திருவள்ளூர் மாவட்டம், திருப்பாசூர் அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இங்குள்ள ஈசனை பாடியுள்ளார்கள். தல விருட்சம் மூங்கில். இங்கு ஈசன் சுயம்புவாக எழுந்தருளி அருள்புரிகிறார்.
ஆதி காலத்தில் இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. மேய்ச்சலுக்கு வந்த பசு தொடர்ந்து சிறுமேடு ஒன்றின் மீது அடிக்கடி பால் சுரந்ததைக் கண்டு மன்னன் மண்ணுக்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் 'வாசி' என்னும் கருவியால் தோண்ட மண்ணிற்கு அடியில் இருந்து இரத்தம் பீறிட்டதைக் கண்டதும் அதிர்ந்து பார்த்தபோது, சிவன் சுயம்பு லிங்கமாக அங்கு இருப்பதைக் கண்டனர்.
மன்னனின் எதிரிகள் (சமணர்கள்) அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனுக்கு அனுப்பி வைத்தனர். மன்னன் குடத்தைத் திறந்து பார்ப்பதற்கு முன்பே அங்கு வந்த பாம்பாட்டி ஒருவர் குடத்தில் இருந்த பாம்பை பிடித்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட, அன்று இரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், தாம் மூங்கில் காட்டில் எழுந்தருளி உள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் ஈசன். அதன் பின் மன்னன் இங்கு ஒரு கோயில் எழுப்பினான் என்பது தல வரலாறு.
மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் ( மீன்) எடுத்து சென்று அசுரர்களை அழித்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. மகாவிஷ்ணு இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என புராண வரலாறு கூறுகிறது.
வாசி என்னும் கருவியால் வெட்டுபட்ட சிவன் என்பதால், இத்தல இறைவன், 'வாசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தரும் இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி, 'தீண்டா திருமேனி' என்று அழைக்கப்படுகிறார்.
அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. சிவன் சன்னிதிக்கு வலப்புறம் அம்பாள் தனி சன்னிதியில் காணப்படுகிறார். இங்குள்ள அம்பாளை ஈசன், 'தன் காதலியே' என்று சொல்லி அன்போடு அழைத்ததால் இங்குள்ள அம்பாள், 'தங்காதலி' அம்பாள் என அழைக்கப்படுகிறாள்.
இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, 'விநாயகர் சபை' என்கின்றனர். சுவாமிக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.
சொர்ண காளி: குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் கரிகால சோழ மன்னனுக்கு வரி கட்டாமல் இருந்தான். அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் படையெடுத்தபோது காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டி அடித்தான். மனம் சோர்ந்த கரிகாலன் இத்தல ஈசனிடம் விண்ணப்பிக்க, பெருமான் காளியை அடக்க நந்தி பகவானை அனுப்பி வைத்தார். நந்தியெம்பெருமான், காளியுடன் போரிட்டு காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டி அவளைக் கட்டுப்படுத்தினார். பிறகு மன்னன் இப்பகுதியை கைப்பற்றினான். நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் வெளிப்பிராகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பௌர்ணமிதோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.