ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலை 
ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ணர் பிடித்த பிரம்மாண்ட குடையின் பெருமை தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ழி மழையில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு கோவர்த்தன மலையையே தூக்கிய  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதைத் தனது சுண்டு விரலால் தாங்கிப் பிடிக்க, அது ஒரு குடை போல் மாறிப்போனது. பிருந்தாவனத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு யாகம் செய்ய கோகுலத்து மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தனது பதவியையும் பலத்தையும் எண்ணி இறுமாப்புக் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணர் அவ்வாறு செய்தார். கோகுலத்து மக்களும் கிருஷ்ணர் சொன்னபடியே செய்தனர்.

கிருஷ்ணரின் இந்த செய்கையால் கோபம் கொண்ட இந்திரன், தன்னுடைய கோபத்தை பிருந்தாவன மக்களின் மீது காட்டினான். பல வகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும்போதுதான் அழைக்கப்படும். அந்த மேகம் பிருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி அந்த அபாயகரமான மேகம் பிருந்தாவனத்தின் மேல் தனது பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது  மழையை பொழிந்தது. தொடர்ந்து இடி இடித்தது, மின்னல் வெட்டியது, பலமான காற்று வீசியது. கூரிய அம்புகள் போல் நீர்  தாரை தாரையாக தரையிறங்கின. சற்று நேரத்தில் பிருந்தாவனத்தின் நிலப்பகுதிகள் மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின.

நிலைமை மிகவும் மோசமானது. குறிப்பாக, மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அந்தத் தொல்லையிலிருந்து விடுபட முடியாது மக்கள் கிருஷ்ணரை சரணடைந்தனர். தனது மக்களைக் காக்கும் பொருட்டு கோவர்த்தன மலையை தனது திருக்கரத்தால் தூக்கினார் கிருஷ்ணர். அதைத் தன் சுண்டு விரலால் தாங்கிப் பிடித்தார். அது ஒரு குடை போல் மாறிப் போனது. அந்த பிரம்மாண்ட மலை குடையின் கீழ் பிருந்தாவன மக்களும் கால்நடைகளும் அடைக்கலம் புகுந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் தமது இடது கை துண்டு விரலில் நுனியில் அந்தப் பெரிய மலையை    ஒரு வார காலம் நிறுத்தி வைத்திருந்தார். இதைக் கண்ட ஆயர்கள் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ணரின் அசாதாரணமான சக்தியைக் கண்டு இந்திரன் நிலை குலைந்தான். உடனே அவன் மேகங்களை எல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றது. பலத்த காற்று வீசுவதும் நின்றது. தேவலோகத்தில் இருந்து அங்கு வந்த இந்திரன் தன்னுடைய குற்றத்தை பொறுத்தருளும்படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டினான். அவனது கர்வமும் அத்துடன் அடங்கிப்போனது.

கோவர்த்தன மலை முதலில் 115 கிலோ மீட்டர் நீளம், 72 கிலோ மீட்டர் அகலம் மற்றும் 29 கிலோ மீட்டர் உயரம் இருந்தது. தற்போது அந்த மலை இருந்த இடத்தில் 80 அடி உயரம் மட்டுமே உள்ளது. ‘வ்ரஜ மண்டல யாத்திரை’யின் போது கிருஷ்ணரை தரிசிக்கும் பக்தர்கள் 27 கிலோ மீட்டர் கோவர்த்தன மலையைச் சுற்றி வருகின்றனர். இம்மலையைச் சுற்றி வர சுமார் எட்டு மணி நேரம் ஆகும். கோவர்த்தன மலையில் ஸ்ரீ கிருஷ்ணரின் கோயில் ஒன்றும் உள்ளது. வட மாநிலத்தில் உள்ள பிருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் அங்கிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவர்த்தன மலையையும் தரிசிக்கலாம்.

கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தரும்!

கேரளாவின் மிஸ் பண்ணக் கூடாத சுவையான 10 சைவ உணவுகள்!

வயதானாலும் இளமையுடன் இருக்க இயற்கை வழிமுறைகள் இதோ..!

இந்தப் பதவிக்கு அவர் சரிபட்டு வரமாட்டார் - கம்பீர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர்!

குளிர் காலத்தில் கை, கால் வறட்சியை நீக்க இயற்கையான 7 வழிகள்!

SCROLL FOR NEXT