிந்தவண்ணம் உள்ளனர். மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிவபக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு இரவு முழுவதும் கோயிலில் தங்கி, அடுத்த நாள் காலையில் செல்வார்கள். மலையேறும் வழியில் ஆங்காங்கே பிள்ளையார், முருகர் மற்றும் ஆஞ்சநேயரின் சன்னதிகள் நமக்கு வழித்துணையாக இருக்கிறது. எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் நிறுத்த வசதியாக பரந்த அளவில் இடம் உள்ளது. மலைக்கோயில் என்பதால், இயற்கையின் அழகைக் காண பஞ்சமில்லை. மரங்கள், செடி கொடிகள் மற்றும் நீருற்று என இயற்கையின் அழகைத் தெளிவாய்க் காட்டுகிறது.

காதேவன் மலையைச் சுற்றிலும் 18 சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலஸ்ரீ மகானந்த சாமிகள் என்ற ஒரு சாமியார் இந்த மகாதேவர் மலையில் நுழைந்துள்ளார். குகையினுள் நீண்ட ஜடாமுடியும், உடல் முழுக்க திருநீரும் பூசிக்கொண்டு, உடம்பில் ஒரு சிறிய துண்டை மட்டும் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார்.

ஆன்மீக பக்தர்களே! சுயம்புவாக உருவான சிவனை தரிசித்து, இயற்கையின் அழகை ரசித்து ஆனந்தம் கொள்ள நிச்சயம் ஒரு நாள் மகாதேவர் மலைக்குச் சென்று வாருங்கள்.

ஒரு மாதத்திற்கு தினசரி பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்? அச்சச்சோ!  

தனிமை விரும்பிகள் பற்றிய 10 சுவாரசியமான உண்மைகள்!

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் தெரியுமா?

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மனோரா கோட்டை வரலாறு!

உங்கள் குழந்தையின் IQ லெவலை உயர்த்தும் 5 வழிகள் இதோ!

SCROLL FOR NEXT