முருகன் கோயில் என்றாலே சிறப்புதான். அதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னபேடு பகுதியில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்றக் கனவு நிச்சயஅ நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சிறுவாபுரி பாலமுருகன் கோயில் 500 வருடங்கள் பழைமையானதாகும். இவ்விடத்திற்கு சிறுவாபுரி என்று பெயர் வரக் காரணம், அஸ்வமேத யாகம் நடத்துவதற்காக ஸ்ரீராமபிரான் குதிரையை ஏவி விடுகிறார். அந்த குதிரை எல்லா இடத்திற்கும் சென்றுவிட்டு கடைசியாக வால்மீகி ஆசிரமத்தை சென்று அடைகிறது.
வால்மீகி ஆசிரமத்தில் இருந்த லவனும் குசனும் அந்த குதிரையைப் பிடித்து மரத்தில் கட்டி வைக்கிறார்கள். குதிரையை காணாததால், அனுமனை அனுப்பி வைக்கிறார் ஸ்ரீராமர். ஆனால், அவர்கள் அனுமனையும் பிடித்து மரத்தில் கட்டி வைக்கிறார்கள். கடைசியாக லட்சுமணனை அனுப்பி வைக்கிறார் ஸ்ரீராமர். அவரையுமே பிடித்து மரத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள் லவனும் குசனும்.
இதனால் மிகவும் கோபமடைந்த ஸ்ரீராமர், அவருடைய பிள்ளைகள்தான் அவர்கள் என்று தெரியாமல் லவனிடமும், குசனிடமும் சண்டையிடுகிறார். சிறுபிள்ளைகள் போர் தொடுத்த இடம். ஆதலால், இவ்விடத்திற்கு ‘சிறுவர் போர் புரி’ என்று பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி ‘சிறுவாபுரி’ என்றானது.
சூரபத்மனை வதம் செய்த பின்பு அங்கிருந்து புறப்பட்டு வந்த முருகப்பெருமான் தங்கி இளைப்பாறிய இடம்தான் சிறுவாபுரி என்றும் கூறப்படுகிறது. இங்கு தங்கியிருந்தபோது முருகப்பெருமான் இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு அமுது அளித்துள்ளார். தேவர்கள் வேண்டிக் கேட்டதற்கு இணங்கி இங்கேயே தங்கி பாலமுருகனாகக் காட்சி தருகிறார்.
இத்தல முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் நெல்லி முள்ளி பொடி அபிஷேகம் செய்து வந்தால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை ஆறு வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், திருமணத்தடை நீங்கும், செல்வ வளம் பெருகும், நினைத்த காரியம் நிறைவேறும். இக்கோயில் மூலவரை ஆறு முறை வலம் வந்தால், வாழ்வில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.