Ladakh Travel Series 
பயணம்

லடாக் பயண தொடர் 3 - முதல் நாள் பார்த்த அந்த 7 இடங்கள்!

வித்யா குருராஜன்

நாள் 1:

முதல் நாள் லடாக்கில் இருந்து அரை மணிநேர பயணத்தில் உள்ள ஏழு இடங்களைப் பார்க்கலாம். காலை 8க்குக் கிளம்பினால் இந்த ஏழு இடங்களையும் பார்த்துவிட்டு இரவு 8மணி போல் தங்குமிடம் வந்துவிடலாம்.

Spot 1: Hall of Fame

முன்பே குறிப்பிட்டதைப் போல் இது பல்லாண்டுகளாய் எல்லைத் தகராறு நடந்து வரும் பகுதி. கார்கில் போரை மறக்க முடியுமா? திடமான இராணுவ இருப்பு இங்கே உள்ளது. (அதற்காக ஸ்ரீநகரைப் போல் 10அடிக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர் இங்கே நிற்கவில்லை. காஷ்மீரை விட லடாக் பதட்டமின்றி அமைதியாகவே உள்ளது.) இப்பகுதியில் உள்ள இராணுவக் குழுவுக்கு Fire and Fury Corps என்று பெயர். சியாச்சின் Glacier பகுதியும், இங்கு நடந்த இரு பெரும் போர்களும், சாதாரணமாகவே நிலவும் காலநிலையும் இதுகாறும் பல இராணுவ வீரர்களைக் காவு வாங்கிவிட்டன. அவர்களுக்கான நினைவு இல்லமே இந்த Hall of Fame. லேவில் உள்ள இந்த இடத்தைக் கண்டிப்பாய் ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக வளரும் பிள்ளைகள், பார்க்க வேண்டும். நாட்டுக்குள் நாம் அனுபவிக்கும் பாதுகாப்புணர்வின் விலையைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?! 

இந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அத்தனை செய்திகள் உள்ளே உள்ளன. 

போர்களில் உயிர் நீத்த வீரர்களின் தகவல்கள் தாண்டி, போர்களில் பாக் வீரர்களிடமிருந்தும் சீன வீரர்களிடமிருந்தும் நம் இராணுவம் கைப்பற்றிய துப்பாக்கி உள்ளிட்டவைகள், லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பனிச் சிகரங்களில் இயங்கும் நம் முப்படைகள், கார்கிலில் நடந்த ஆப்பரேஷன் விஜய் பற்றிய ஆவணங்கள், இந்த இமய மலைகளில் இராணுவ வீரர்களின் சவாலான வாழ்க்கை, அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், அவர்களின் உயிர்க்காக்கும் முடிச்சுகள், என அனைத்தும் இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தும் அந்த ஒரு நிமிடம் இதயம் கனமாகித்தான் விடுகிறது. ஓய்வுபெற்ற இராணுவ பீரங்கிகளும் வண்டிகளும் வெளியில் வரிசையாய் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். போர்கள் பல கண்ட அந்த வாகனங்கள் பர்ப்பதற்கே கம்பீரமாகத்தான் உள்ளன.‌

Ladakh Travel Series

Spot 2: Spituk Monastery

Hall of fameல் இருந்து சுமார் அரை மணி நேர பயணத்தில் உள்ள இரண்டாவது இடம் “Spituk Monastery “. லடாக் முழுக்க திபெத்திய பௌத்தம் ஆக்கிரமித்திருக்கிறது. மஹாயான புத்தவிகாரங்கள் இங்கே அதிகம் காணப்படுகின்றன. அப்படியான ஒரு புத்தவிகாரம் இந்த ஸ்பிதுக் மோனஸ்டிரி. படிக்கட்டுக்கள் சாய்வான தளங்கள் என்று ஏறி ஏறித் தான் பார்க்கவேண்டியுள்ளது. வழியெங்கும் படத்தில் உள்ளது போன்ற மணிகள் நிறுவியிருக்கிறார்கள். நம்மூர் கோவில் மணிகளைப் போல் இவை சத்தமிடும் மணிகள் இல்லை. சுற்றிவிடும் மணிகள். ஒவ்வொரு மணியிலும் திபெத் மொழியில் மஹாயான மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. “ஓம் மணி பத்மே ஹம்” என்று சொல்லியபடி இந்த மணிகளைக் கடிகார சுழற்சியில் சுற்றிவிட்டால் அந்த மந்திரங்களை ஜெபித்த பலன் நமக்கு கிடைக்குமாம். சுற்றிவிட்டபடியே மேலே ஏறி உச்சிக்குச் சென்றால் சிந்தாமணி, காளி, யமன், சரவணர், புத்தரைத் தரிசிக்கலாம். முதல் நாள் ஓய்வில் நன்றாக மூச்சுப்பயிற்சி செய்து நுரையீரலைத் தயார்படுத்தியிருந்தால் புத்தர் தரிசனம் கஷ்டப்படாமல் கிடைக்கும். இல்லாவிட்டால் புஸ் புஸ் தான்..

