திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கோடகநல்லூரில் அமைந்துள்ளது ஸ்ரீ கயிலாயநாதர் ஆலயம். நவக்கிரகங்களில் செவ்வாய் தலமாக இந்த திருக்கோயில் வழங்குகிறது. கார்கோடக க்ஷேத்ரம் என்றும் கோடகனூர் என்னும் இந்தத் திருத்தலம் அழைக்கப்படுகிறது. நவ கயிலாய தலங்களில் மூன்றாவது கயிலாய திருத்தலமாக கோடகநல்லூர் ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் விளங்குகிறது.
ஆதிகாலத்தில் முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது குமாரர் யாகம் நடத்தத் தேவையான சமித்துகளை சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக காட்டில் வேட்டையாட வந்த பரீட்சித் மகாராஜாவின் முனிவர் யாகம் செய்யும் வழியாக வந்துள்ளார். அரச குமாரன் முனிவரை அழைக்க, முனிவர் கண்ணும் கருத்துமாக தவத்திலேயே குறியாக இருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ராஜகுமாரன், இறந்து கிடந்த பாம்பை முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதை பார்த்த முனி குமாரன் இச்செயலை செய்தவர் அரச குமாரன்தான் என்று தனது ஞான திருஷ்டியில் அறிந்து ராஜகுமாரனுக்கு என் தந்தையின் கழுத்தில் நீர் பாம்பை போட்டதால் உன் தந்தையும் பாம்பு தீண்டி இறப்பார் என்று சாபமிட்டார். இதை அறிந்த பரீட்சித் மகாராஜா தனது ஆஸ்தான ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை நன்கு ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். ஜோதிடர்களும் அவருக்கு சர்பத்தினால் கண்டம் உண்டாகும் என்பதனை தெரிவித்தனர்.
பரீட்சித் மகாராஜாவும் தனது உயிரை பாம்பிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மணி மண்டபம் கட்டி வசிக்கத் துவங்கினார். விதிவசத்தால் கார்கோடகன் என்ற பாம்பானது மன்னர் சாப்பிடும் பழத்தில் சிறு புழுவாக உருமாறி புகுந்து பரீட்சித் மகாராஜாவை தீண்டியது. மகாராஜா இறந்து போனார்.
கார்கோடகம் பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது சூதாட்டத்தில் தனது சொத்து, சுகங்களை இழந்த நள மகாராஜா சோகமாக அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். தீயில் மாட்டிக் கொண்டிருந்த கார்க்கோடகன் சர்பத்தை போராடி காப்பாற்றினார்.
பரீட்சித் மகாராஜாவை தீண்டிய தோஷத்திற்கு சாப விமோசனம் வேண்டி திருமாலும் கார்க்கோடகன் முன் தோன்றி இந்த ஊருக்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என கூறினார். அதன்படி சிவனை வேண்டிய கார்க்கோடகன் சர்ப்பம் முக்தி அடைந்தது. கார்கோடகன் சர்ப்பம் முக்தி அடைந்ததால் கார்கோடகநல்லூர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இந்த திருக்கோயிலில் சுவாமி கயிலாசநாதர் ஆகும். அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். கோடகநல்லூரில் வடபுறமாக ஸ்ரீ கயிலாயநாதர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை கிடையாது. ஜாதகத்தில் செவ்வாய் தசை நடைபெறும்போது இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது. இந்தக் கோயிலின் தல விருட்சம் வில்வமரம். இந்த கயிலாயநாதர் கோயிலில் அங்காரகன் சிவனை வழிபட்டதால் இது செவ்வாய் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள் 58 விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.