சென்னை, புறநகரான திருவேற்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு தேவி கருமாரி அம்மன் திருக்கோயில். வேண்டுவோர்க்கு வேண்டியபடி அருளும் அன்னை கருமாரி காட்சி தரும் கருவறையில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு ஒன்று எப்போதும் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. இது ஏற்றப்பட்ட நாளிலிருந்து எரிந்து கொண்டே இருப்பது இதன் விசேஷம். நெய் உண்டு எரியும் இந்த பதி விளக்கின் சுடர் ஒளியில் அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன. சிரசு மட்டும் காட்டும் உக்கிரநாராயணியின் கண்கள் எதிரிகளை அச்சப்படுத்துகின்றன. நல்லவருக்கு அபயம் அளிக்கின்றன.
சிலை வடிவான கருமாரியன்னை காண்போர் கருத்தை கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள். மேல் வலது கரத்தில் உடுக்கையும் பாம்பும், மேல் இடது கரத்தில் திரிசூலம், கீழ் வலது கரத்தில் கத்தி, கீழ் இடது கரத்தில் அமுத கலசம் திகழ்கிறது. ஒரு காலத்தில் மண்டையோடு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில் இப்பொழுது எலுமிச்சை மாலையும் உதட்டில் சிறு புன்னகையும் தவழ, கிழக்கு நோக்கி அருளும் அன்னை கருமாரியை கண் மூடி வணங்கி நின்றால் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. மனதில் அமைதி நிலவுகிறது.
திருவேற்காடு ஆதி காலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. அதனால் அந்தப் பகுதியை வேலங்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்பு புற்று இருந்தது. பாம்பு வடிவில் அந்த புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. இத்தகவல் மெல்ல மெல்ல பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறி கேட்டு பலன் பெற்றுச் சென்றனர். நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகி கருமாரியம்மன் ஆலயம் எழுந்தது.
அகத்திய மாமுனிவர் அன்னை கருமாரியை போற்றித் துதித்தார். அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாத பௌர்ணமி தினமான பூச நட்சத்திரத்தில். இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. தேவி கருமாரி அன்னையை ஆறு வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே அருள்வாள். அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்களின் மனம் போலவே வாழ்க்கை அமையும் என்பது நிதர்சனம்.