Aippasi Thula Snanam 
ஆன்மிகம்

ஐப்பசி விஷுவும் துலா ஸ்நானமும்!

ஆர்.ஜெயலட்சுமி

ப்பசியை ‘துலாம்’ மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு துலா (தராசு ) மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம். ஐப்பசியின் கடைசி நாள் நீராடுவது ‘கடைமுழுக்கு’ எனப்படும். ஐப்பசி முழுவதும் காவிரியில் நீராட வேண்டும். முடியாதவர்கள் கார்த்திகை முதல் தேதி அல்லது கடைசி நாளன்று மட்டுமாவது காவிரியில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

துலாம் மாதம் ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். துலாம் மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் 68,000 ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் கூறுகிறது.

ஐப்பசியில் காவிரியில் ஒரு முறை நீராடினால் கங்கை நதியில் மூன்று முறை நீராடிய பலனும் யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிடைக்கும். கங்கை, சிந்து, யமுனை, நர்மதா, பிரம்மபுத்திரா, கோதாவரி, சரஸ்வதி ஆகிய ஏழு நதிகளும் மக்களின் பாவங்களை  சுமப்பதால் ஒவ்வொரு வருடமும் காவிரியில் துலாம் மாதத்தில் நீராடி புனிதமடைகின்றன. பாரத நதிகள் அனைத்தும் துலாம் மாதத்தில் காவிரியில் நீராடுவதாக சாஸ்திரம் கூறுகிறது. இப்படி பிற புனித நதிகள் தங்களது பாவ மூட்டைகளை காவிரியில் கரைப்பதால் தன்னிடம் சேரும் இந்த பாவங்கள் அனைத்தையும் திருமங்கலக்குடி திருத்தலத்திலும் உத்தரவாகினியாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்து காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம். துலா காவிரி நீராடலில் அழகு, ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பேறு, குழந்தைப் பேறு தவிர, புத்தியும் முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீ ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரை படித்துறையில் இருந்து புனித தீர்த்தத்தை யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்கிறார்கள்.

‘ஆயிரமானாலும் மாயூரம் ஆகுமா?’ என்பார்கள். சிவபெருமான் தனது ரிஷப வாகனத்தில் ஏறி துலாம் மாதத்தில் உலகை வலம் வந்தபோது நந்தி எனும் ரிஷபம் மாயூரம் காவிரி ஆற்றின் கவர்ச்சியால் நடுவில் அங்கேயே தங்கி விட, சிவன் தனது காலால் அதை அழுத்தி அதல பாதாளத்தில் இருக்கச் செய்து பின்னர் விமோசனம் தந்ததாக ஒரு கதை உள்ளது. ஆகவே, சிவனின் கால் பதித்ததாலும் நந்தி அம்சம் அங்கே இருந்து ஆசீர்வதிப்பதாலும் இத்தலம் விசேஷமாகப் போற்றப்படுகிறது.

ஐப்பசியில் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கம், திருப்பாற்கறை, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், மயிலாடுதுறை, குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு, காவிரி சங்கமமாகும் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் படித்துறை ஆகிய புனித இடங்களில் ஐப்பசியில் நீராடி தான தர்மங்களும் அன்னதானமும் செய்தல் வாழ்க்கையில் வளம் பல பெறலாம்.

ஐப்பசி விஷுவன்று துலா ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

SCROLL FOR NEXT