இந்தியாவில் குஜராத் மாநிலம், காந்தி நகரில் 'இந்த்ரோடா டைனோசார் புதைப்படிமப் பூங்கா' (Indroda Dinosaur and Fossil Park) அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்கா, செயற்கையாக உருவாக்கப்பட்ட புதைப்படிமப் பூங்காவாகும்.
இது உண்மையில் டைனோசர்கள் வாழ்ந்த இடங்கள் அல்ல. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் மற்றும் புதைப்படிமங்கள், உலகின் மூன்றாவது பெரிய டைனோசர் புதைப்படிம அகழ்வாராய்ச்சித் தளம் மற்றும் குஜராத்தின் இரண்டாவது பெரிய குஞ்சு பொரிப்பகமான ராயோலி, பாலாசினோராவிலிருந்து தருவிக்கப்பட்டது. இந்தியாவில் அமைந்துள்ள இரண்டு டைனோசர் அருங்காட்சியகங்களில் இதுவே மிகப்பெரிய அருங்காட்சியமாகும். இதனை, 'இந்தியாவின் ஜுராசிக் பார்க்' என்று அழைக்கின்றனர்.
1970 ஆம் ஆண்டில், குஜராத் அரசின் வனத்துறை இப்பூங்காவில் மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடங்கியது. 428 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பூங்காவில், டைனோசர் பிரிவு, புதைபடிவப் பிரிவு என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இந்த்ரோடா டையனோசார் புதைப்படிமப் பூங்காவை குசராத்து சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கின்றது. டைனோசர் எலும்பு புதைபடிவங்களின் பழமையான பதிவு நடுத்தர ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தது. மேலும் இவை கச்சு படுகையின் பார்ச்சம் உருவாக்கத்திலிருந்து வந்தது ஆகும். இப்பகுதி புதைப்படிவங்கள் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல் கிரீத் தேசியக் காலத்திற்கு முந்தியவை. இங்கு வெவ்வேறு அளவிலான டைனோசார் முட்டைகள் உள்ளன. இவற்றில் சில பீரங்கிகளின் அளவிற்கு இணையானது. பெரிய அளவிலான விலங்குகளின் புதைபடிவத் தடங்கள் இந்தப் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோசர்களில் டைரனோசொரஸ் ரெக்ஸ், மெகலோசொரஸ், டைட்டனோசொரஸ், பரபாசரஸ், பிராச்சியோசரஸ், அண்டார்ட்கோசரஸ், ஸ்டீகோசொரஸ் மற்றும் இகுவானோடன் ஆகியவை அடங்கும். இந்தப் பூங்காவில் டைனோசர்களின் உருவ அளவினை ஒத்த மாதிரிகள் மற்றும் அவை இருந்த காலகட்டத்தின் விவரங்கள் அவற்றின் பண்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதைப்படிமங்கள் இந்த மாநிலத்தின் சோன்ங்கிர் பாக் படுகை, பாலசின்னாரின் இம்மத்நகர் படுகை, கீடா, பஞ்சமகால், வதோதரா தென்கிழக்கு பகுதிகளைச் சார்ந்தவையாகும்.
இவை தவிர, இப்பூங்காவிலுள்ள உயிரியல் பூங்காவில் நீலத் திமிங்கலம் போன்ற கடல் பாலூட்டிகளின் முந்தைய எலும்புக்கூடுகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அழகிய பூக்கள் பூக்கும் செடிகள், உயர்ந்த அளவிலான
மரங்கள் கொண்ட தாவரவியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு ஆம்பி தியேட்டர், விளக்க மையம் உள்ளன.
இங்குள்ள காட்டுப் பூங்காவில் எண்ணற்ற பறவைகள், ஊர்வன, நூற்றுக்கணக்கான நீலக் காய்கள், மந்திகள் மற்றும் மயில்கள் போன்றவை அதிகமிருக்கின்றன. இங்கு விலங்குகள் அடைக்கப்பட்ட மிருகக்காட்சி சாலை ஒன்றும் இருக்கிறது. இவை தவிர, இங்கு குழந்தைகள் பயணித்து மகிழ சிறிய அளவிலான தொடருந்து ஒன்றும் 10 முதல் 15 நிமிட அளவில் இயக்கப்படுகிறது.
திங்கள் கிழமை தவிர்த்து, காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இப்பூங்காவைப் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு பெரியவர்களுக்கு ரூ.30/-, சிறியவர்களுக்கு ரூ.15/- என்று நுழைவுக் கட்டணம் பெறப்படுகிறது. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக ரூ.8/- தரப்பட்டிருக்கிறது.