Spot 3: பதார் சாஹிப் குருத்வாரா

ஆம்! பஞ்சாப்பின் குருத்வாராவே தான். சீக்கிய மதத்தினரும் இங்கே கணிசமான அளவு இருக்கிறார்கள். குறிப்பாக இங்கே பணியில் உள்ள இராணுவத்தினர்களில் நிறைய சிங்குகள் உள்ளனர். குருத்வாரா வரும் அனைவருக்கும் அன்னதானம் உண்டல்லவா! மதிய உணவு நேரத்தில் இந்த இடத்துக்கு வந்துவிட்டால் குருவையும் தரிசித்துவிட்டு உணவையும் முடித்துக்கொள்ளலாம். வெறும் கால்களோடு தான் உள்ளே போகவேண்டும். கை கால்களைக் கழுவி குருவின் சந்நிதானம் சென்று பஞ்சாபிய வீரம் சொட்டும் பக்திப் பாடல்களின் இசைக்கு இடையே சீக்கிய மதகுருவான பதார் சாஹிப் அவர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு டைனிங் ஹால் செல்லலாம். வெளியில் வைக்கப்பட்டுள்ள தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு தரையில் விரிக்கப்பட்டிருக்கும்பாயில் அமர்ந்துகொண்டால் ரொட்டிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இரு கைகளால் ஏந்தியபடி ரொட்டிகளை வாங்கச் சொல்கிறார்கள். ரொட்டிகளோடு பன்னீர் குருமா, சாதம், ராஜ்மா மசாலா, தயிர், ஊறுகாய் என்று தாராளமாய் உணவு ‌பரிமாரப்படுகிறது. வீணாக்காமல் உண்ணுமாறு ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. உண்டு முடித்துவிட்டு மீதங்களைக் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டுக் கழுவும் இடத்தில் தட்டினைக் கொடுத்துவிட‌வேண்டும். இக்கோவில் முழுக்க பரிமாறுவதில் இருந்து வரிசை ஒழுங்குபடுத்துவது, பூஜை அறையில் முரசறைவது, தட்டுகள் சுத்தம் செய்வது வரை இராணுவத்தினர் தான். 

Spot 4: Magnetic Hill 

லடாக்கின் மிக பிரபலமான சுற்றுலாத்தலம் இந்த காந்தக்குன்று. சுற்றி எல்லா மலைகளும் செம்மண் நிறத்தில் இருக்க நடுவில் ஒன்றுமட்டும் யானைக் கலரில் இருக்கிறது. அது தான் காந்த மலையாம். சாலையில் ஒரு டப்பா வரைந்து வைத்திருக்கிறார்கள். அந்த டப்பாவுக்குள் நாம் வந்த காரை நிறுத்தி அணைத்துவிட்டு இறங்கிவிட வேண்டும். கார் தானாக காந்தமலை நோக்கி உருள்கிறது. மலை தான் காந்தம் போல் காரை இழுக்கிறது என்பதைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இது வெறும் காட்சிப்பிழை என்ற கருத்தும் உண்டு. எப்படியோ.. கார் நகர்வதும், அந்த‌ மலையின் கம்பீர பிரும்மாண்டமும் கண்ணுக்கு விருந்து தான். மலையில் ஓட்ட நான்கு சக்கிர பைக் வண்டிகள் வாடகைக்குத் தருகிறார்கள். ஒரு வண்டியில் ஒருவர் ஒரு ரவுண்ட் அடிக்க 700 ரூபாய். ஒரு சாகச செயல்பாடு இது. மலைகளுக்கு இடையிலிருந்து உதித்து வரும் நீண்ட தார் சாலை, காந்த மலையில் சென்று முடியும் அதே சாலை என இரு கோணங்களிலும் புகைப்படம் எடுப்பதில் நம்மை மீறி ஆர்வம் பொங்கித்தான் எழுந்துவிடுகிறது. மலை உண்மையில் காந்தத் தன்மை கொண்டதோ இல்லையோ.. இந்த மொத்த இடத்தின் அழகும் நிச்சயமாக காந்தம் போல் நம்மை ஈர்த்துக்கொள்கிறது என்பது உண்மை தான்.

Ladakh Travel Series

Spot 5: Sangam Point

லே மாவட்டத்தின் இரு பெறும் ஆறுகள் சிந்து மற்றும் ஸன்ஸ்கர். இவற்றின் ‌படுகை தான் லே மாவட்டத்தினைச் செழுப்பாக்கி மக்கள் வாழத் தகுந்த சூழலைத் தருகின்றன. இந்த இரு பெறும் நதிகளும் இணையும் இடம்தான் இந்த சங்கமம் பகுதி. சிந்து நதி திபெத்தில் உள்ள கைலாச மலையில் மானஸரோவர் ஏரிக்கு அருகில் பிறந்து இந்த இடம் ஓடி வந்திருக்கிறது. ஸன்ஸ்கர் நதி உண்மையில் சிந்துவின் ஒரு கிளை ஆறு தான். ஆனால் சிந்துவை விடப் பெரியது என்று சொல்லப்படுகிறது. ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் 6-8அடி ஆழத்துக்கு உறைந்து போய்விடுமாம் இந்த ஸன்ஸ்கர் நதி. இதன் மீது நடந்து போகலாமாம்.

