சாதாரண எருக்கம் பூவானாலும் சரி; சிறப்புத் தன்மை கொண்ட வெள்ளெருக்கு மலரானாலும் சரி அது சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் உகந்ததாகும். சபரி சாஸ்தாவுக்கு சாத்துவதற்காக ஆபரணங்களைக் கொண்ட மூன்று பெட்டிகள் (திருவாபரண பெட்டி, வெள்ளிப் பெட்டி, கொடிப் பெட்டி) கொண்டு வரப்படும். அவற்றுள் திருவாபரண பெட்டி மட்டும்தான் ஐயப்பன் சன்னிதிக்கு செல்லும். அதனுள் திருமுகக் கவசம், சூரிகைகள், யானை விக்ரகம், புலி விக்ரகம், வலம்புரிச் சங்கு, பூர்ண, புஷ்கல தேவியர் உருவம், பூக்கள் வைப்பதற்கான தங்கத் தட்டு, நவரத்தின மோதிரம், சரப்பளி, மாலை, நவரத்தின மாலை, தங்க இதழ்களால் ஆன வில்வ மாலை ஆகியவற்றுடன் தங்கத்தால் ஆன எருக்கம் பூ மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.
பெருமைமிகு பல மாலைகள் இருக்க, எருக்கம் பூமாலைக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்? எளிய பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை உணர்த்துவதற்குத்தான் ஐயப்பன் எருக்கம் பூவையும் தன்னுடன் வைத்துள்ளார்.
சூரிய பகவானுக்கும் எருக்கம் பூவுக்கும் என்ன சம்பந்தம்?
சூரியனுக்கும் எருக்கம் மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ரதசப்தமி அன்று ஏழு எருக்க இலைகளுடன் மஞ்சள் பொடி, பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவற்றை சேர்த்து தலையில், இரு தோள்களில், இரு பாதங்களில் வைத்துக்கொண்டு சூரிய திசை நோக்கி கங்கையை நினைத்துக்கொண்டு குளிக்க வேண்டும். இதனால் ஏழு ஜன்மங்களின் பாவம் அகல்வதுடன் சூரிய பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெருமைமிகு வெள்ளெருக்குதான் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் தல விருட்சமாக விளங்குகிறது.