கடலில் மூழ்கியிருந்த முருகன் சிலையும், நடராஜர் சிலையும் எங்கிருக்கிறது என்பதை தெரியப்படுத்த முருகப்பெருமானே கனவில் வந்து தெரியப்படுத்திய கதை தெரியுமா? சக்தி வாய்ந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1648ல் திருச்செந்தூர் முருகன் கோயில் டச்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அச்சமயம் இக்கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிக்குக் கீழே இருக்கும் பகுதி என்பதால் டச்சுக்காரர்களை அங்கிருந்து அவர் வெளியேறச் சொன்னார்.
ஆனால், டச்சுக்காரர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டனர். இதனால் திருமலை நாயக்கருக்கும், டச்சுக்காரர்களுக்கும் பெரிய போர் நடைபெற்றது. இதனால் பயந்துபோன டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து போவதற்கு முன்பு இக்கோயிலில் உள்ள மூலவர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் தங்களோடு கொண்டு சென்று விட்டனர்.
டச்சுக்காரர்கள் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது பயங்கரமான மழையும், புயலும் ஏற்படுகிறது. இதனால் கப்பலே கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படுகிறது. கடவுள் சிலையை திருடிக்கொண்டு வந்ததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பயந்து போன டச்சுக்காரர்கள், முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் கடலில் தூக்கிப் போட்டு விட்டனர். சிலையை கடலில் போட்ட அடுத்த நிமிடம் மழையும், புயலும் நின்று விட்டது. பிறகு டச்சுக்காரர்கள் கப்பலில் தங்கள் நாடு நோக்கி சென்று விடுகின்றனர்.
சில வருடங்களுக்குப் பிறகு திருமலை நாயக்கருடைய பிரதிநிதியான வடமலையப்பன் பிள்ளையின் கனவில் தோன்றிய முருகன், தன்னுடைய சிலை கடலுக்குள் இருப்பதாகவும், அதற்கு மேல் ஒரு எலுமிச்சைப்பழம் மிதப்பதாகவும், அதற்கு மேல் வானத்தில் கருடன் வட்டமிடுவதாகவும் கூறினார்.
வடமலையப்பன் உள்ளூர் மக்களுடன் கடலுக்குச் செல்கிறார். அங்கே கடலில் எலுமிச்சைப்பழம் மிதப்பதையும், அதற்கு மேல் வானில் கருடன் வட்டமிடுவதையும் கண்டு அங்கேதான் முருகப்பெருமானின் சிலை இருப்பதாகக்கூறி அங்கே குதித்து தேடச் சொல்கிறார். கடலில் குதித்தவர்கள் முருகன், நடராஜர் சிலைகளை கடலில் இருந்து மேலே கொண்டு வந்து படகில் ஏற்றிச் சென்றனர்.
பல வருடங்கள் முருகப்பெருமானின் சிலை கடலில் இருந்ததால், உப்புத்தன்மையால் சிலையில் அரிப்பு ஏற்பட்டு அதனால் உருவான சேதத்தை இன்றும் சிலையில் காணலாம். கி.பி. 1653ம் ஆண்டில் நடராஜர் சிலையையும், முருகப்பெருமான் சிலையையும் கோயிலுக்குள் கொண்டு வந்து கருவறையில் சேர்த்துக் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.