Secret of Happiness
Secret of Happiness 
ஆன்மிகம்

ஆன்மிகக் கதை: மகிழ்ச்சியின் இரகசியம்!

ஏ.அசோக்ராஜா

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்று ஒரு அரசன், ஞானி ஒருவரிடம் கூறினான்.

'உனது கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?' என்று ஞானி திருப்பிக் கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான் அரசன்.

'அப்படியானால் ஒன்று செய். உனது நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக்கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்?' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையைச் செய்வதை விட, என்னிடமே வேலை செய். உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். எனது பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்' என்றார் துறவி.

‘சரி’ என்று ஒப்புக்கொண்டான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின்னர் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன், நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி, 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்' என்றான் மன்னன்.

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?’ என்றார் துறவி.

'இல்லை' என்றான் மன்னன்.

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' என்று கேட்டார் துறவி.

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார். 'அப்போது நீ இது என்னுடைய நாடு என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதிதான் என்று எண்ணுகிறாய். அந்த மனம்தான் அனைத்திற்கும் அடிப்படை’ என்றார்.

நான் என்ற எண்ணம் வரும்போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்குக் கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்!

சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!

3D பிரிண்டிங் என்றால் என்ன? அதை வைத்து வீடு கூட கட்டலாமா?

மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் 8 விஷயங்கள்!

மாறும் சூழலை உணர்ந்தால் மகிழ்ச்சி மலரும்!

பெண்கள் தாய்மைப்பேறு அடைய வயது வரம்பு உண்டா?

SCROLL FOR NEXT