Koyil Koshdam Patri Therinchukkalam Vaanga 
ஆன்மிகம்

கோயில் கோஷ்டம் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

ஆர்.வி.பதி

கோயிலின் கருவறையைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் அமைந்திருக்கும் வெளிப்புறச் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள சிறுமாடம் போன்ற அமைப்பே கோஷ்டமாகும். தமிழில் இது, ‘கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. கருவறை வெளிச்சுவர்களில் மாடம் போன்ற அமைப்புகளில் ஆகம முறைப்படி சில இறையுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த இறையுருவங்கள் பெரும்பாலும் உள்ளிருக்கும் தெய்வத்தின் பிற வடிவங்களாகவே இருக்கும்.

சிவாலயம் என்றால் தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தி, கருவறைக்கு நேர்பின்புறமாக லிங்கோத்பவர், வடக்கு திசையில் துர்கை முதலான தெய்வங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பெருமாள் கோயில் என்றால் நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர் முதலான தெய்வங்கள் கோஷ்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர்.

தொடக்கக் காலங்களில் மூன்று திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கோஷ்ட தெய்வங்களை, அதாவது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை மட்டுமே அமைப்பது வழக்கமாக இருந்தது. பிற்காலத்தில் தெற்கு திசையில் விநாயகரும், வடக்கு திசையில் பிரம்மாவும் சேர்க்கப்பட்டு ஐந்து கோஷ்டங்கள் அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

தட்சிணாமூர்த்தி

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி: தட்சிணம் என்றால் தெற்கு. ஆலமரத்தின் கீழ் அமர்ந்தவாறு தெற்கு திசை நோக்கிய கோஷ்டத்தில் காணப்படுவது தட்சிணாமூர்த்தியின் வடிவமாகும். தட்சிணாமூர்த்தி நான்கு கரங்களுடன் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தியின் ஒரு மேல் கையில் ருத்திராட்ச மாலையையும் பாம்பையும், மற்றொரு மேல் கையில் நெருப்பையும் கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப்புல் மற்றும் ஓலைச்சுவடியினை வைத்துள்ளார். கீழ் வலது கையில் ஞான முத்திரையை அருளுகிறார். இடது கால் மடித்த நிலையிலும், வலதுகால் முயலகன் என்ற உருவத்தை மிதித்த நிலையில் காட்சியளிக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தின் குறியீடு என்பர். குருவாக அமைந்து அறியாமை மற்றும் ஆணவத்தை காலடியில் மிதித்தவாறு யோக நிலையிலோ அல்லது முனிவர்களுக்கு போதிக்கும் நிலையிலோ அமைந்த சிவபெருமானின் வடிவமே தட்சிணாமூர்த்தியாகும். தட்சிணாமூர்த்தி தென்திசைக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ லிங்கோத்பவர்: கருவறையின் நேர் பின்புறம் அமைந்துள்ள கோஷ்டத்தில் மேற்கு திசை நோக்கி காட்சி தருபவர் லிங்கோத்பவர். சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான இதில் சிவபெருமானின் அடியில் பன்றி வடிவத்தில் திருமாலும். முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர்.

லிங்கோத்பவர்

ஒரு சமயம் பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற எண்ண தோன்றியது. அப்போது சிவபெருமான் தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காண்பவரே பெரியவர் என்று கூறினார். உடனே சிவபெருமானின் திருவடியைக் காண திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்னப்பறவையின் வடிவெடுத்து சிவபெருமானின் முடியைக் காண பறந்து சென்றார். பல்லாண்டுகள் தேடியும் சிவபெருமானின் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப, பிரம்மனோ தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாகக் கூற பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது. இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தோன்றியதே லிங்கோத்பவர் வடிவம். மும்மூர்த்திகளின் ஒருசேர அருளும் வடிவில் அமைந்துள்ள லிங்கோத்பவரை வழிபட்டு வருவது மிகவும் நன்மை பயக்கும்.

ஸ்ரீ துர்கை: துர்கை மகிஷன் என்ற அசுரனை அழிக்க அவதரித்தவள். தமிழில் கொற்றவை என்று அழைக்கப்படுகிறாள். இவள் கைகளில் சக்ராயுதம், சங்கு, சூலம், வில், மணி போன்றவற்றுடன் காட்சி தருவாள்.

துர்கை

துர்கை எருமைத் தலையுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருவாள். கையில் சங்கு, சக்கரம் ஏந்தியிருந்தால் அவள் விஷ்ணுதுர்கை என்று அழைக்கப்படுகிறாள். சில ஆலயங்களில் அஷ்டபுஜ துர்கையினையும் காணலாம். இரக்க குணமுடையவளாய்த் திகழும் துர்கையை வழிபட அவள் நமக்கு இரக்க குணத்தை அருளுவாள்.

சிவாலயங்களில் உள்ள கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்கை அல்லது விஷ்ணுதுர்கை இறை உருவங்கள் காணப்படும். பிரம்மன் திருவுருவம் அமைந்துள்ள பகுதிக்கு கீழ்ப்பகுதியில் அபிஷேக நீர் வெளியேறும் பாதையான கோமுகியும் அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் அமைந்திருக்கும். சிவாலயங்களில் உள்ள கோஷ்டத்திற்கு. ‘சிவாலய கருவறைக் கோஷ்டம்’ என்று பெயர்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT