Do you know why you shouldn't blow fire out with your mouth? https://www.hirunews.lk/sooriyanfmnews
ஆன்மிகம்

தீயை ஏன் வாயால் ஊதியணைக்கக் கூடாது தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

நான் சிறுமியாக இருந்தபொழுது எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் நெல் அவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த அம்மா வீட்டு வேலை செய்ய உள்ளே சென்றபொழுது, அவரின் மகள் பாலிஸ்டர் பிராக் போட்டுக்கொண்டு நெல் கொப்பரையின் கீழே இருக்கும் தீயை தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பொழுது புகைந்த அடுப்பை ஊத குனியும்பொழுது, அவள் உடையில் தீப்பற்றியது. அவள் அப்பொழுதும்  அழுது புரளாமல் வீட்டில் அம்மா, அப்பா அடிப்பாரகள் என்று பயந்துக் கொண்டு அப்படியே இருந்துவிட்டாள். அதனைப் பார்த்த நாங்கள் ஓடிச் சென்று கோணியை அவள் மீது சுற்றி  தீயை அணைத்து அவளை காப்பாற்றினோம்.

வீட்டில் தீபம் ஏற்றினால், அதற்கு விடை கொடுக்கும்பொழுது அதை எண்ணெயில் அமிழ்த்தி விடவோ அல்லது பூக்கொண்டு அமிழ்த்தவோ கூறுவார்கள். மேலும். சிறு குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் நெருப்பு பக்கம் செல்லவோ, எந்த வகையான விளக்கையும் தொடவோ, அதை ஊதி அணைக்கவோ அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் இன்று வரையில் நடைமுறையில் உள்ள வழக்கம். சிறு குழந்தைகள் இதை புரிந்துகொள்ளாமல் அழுவதும் உண்டு.

மனிதன் தீயைக் கண்டுபிடித்திருக்காவிட்டால் மனித சரித்திரம் வேறொன்றாக ஆகி இருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. தெய்வ சன்னிதி நிறைந்த பூமியின் அற்புதப் படைப்பாக யவன புராணம் தீயைச் சிறப்பிக்கின்றது. அது சிருஷ்டியும் சங்காரமுமாக விளங்குகின்றது.

நெருப்பில் உணவை வேக வைத்து அதன் ருசியறிந்த மனிதனுக்கு இப்போது உணவு என்றாலே வேக வைத்த உணவுதான். உணவு சமைக்க மனிதர் நெருப்பை வீட்டுக்குள் பாதுகாத்து வைக்க அடுப்புகள் அமைத்தனர். தேவைக்கேற்றபடி தீயை கூட்டியும் குறைத்தும் வைத்து பயன்படுத்தி வந்தனர். தீயை அணையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆதி மனிதனுக்கு இருந்தது. அன்றும் நெருப்பை ஊதி  பெருக்காமலும், ஊதி அணைக்காமலும் வேறு வழிகள் கடைபிடித்து இருந்தனர்.

நெருப்பை தேவனாகக் கருதி இருந்ததனால் அதை எச்சில் நிறைந்த அசுத்தமான வாயால் ஊதிப் பெருக்குவதும், ஊதி அணைத்தலும் கூடாது என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். குனிந்திருந்து கவனம் இல்லாமல் தீயை ஊதிப் பெருக்க முயற்சி செய்யும்போது தலைமுடி, முகம், ஆடைகள் முதலியவற்றில் தீப்பிடிக்க வாய்ப்புகள் ஏராளம். இதே விபத்து தீயை ஊதி அணைக்கும்போதும் உண்டாகலாம். அறிவுரையாக இதைத் திரும்பத் திரும்பக் கூறி முன்னோர்கள் பின் தலைமுறைகளை விபத்தில் இருந்து காப்பாற்றி வருகின்றனர்.

ஆதலால் அடுப்புகளில் வேலை செய்யும்போது உடுத்தியிருக்கும் எந்த வகையான துணியின் நுனியைப் பிடித்து பாத்திரத்தை இறக்குவது, தீபங்களை வாயால் ஊதி அணைப்பது மற்றும் கொசுவுக்கு மூட்டம் போட நெருப்பை பற்ற வைக்கும்போதும், சாம்பிராணி தூபம், கற்பூரம் ஏற்றும்போதும் கவனமாக இருந்து விபத்தை தவிர்ப்போம். நம் முன்னோர்கள் சொன்னதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்வோமாக!

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT