Panchangam 
ஆன்மிகம்

துல்லியமாகக் கணிக்கப்பெற்ற தகவல்களை முன்கூட்டியே அறிவிக்கும் போஸ்ட் டேடட் டைரி (Post Dated Diary)!

பிரபு சங்கர்

அடுத்த ஆண்டுக்கான (2025) காலண்டர் இப்போதே விற்பனைக்கு வந்து விட்டது.

பொதுவாக டயரி என்றால் நடந்த சம்பவங்கள், சந்தித்த நபர்கள், மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை தொகுக்கப்பட்ட ஓர் ஆவணம் என்றே சொல்லலாம். ஆனால் காலண்டர் என்பது வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லும் போஸ்ட் டேடட் டைரி! (Post Dated Diary)

இந்த விஷயத்தில் நம் பஞ்சாங்கத்தை விஞ்சிய எதிர்கால டயரி எதுவுமே கிடையாது. என்றைக்கு எந்த நேரத்திலிருந்து அமாவாசை, பௌர்ணமி, எந்தத் தேதியிலிருந்து கோடை, எப்போதிலிருந்து மழை, நாட்டின் எந்தப் பகுதியில் பெருமழை, புயல், பூகம்பம், என்று இயற்கையின் சீறும், எந்தவகை நோய் எங்கெங்கெல்லாம் பரவும் என்பன போன்ற, வெகு துல்லியமாகக் கணிக்கப்பெற்ற பல தகவல்களை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கிறது நம் பஞ்சாங்கம்!

இதில் வியப்பு என்னவென்றால், இந்தத் தகவல்கள் எதுவும் அதற்கு முந்தின வருடம்தான் கணித்து எழுதப்பட்டவை அல்ல; எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே கிரக சஞ்சார அமைப்புகளைக் கொண்டு, இந்த நாள் இப்படித்தான் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கும் வான சாஸ்திர ஞானம் அது! இந்த ஆராய்ச்சியை அந்தந்த வருடத்திற்காகத் தனியே பிரித்தெடுத்து, தொகுத்து, அச்சிட்டு பஞ்சாங்கமாகக் கொடுக்கிறார்கள்!

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இறைவன் முருகனை தரிசிக்க இந்த ஆண்டுகள் பெயரால் அமைந்த 60 படிகளை ஏறிக் கடந்து செல்ல வேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31ம் ஆண்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. அதாவது 2024ம் ஆண்டு என்பது, 2055ம் திருவள்ளுவர் ஆண்டாகும்.

சரி, ஆங்கில காலண்டரின் ஆரம்பம், அதைப் பற்றிய அந்நாளைய தகவல்கள் என்னவென்று பார்க்கலாமா?

  • ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, அரசாங்க ஊழியர் ஒருவர் தெருத்தெருவாக வந்து, அன்று மாதப் பிறப்பு நாள் என்று அறிவித்த வழக்கம் ரோமாபுரியில் இருந்தது. இந்த வழக்கத்தை ‘கனோர்’ என்று அழைத்தார்கள். இதுவே நாளடைவில் காலண்டர் என்றானது.

  • இப்போது ஆங்கில வருடத்தின் இரண்டாவது மாதமாக விளங்கும் பிப்ரவரி, கி.மு. 713ம் ஆண்டு, ரோமானிய காலண்டரில் 12வது மாதமாக இடம் பெற்றிருந்தது. ஆனால், கி.மு. 450 ஆண்டில், பிப்ரவரி, முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது.

  • ஒவ்வொரு புத்தாண்டு துவங்கும் முன்பும் நள்ளிரவில் 12ஆவது விநாடியில் திராட்சைப் பழம் அருந்துகிறார்கள், ஸ்பெயின் நாட்டு மக்கள். இந்த வழக்கம் அவர்களுடைய பண்டைய கால மரபு. அப்படி சாப்பிடுபவர்களுடைய வீட்டில் அந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டக் காற்று வீசும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

  • ரோமன்- ஜூலியன் காலண்டரில், ஏப்ரல் மாதம்தான் வருடத்தின் முதல் மாதமாக இருந்தது. கிரிகோரியன் காலண்டர் முறைக்கு மாறிய பிறகும் அநேக பழமைவாதிகள் ஏப்ரலே வருடத்தின் முதல் மாதம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். சட்டத்தால் இவர்களைத் திருத்த முடியாது என்பதை உணர்ந்த அரசர், ‘ஏப்ரல் முதல் தேதியை வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடுபவர்கள் எல்லோரும் முட்டாள்கள்,‘ என்று அறிவித்தார். ஏப்ரல் ஃபூல் நாளாக அந்த மாதத்தின் முதல் தேதி அமைந்தது இப்படித்தான்!

  • பொதுவாகவே பிப்ரவரி மாதத்துக்கு சில தனிச் சிறப்புகள் உண்டு. பிற மாதங்களைப் போல இல்லாமல் இதற்கு 28 நாட்கள்தான். 365 ¼ நாட்கள் கொண்ட வருடத்திலிருந்து கால் நாளை சேர்த்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரிக்கு ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் என்று தீர்மானித்தார்கள். இவ்வாறு சேர்த்ததால் அது லீப் வருடம் என்று பெயர் பெற்றது.

  • உலகில் பொதுவாக ஞாயிற்றுக் கிழமைதான் வார விடுமுறை. ஆனால் கிரீஸில் திங்கட்கிழமையும், சிரியாவில் புதன்கிழமையும், எகிப்தில் வியாழக்கிழமையும், ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமையும், இஸ்ரேலில் சனிக்கிழமையும் வார விடுமுறை நாட்கள்.

  • 1752ம் வருடத்தில் செப்டம்பர் மாதத்துக்கு, 19 நாட்கள் மட்டுமே இருந்திருக்கின்றன! இந்த ஆண்டில்தான் இங்கிலாந்து நாடு, ரோமன்- ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து கிரிகோரியன் காலண்டர் முறைக்கு மாறியது.

  • சரி, 2012ம் வருடத்திய காலண்டரை வைத்திருக்கிறீர்களா? அப்படியே பத்திரப்படுத்தி வையுங்கள். நீங்கள் 2040ம் ஆண்டு காலண்டர் வாங்க வேண்டாம்! ஆமாம், 2040ல் இதே காலண்டரைப் பயன்படுத்தலாம். அதே நாள், கிழமை, மாதம் எல்லாமே ஒரே மாதிரிதான்! இது எப்படி இருக்கு!

காலம் தவறிய தேடுதல் தேவையற்றது!

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும் வழிமுறைகள்!

விழிப்புணர்வு தேவை; வாழ்வியல் மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் மிக மிக தேவை!

Jawaharlal Nehru Quotes: குழந்தைகள் பற்றி ஜவஹர்லால் நேரு கூறிய 15 பொன்மொழிகள்!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

SCROLL FOR NEXT