Agni Natchathiram https://vyasabharatham.blogspot.com
ஆன்மிகம்

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

முனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர்தான் காண்டவ வனம். இந்திரனின் பாதுகாப்பில் இருந்த அந்த வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழை பெய்யச் செய்தான் இந்திரன். யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும்போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து, “உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால்தான் உதவ முடியும். இந்த வனத்தில் என் பசிப்பணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன், “அக்னி தேவனே, ஏன் இந்த வேடம். நேரடியாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று சொன்னதும், தனது வேடத்தை கலைத்த அக்னி தேவன், “உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் படி அளக்கும் பரமாத்மாவே, தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக நூற்றாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினர் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கிவிட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இந்த வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும். நான் இவ்வனத்திற்கு பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன். ஆகவே, நான் இந்தக் காட்டை எரிக்கும்போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள்” என்று கேட்டார் அக்னி பகவான்.

இதைக் கேட்டு அர்ஜுனன், “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால், இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு தூணியும் அம்புகளும் வில்லும் தேவை” என்றான்.

உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில், அம்புகள் மற்றும் அம்பறாத் தூணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம், “உனது பசிப்பிணியை தீர்த்துக் கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான்.

இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்தரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன், அவ்வனத்தில் மழை பொழியாமல் இருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னி தேவன் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்து வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டார். அடுத்து வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடம் விடை பெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT