‘சுகா’ என்ற வடமொழிச் சொல்லுக்கு, கிளி என்று பொருள். கிளி முகம் கொண்ட மகரிஷி ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி. மஹாபாரதத்தை எழுதிய வியாசரின் மகனே
ஸ்ரீ சுகப்பிரம்மம். மகாபாரதப் போர் நடைபெற்ற குருக்ஷேத்ரத்தில் ஹோமம் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வியாசர் கண்களில் அப்போது அங்கே வந்த கிருதாசீ எனும் மிக அழகிய தேவ கன்னிகை தென்பட்டாள். தன்னைக் கண்டு மனம் மயங்கிய வேத வியாசரின் மனதைப் புரிந்து கொண்ட அந்த தேவ கன்னிகை மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்க எண்ணி, தனது உருவை மாற்றிக் கொள்ள முயல, அப்போது ஆகாயத்தில் கிளிகள் பறந்துகொண்டு இருந்தன. உடனே அவள் ஒரு பச்சைக் கிளியாக மாறி அக்கூட்டத்தில் கலந்து விட்டாள்.
கிருதாசீ தனது சுய உருவை அடைந்தபோது தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். அவளுக்குக் கிளி முகத்துடன் கூடிய ஒரு பிள்ளை பிறந்தான். அந்தப் பிள்ளையை தேவலோகத்திற்குச் கொண்டு செல்ல முடியாதாகையினால் கிருதாசீ அக்குழந்தையை வியாசரிடம் ஒப்படைத்தாள். குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. இவர் தனது தாயின் சாயலை முகத்தில் தாங்கியவர். தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்பது ஆன்றோர் வாக்கு.
பிறந்த குழந்தையை கங்கை நீரில் ஸ்நானம் செய்ய, உடனே பச்சிளம் குழந்தையாக இருந்த சுகர், அக்கணமே ஒரு சிறுவனாக மாறினார். வியாசரின் அறிவும் ஞானமும் ஒருங்கே சுகருக்கு கிடைத்தது. வியாசரிடமே வளர்ந்த சுகப்பிரம்மம் பிரம்மசரிய விரதம் கடைப்பிடித்தார்.
ஒரு நாள் சுகப்பிரம்மத்தைக் காணாமல் வியாசர் சுகா, சுகா என குரல் கொடுத்து அழைத்தார். சுகரே பிரம்மம் என்பதால் சுற்றிலும் இருந்த மரம், செடி, கொடிகள், புல் பூண்டு என அனைத்தும், ‘என்ன என்ன’ என்று கேட்க, அதில் சுகர் குரலைக் காணாததால் மீண்டும் தேடிக்கொண்டே நடந்து ஒரு ஆற்றின் கரையினை நோக்கி நடக்கத் தொடங்கினார். அந்தக் கரையோரம் சுகர் நடந்து செல்வதைக் கண்டு வியாசர் அவரை அழைத்தவாறே பின்தொடர்ந்து சென்றார். அச்சமயத்தில் சில பெண்கள் அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். சுகர் அப்பெண்களைக் கடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து வியாசர் செல்ல, அப்போது குளித்துக் கொண்டிருந்த பெண்கள் வியாசரைப் பார்த்து பதறியவாறே கரையேறி தங்கள் உடலை ஆடைகளால் மறைத்துக் கொண்டார்களாம். இதைக்கண்டு திகைத்துப் போன வியாசர், சற்று முன்னால் வாலிபனான தனது மகன் சுகர் சென்றபோது பதறாமல் அமைதியாக இருந்த பெண்கள், வயதான மகரிஷியான தன்னைக் கண்டு பதறி ஆடைகளால் தங்கள் உடலை மறைத்துக் கொண்டதைப் பற்றி விசாரிக்க, அதற்கு அப்பெண்கள் “சுகர் ஒரு பிரம்மரிஷி. அவர் பார்வையில் ஆண் பெண் என எந்த பேதமும் இருக்காது” என்று பதிலுரைத்தார்களாம்.
வியாசர் மகாபாரத காப்பியத்தை எழுதி முடித்தார். ஆனாலும், அவருக்கு மன நிம்மதி கிடைக்கவில்லை. மனம் அமைதி பெற கண்ணனின் லீலைகளை எழுதுங்கள் என்று நாரதர் கூற, வியாசர் ஸ்ரீமத் பாகவதம் என்ற பெயரில் கண்ணனின் லீலைகளை எழுதினார்.
அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஹஸ்தினாபுரத்து மகாராஜாவாக ஆனபோது ஒரு சமயம் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த முனிவர் குடிலுக்குச் சென்று தாகத்திற்கு நீர் கேட்க, அது முனிவர் காதில் விழாததால் முனிவர் அமைதியாக இருந்தார். இதனால் கோபமுற்ற மன்னன் அங்கிருந்த செத்துக் கிடந்த ஒரு பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் இட்டார். இதைக் கண்ட அந்த முனிவரின் மகனோ, மன்னன் ஏழே நாட்களில் இறந்து விடுவான் எனச் சாபமிடுகிறான். இப்படியாக சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜா தனது மகன் ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து பின்னர் கங்கைக் கரைக்குச் சென்று தவம் இயற்றினார். அப்போது அங்கு வந்தார் சுகப்பிரம்ம ரிஷி. மகாராஜா மோட்சம் பெறுவதற்காக ஸ்ரீமத் பாகவத கதைகளை ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தார்.
சதா சர்வ காலமும் பிரம்மத்திலேயே முழுமையாக லயித்த ஒரே ரிஷி சிவபெருமானுக்கு பிறகு இவர் ஒருவர் மட்டுமே. சுகர் அபார பிரம்மஞானம் மிக்கவராய் தந்தையை மிஞ்சி மனதில் சிறிதளவும் கலங்கமில்லாதவராய் விளங்கினார். இத்தகைய பெருமைகள் பல பெற்ற சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டால் நம் வாழ்க்கையில் அளவற்ற செல்வமும் நல்வாழ்வும் கிடைக்கும்.