kaviri kadaimugam 
ஆன்மிகம்

இடர்களைக் களையும் கடைமுகம்!

மாலதி சந்திரசேகரன்

துலா மாதம் என்று கூறப்படும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தேவ நதியாக இருந்த கங்கையை பகீரதன் தனது தவ வலிமையால் பூமிக்குக் கொண்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கங்கா மாதாவை பூமிக்கு வரும்படி வேண்டிக்கொண்டபொழுது, கங்கா மாதாவானவள், "எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு எல்லோரும் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் பூமிக்கு வரமாட்டேன்" என்று தயக்கத்துடன் கூறினாளாம். அப்பொழுது பகீரதன், "பாவம் செய்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. ஏராளமான மகான்களும்தானே நீராடுவார்கள். அதன் மூலம் எப்பொழுதுமே நீங்கள் பரிசுத்தமாக இருப்பீர்கள்" என்று பதில் கூறினாராம். அதன் பின்னரே கங்கா தேவி பூலோகத்திற்கு வந்தாள் என்று கூறப்படுகிறது.

வடக்கு திசை பக்கம் மட்டுமே தவழ்ந்து கொண்டிருந்த கங்கா தேவி, தென்திசையில் இருக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு ஐப்பசி மாதத்தில் மட்டும் காவிரியின் துலா கட்டத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

ஐப்பசி மாதம் கடைசி நாளன்று நடைபெறுவது கடை முழுக்கு (கடைமுகம்) என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பிற நாட்களை விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பைத் தரும். இந்நன்னாள் நவம்பர் மாதம் 16ம் தேதி வியாழக்கிழமை அன்று அமைகிறது.

கடைமுழுக்குக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை நவம்பர் 17ம் தேதி, முடவன் முழுக்கு என்று கூறப்படுகிறது. இது கார்த்திகை முதல் நாள் அன்று அமைகிறது. அது என்ன முடவன் முழுக்கு? அதுவும் ஐப்பசி முடிந்த பிறகு கார்த்திகை முதல் நாளில் என்று தோன்றுகிறது அல்லவா?

ஒரு சமயம் மாற்றுத்திறனாளி ஒருவர், காவிரி துலா கட்டத்தில் நீராட தனது வீட்டில் இருந்து புறப்பட்டாராம். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து, கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டதாம். தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திய அவர், மகேசனை நினைத்து தியானித்தாராம். அப்பொழுது அங்கு ஒரு அசரீரி கேட்டதாம். "நீ காலம் தாழ்த்தி வந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். இன்றே இந்த காவிரி கட்டத்தில் நீராடு. உன்னுடைய பாவங்கள் விலகும். உனக்கும் முக்தி கிடைக்கும்" என்கிற வார்த்தைகளைக் கேட்டவுடன், மாற்றுத்திறனாளிக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானதாம். சிவபெருமானுக்கும், கங்கா தேவிக்கும் நன்றியைக் கூறிவிட்டு, அன்றைய தினம் காவிரி துலா கட்டத்தில் நீராடி, தனது ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டாராம்.

பொதுவாக கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் விலகும் என்று கூறப்படுகிறது. ஏழு புண்ணிய நதிகளில், காவிரி நதியில் மட்டுமே, ஐப்பசி மாதத்தில் மற்ற நதிகள் எல்லாம் எழுந்தருளி ஒன்றுகூடுகின்றன என்று கூறப்படுகிறது.

புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்ய சில விதிமுறைகள் உண்டு. அதாவது, நீரில் இறங்குவதற்கு முன் இரண்டு கைகளாலும் நீரினை விலக்கிக்கொள்ள வேண்டும். பிறகு சிறிது நீரை எடுத்து சிரசில் மூன்று முறை தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் நதியில் இறங்க வேண்டும். இறங்கிய பின்பு இரண்டு கைகளையும் குவித்து, கிண்ணம் போல சேர்த்து வைத்துக்கொண்டு, நீர் நிலையில் இருக்கும் ஜலத்தை எடுத்து, சூரிய பகவானைப் பார்த்து, சங்கல்பம் செய்து கொண்டு அர்க்யம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு மூன்று முறைகள் செய்து, பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். பிறகு நீராட வேண்டும். புண்ணிய நீர் நிலைகளை எந்த நிலையிலும் அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஐப்பசி மாதத்தில் எல்லோராலும் எல்லா நாட்களிலும் காவிரியில் ஸ்நானம் செய்ய முடியாது. கடைமுகம் அன்றாவது இந்த பொன்னி நதியில் நீராடுவோம். செய்த பாவங்களைத் தொலைத்து, புண்ணியம் சேர்த்துக் கொள்வோம்.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT