கடவுள் மீது பக்தி வைப்பது என்பது அனைவருக்குமே பொதுவானதாகும். அதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பேதமில்லை. ‘நான் மட்டுமே கடவுள் மீது அதீத பக்தி வைத்திருக்கிறேன்’ என்ற ஆணவம் எப்போதும் இருக்கக்கூடாது. இதை உணர்த்தும் வகையில் ஸ்ரீ கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடலை இந்தப் பதிவில் காண்போம்.
திரௌபதிக்கு, இந்த உலகத்திலேயே கிருஷ்ணர் மீது அதிக பக்தி வைத்திருப்பது தான் மட்டும்தான் என்ற ஆணவம் இருந்தது. ஆனால், பக்தியில் ஆணவம் இருக்கக் கூடாது இல்லையா? இதை திரௌபதிக்கு உணர்த்த நினைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பாண்டவர்களின் வனவாசத்தின்போது, திரௌபதி காட்டில் ஒரு குடிலில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அங்கே திரௌபதியைக் காண கிருஷ்ணர் வருகிறார். கிருஷ்ணரை பார்த்ததும் திரௌபதிக்கு மிகவும் சந்தோஷம். தன்னைப் பார்ப்பதற்காக கிருஷ்ணர் இவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்கிறார் என்று.
உடனே திரௌபதி கிருஷ்ணரிடம், “இவ்வளவு தூரம் நடந்து என்னைக் காண வந்திருக்கிறீர்கள். உங்கள் கால்கள் வலிக்குமே. கொஞ்ச நேரம் இந்தக் குடிலில் இருங்கள். நான் சுடு தண்ணீரை காய வைத்து எடுத்து வருகிறேன்” என்று திரௌபதியும், பீமனும் வெளியே வந்து ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்துக் காய வைக்கிறார்கள். வெகு நேரமாகியும் தண்ணீர் சூடாகவில்லை. உடனே கிருஷ்ணர் அந்த இடத்திற்கு வந்து, “வெந்நீர் தயாராகிவிட்டதா?” என்று கேட்கிறார். உடனே திரௌபதி நடந்த அனைத்தையும் கிருஷ்ணரிடம் கூறுகிறார்.
உடனே கிருஷ்ணர் பீமனிடம், “அந்தப் பாத்திரத்தில் இருக்கும் நீரை கீழே ஊற்று” என்று கூறுகிறார். பீமனும் அவ்வாறே செய்கிறார். அப்போது அந்தப் பாத்திரத்தில் இருந்து ஒரு தவளை குதித்து தப்பித்து ஓடுகிறது.
அப்போது கிருஷ்ணர் கூறுகிறார், “இவ்வளவு நேரம் இந்தத் தவளை தான் இறக்கக்கூடாது என்று என்னை நோக்கி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தது. என்னை பிரார்த்தனை செய்பவர்களை காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதனால்தான் இவ்வளவு நேரம் தண்ணீர் சூடாகாமல் இருந்தது” என்று கூறுகிறார். அப்போதுதான் திரௌபதி நினைத்துப் பார்க்கிறார், ஒரு தவளையின் பக்திக்கு எவ்வளவு தூரம் வலிமையிருக்கிறது. இவ்வளவு நாளாக நான்தான் கிருஷ்ணரின் மீது அதீத பக்தி வைத்திருப்பதாக ஆணவத்திலிருந்து விட்டதாக நினைத்துப் பார்க்கிறார்.
உடனே கிருஷ்ணர் திரௌபதியிடம் கூறுகிறார், “பக்தி யார் வைக்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. பக்தி எல்லோருக்கும் சமமானதே! பக்தியில் ஆணவம் இருக்கக்கூடாது. தன்னால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் அவனே என்று பூரண சரணாகதி, பூரண நம்பிக்கையே பக்தியாகும்’ என்று கிருஷ்ணர் கூறினார்.