முருகப்பெருமான் அருளாட்சி செய்யும் திருத்தலங்களான ஆறுபடை வீடுகளுக்கு சற்றும் குறைவில்லாத பெருமையைக் கொண்டது சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர்திருக்கோயில். செங்கோட கவுண்டர், அருள்வாக்கு பெண் சித்தர் பாவாயம்மாள் ஆகியோரால் கட்டப்பட்டது இந்தக் கோயில்.
1945ம் ஆண்டு இந்த இடத்திற்கு வீரமாதுருபுரி என்ற பெயரிட்டு சிறிய கோயில் ஒன்றை ஏற்படுத்திய பாவாய் அம்மாள் கைகளில் தண்டம், திருவோடு ஏந்தி ருத்ராட்சம் தரித்து முள்பாத குரடில் நின்று அருள்வாக்கு கூறி பக்தர்களின் குறைகளைப் போக்கியுள்ளார்.
முருகப்பெருமான் திருவுளப்படி 1960ல் காவடி பழனியாண்டவர் கோயில் கட்டும் பணி தொடங்கி, பழனியில் உள்ள கருமலையிலிருந்து கல் எடுத்து வந்து மூலவர் காவடி பழனி ஆண்டவர் திருச்சிலை வடிவமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, மூலவர் காவடி பழனியாண்டவரின் விக்கிரகத்தை துடைக்கத் துடைக்க வியர்வை பெருக்கெடுத்ததை அப்போது அடியார்கள் கண்டு ஆனந்தம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மும்மூர்த்திகள் அருளும் தலமாக விளங்கும் இந்தக் கோயில் கருவறையில் எண்கோணம் அமைத்து அதன் மேல் கருவறை கோபுரம், ஏழு நிலை ராஜகோபுரம் எண்பது அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோயிலின் மகாமண்டபத்தில் பஞ்சபூதங்களை உணர்த்தும் தத்துவத்தில் ஐந்து வாசல்களும் அர்த்தமண்டபத்தில் எங்கும் காண முடியாத 36 முகம் அமைந்த வெள்ளியிலான பிரம்மாண்ட சண்முக சக்கரமும் உள்ளது விசேஷம்.
இக்கோயிலில் 12 ராசிகளுக்குரிய அபூர்வமான அஷ்ட லிங்கங்கள் உள்ளன. மேலும், ஸ்படிகம், செம்பு, பித்தளை, வெண்கலம், மரகதம், பாதரசம், வெள்ளி, தங்கம் போன்றவற்றால் ஆன இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றும் 100 கிலோ எடை உடையதாக உள்ளது சிறப்பு. இந்த அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 12 ராசிகளுக்குரிய சிவலிங்கங்கள் இருப்பதால் இங்கு 60வது மற்றும் 70, 80ம் வயது திருமண விழாக்களை பக்தர்கள் இங்கு நடத்துகிறார்கள்.
1961 முதல் ஏழு மகா கும்பாபிஷேகங்கள் இக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு 108 பசுக்களைக் கொண்டு கோமாதா பூஜையும் 117 ஹோம குண்டங்களுடன் 1008 கலசங்களுடன் 150 சிவாச்சாரியார்களால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது சேலத்திலேயே இதுவரை எந்தக் கோயிலிலும் நடைபெறாத சிறப்பு என்கின்றனர். உலகிலேயே எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் 108 லட்சுமி சிலைகள் வைத்து இக்கோயிலில் வழிபடப்படுகிறது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று புது பாத்திரத்தில் பஞ்சாமிர்தம் தயார் செய்து வேடு கட்டி வைத்து விடுகிறார்கள். அதன் பின்னர் அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத்தன்று அதை எடுத்து பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், ஒரு ஆண்டு ஆனாலும் இந்த பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது அதிசயமாகக் கருதப்படுகிறது. இது மட்டுமல்ல, இன்னும்பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு பக்தர்களை சிலிர்க்க வைக்கிறது சேலத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் திருக்கோயில்.