இந்த சங்கமத்தில் நம்மை வாய்பிளக்க வைக்கும் ஒரு அம்சம் இருக்கிறது. அது இரு நதிகளின் நிற மாறுதல். ஒன்று பச்சை வண்ணமாகவும் மற்றொன்று க்ரே நிறத்திலும் காட்சிதருகிறது. இரண்டும் இணையும் இடத்தில் ஸ்கேலால் கோடு போட்டது போல் இந்தப்பக்கம் பச்சை அந்தப்பக்கம் க்ரே என்று தெளிவாய்த் தெரிகிறது. பிறகு இரண்டும் இணைந்து கொஞ்ச தூரத்தில் வேறு நிறத்தில் தெரிகிறது. சில்லிட்டுக் கிடக்கும் நீரில் இறங்கப் படித்துறை வசதி உள்ளது. போட்டிங் போகலாம் இங்கே. ஆனால் நீர் உப்பு கரிக்கிறது. பள்ளத்தாக்கும் சுற்றிப் பல நிறங்களில் உள்ள இமயங்களும் இடையில் இரு வேறு நிறங்களில் இருவேறு திசைகளில் இருந்து ஓடிவரும் இமயத்து ஜீவ நதிகளும் அவற்றின் இணைப்பும் மனதைக் காலியாக்கிவிடுகின்றன.

Spot 6: Leh Palace

லடாக் பகுதியை நம்ங்கியால் (Namgyal) பேரரசர்கள் குறிப்பிடத்தகுந்த காலத்துக்கு ஆண்டுவந்தனர். அப்படி ஒரு நம்ங்கியால் அரசரின் அரண்மனைக்குத்தான் அடுத்ததாகப் போகப்போகிறோம். நமக்கு அறிமுகமான ஆடம்பர அரண்மனைகளை மறந்துவிடுங்கள். இது வேறுபோல் இருக்கிறது. கோட்டை என்றும் சொல்லமுடியாது இதை. வெறும் மூன்றே ஆண்டுகளில் சிங்கே நம்ங்கியால் அரசர் தனக்காகக் கட்டிக்கொண்ட ஒன்பது அடுக்கு அரண்மனையாகும் இது. கட்டிடக்கலையில் ஒரு Masterpiece என்று அறியப்படுகிறது இந்த பழைமையான அரண்மனை.‌ பாப்லர், ஜூனிபர், வில்லோ மரங்கள் கொண்டு இமயத்துக் கற்களையும் களிமண்ணையும் பயன்படுத்தி முழுக்க முழுக்க திபெத்திய பாணியில் கட்டியிருக்கிறார்கள். ஒன்பது அடுக்குகளில் நூறு அறைகள் உள்ளன இந்த அரண்மனையில். கீழ் அடுக்குகள் பணியாளர்களுக்காகவும், நான்காம் அடுக்கு அசர குடும்பத்தினரின் நிகழ்த்துக்கலை நிகழ்ச்சிகளுக்காகவும், ஐந்தாம் தளம் தர்பார் செயல்பாடுகளுக்காகவும், ஆறாம் தளம் அரச குடும்பத்தினருக்காகவும், ஏழு, எட்டாம் தளங்கள் அரசருக்காகவும், ஒன்பதாவது தளம் அரச‌குடும்பத்தைக் காக்கும் இறைவனுக்காகவும் இருந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்றும் பொலிவோடு இருக்கும் இந்த அரண்மனையை மேலோட்டமாகப் பார்க்கவே முக்கால் மணி நேரம் தேவை தான்.

Spot 7: Shanthi Stupa

இது மற்றொரு புத்த விகாரம். மிக அழகிய ஓவிய வேலைப்பாடுகளோடு உள்ள ஸ்தூபியில் புத்தர் த்யான நிலையில் அமர்ந்திருக்கிறார். காற்றின் இரைச்சலைத் தாண்டி இங்கே நிறைந்திருக்கும் ஒருவித அமைதி நம்‌ மனதுக்குள்ளும் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. இங்கிருந்து லே மாவட்டம் முழுவதும் தெரிகிறது. இங்கே முதல் நாள் சுற்றுலா நிறைவடைகிறது. 8.30 க்குள் தங்குமிடம் சென்றுவிடலாம். இரு புத்த விகாரங்கள், இந்திய இராணுவத்தின் பெருமை பாடும் ஒரு நினைவிடம், சீக்கிய கோவில்,  காந்தக்குன்று, இரு நதிகளின் சங்கமம், ஒன்பது அடுக்கு பிரும்மாண்ட அரண்மனை என்று முதல் நாள் சுற்றுலா மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

தொடர்ந்து பயணிப்போம்...

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT