Do you know Lord Nandi who imprisoned Garuda in his nose?
Do you know Lord Nandi who imprisoned Garuda in his nose? https://www.alayathuligal.com
ஆன்மிகம்

கருடனை மூக்கில் சிறை வைத்த நந்தி தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ருத்ர கோடீஸ்வரர் ஆலயம். ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் உள்ள இக்கோயில் சுமார் 2600 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலய ஈசன் ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் சுயம்பு மூர்த்தமாவார். அம்பாள் ஸ்ரீ பெண்ணின் நல்லாள் என்கிற அபிராமி. காளி தேவியின் உக்கிரத்தை தணித்து சாந்தப்படுத்தியதால் அம்பாள் சற்று சாய்ந்த நிலையில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள்.

அம்பாள் சன்னிதியின் எதிர்புறம் உள்ள ஜன்னலின் வழியாக காளி தேவிக்கு தீபம் காட்டப்படுகிறது. ஜன்னல் இருக்கும் திசையில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் காளி கோயில் ஒன்று உள்ளது. இந்த ஜன்னல் வழியாக வரும் காற்றை காளி தேவியாக நினைத்து வணங்குகின்றனர்.

கோடி ருத்ரர்கள் ஈசனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்ற தலம் இது. கருடனின் ஆணவத்தை நந்தி தேவர் தனது மூச்சுக்காற்றால் அடக்கியதால் இத்தலம் நந்தி தேவருக்கு முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு நந்தி தேவர் தனது தேவி சுயபிரபையுடன் காட்சி தருகிறார்.

சிவபெருமானை தரிசிக்க கருடன் மீது வந்த திருமால் அங்கு காவலில் இருந்த நந்தியிடம் அனுமதி பெற்று சிவனை தரிசிக்க உள்ளே சென்றார். ஆனால், கருடனோ ‘நீயோ வேலைக்காரன். உன் அனுமதி எனக்கு எதற்கு?’ என்று கூற, கோபம் கொண்ட நந்தி தனது மூச்சுக்காற்றால் கருடனை நீண்ட தூரத்திற்கு தூக்கி எறிந்தார். பிறகு அதே வேகத்தில் மூச்சை உள் இழுத்து கருடனை தனது மூக்கினுள் சிறை வைத்தார்.

பிறகு ஈசன் கூறியதால் கருடனை விடுவித்த நந்தி, சிவ நிந்தனைக்கு ஆளாக நேரிட்டதை உணர்ந்து இங்கு வந்து (ருத்ர கோடீஸ்வரர் ஆலயம்) வழிபட்டார் எனவும் அந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இன்றும் இத்தல வாசலில் உள்ள நந்தி முன்பாக மண்ணில் புதைந்த நிலையில் கருடனின் சிற்பம் உள்ளது.

இக்கோயிலில் ஒன்பது முக வில்வ விருட்சமும், பத்ராட்சம் என்ற ருத்ராட்ச மர வகையைச் சேர்ந்த மரமும் உள்ளன. இம்மரத்தில் பூ மட்டும் பூப்பதாகவும் காய்கள் காய்ப்பதில்லை என்றும் கூறுகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள ருத்ர கோடீஸ்வரர், வேதகிரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர் ஆகிய மூன்று கோயில்களிலும் வாழை மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

தல வரலாற்றுப்படி அசுரர்களை அழிப்பதற்காக இறைவனின் திருமேனியிலிருந்து பலம் பொருந்திய கோடி ருத்ரர்கள் தோன்றினார்கள். அவர்கள் மிகுந்த தவ பலம் பெற்றவர்களாக இருந்தனர். 32 வகையான ஆயுதங்களோடும், ஆயிரம் யானை பலம் உள்ளவர்களாகவும் ஈசனின் பாதம் பணிந்து அவரின் கட்டளையை ஏற்று அசுரர்களை அடியோடு அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்திற்கு வந்து தவமிருந்து பூஜித்து பாவம் நீங்கப் பெற்றனர். அதனால் இத்தலம் கோடிருத்ர தலம் என்றும், ஈஸ்வரன் ருத்ர கோடீஸ்வரர் எனவும், அம்பிகை ருத்ர கோடீஸ்வரி என்றும், தீர்த்தம் ருத்ர கோடி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT