Sagala Sowbakkiyam Tharum Sani Mahaprathosha Vazhipadu!
Sagala Sowbakkiyam Tharum Sani Mahaprathosha Vazhipadu! https://tamil.webdunia.com
ஆன்மிகம்

சகல செளபாக்கியம் தரும் சனி மகாபிரதோஷ வழிபாடு!

சேலம் சுபா

சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் பிரதோஷ காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘பிரதோஷம்’ என்பது ஆன்மாக்களின் முற்பிறப்பு குற்றங்களை நீக்குவதாக விளங்குகிறது. பரம்பொருளான ஈஸ்வரனிடம் மனம் லயிப்பதற்கு இதுவே உகந்த காலமாகும்.

கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பை பயனுள்ளதாக்க பிரதோஷ கால வழிபாடு மிகவும் அவசியமாகும். பிரதி மாதம் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் திரயோதசி திதியின் பிற்பகல் நாலரை மணி முதல் ஏழு மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது.

மரணம் இல்லா பெருவாழ்வைத் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். இதில் உடல் நொந்து வருத்தமடைந்த வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை உமிழ, அந்த நஞ்சு யுகத்திற்கே முடிவை தருவது போல எரிச்சல் தந்து துன்பம் தர தேவர்கள் கயிலையை அடைந்து சிவபெருமானிடம் முறையிட, அந்தக் கொடிய நஞ்சினை உலகைக் காக்கும் பொருட்டு தானே உட்கொண்டார். அதைக்கண்டு வருத்தமடைந்த பார்வதி தேவி ஈசனின் கண்டத்தை பிடிக்க, விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதன் பின் பரம்பொருளின் அனுமதியுடன் மீண்டும் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ந்தார்கள்.

அமிர்தம் உண்ட தேவர்கள் வேண்ட, ஆருயிர்த்திரள் துன்பம் நீங்கி இன்பம் அடையவும் சிவபெருமான் தனது அருட்கரங்களில் டமருகம் ஏந்தி, இடப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உமாதேவியார் காண திருநடனம் செய்தருளினார்.

இதுவே பிரதோஷ காலம் எனப்படும். அந்த நாள் திரயோதசி திதி மாலை 4.30 முதல் ஏழு மணி வரை என்கிறது புராணங்கள். பிரதோஷ காலத்தில் விடை வாகனனாம் மதிசூடிய மகேஸ்வரனை உமாதேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அசுவமேத யாகங்களை செய்த பலனை பெறுவர்.

பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் விரதம் இருந்து தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்வது நன்று. அன்று மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று இயன்ற அளவு அபிஷேகம் அர்ச்சனை செய்து ஐந்து எழுத்து மந்திரமான, ‘ஓம் சிவாய நம’ எனும் மந்திரத்தை மனதார ஓதுதல் வேண்டும். சிவலிங்கத்துக்கு முன் எழுந்தருளி இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாத்துதல், நெய்விளக்கு ஏற்றுதல், தான தர்மம் செய்தல் ஆகியவை அளவிலா புண்ணியத்தை தரும். அந்நேரம் இறைவனை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே கண்டு வணங்குதல் பெரும் பலனைப் பெற்றுத் தரும்.

அனைத்துக் கிழமைகளிலும் பிரதோஷ தினம் வந்தாலும், சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டினால் செல்வம் வளரும், நோய்கள் அகலும், கடன் தொல்லை, மனக்கவலை, வறுமை, மரண வேதனை முதலின நீங்கும். இன்று சனி மகா பிரதோஷம். இந்நாளில் சிவ வழிபாடு மேற்கொண்டு ஈசனின் அருளைப் பெறுவோம்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT