நூப்ரா பள்ளத்தாக்கு லேவை விடக் குளிரான பகுதி தான். இரவு மிகவும் சில்லென்று தான் இருக்கும். தூங்கி எழுந்து சீக்கிரமே கிளம்ப வேண்டியததுதான்.
Nubra Valleyயில் சுமார் எட்டுக்கெல்லாம் கிளம்பினால் அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு நம் உடலின் உள்ளுறுப்புகள் எல்லாம் இடம் மாறிவிடும்படியான ஒரு மலைப் பயணம் செய்ய வேண்டியதாய் இருக்கும். Terrific Mountain Terrain..
மண் சாலை, சேதமான தார் சாலை, கரடுமுரடு சாலை, குண்டுகுழி சாலை, கூழாங்கல் சாலை, ஐல்லிக்கல் சாலை, நீர் ஓடும் சாலை, சாலையே இல்லாத சாலை, மிகக் குறுகலான பாலங்கள், பக்கத்தில் தடுப்புகளே இல்லாத கொண்டை ஊசி வளைவுகள் என்று ஆபத்தான த்ரில்லிங்கான மலைவழிப் பயணமாக இது இருக்கும். இந்த மொத்தப் பயணத்திலும் நம்மோடு சீனத்திலிருந்து பாய்ந்தோடி வரும் கால்வன் நதியும் (Galwan) இணைந்து கொள்கிறது. இந்த மலைப்பாதை நம்மை இட்டுச்செல்லும் இடம் 'பாங்காங் ஏரி' (Pangong Lake)
நாம் தான் நம் கண்களால் பார்ப்போம். அங்கே தான் இருப்போம். ஆனாலும் நம்மால் நம்பவே முடியாது. அப்படி ஒரு தருணமாய் இருக்கும் வாகனத்திலிருந்து அந்த ஏரியை அணுகும் தருணம். பிறகென்ன 13862அடி உயரத்தில் இமயங்களுக்கு நடுவில் 134 கிமீ நீளத்தில் 5கிமீ அகலத்தில் 700சதுரமீட்டர் பரப்பளவில் பிரும்மாண்டமிக, தெள்ளத்தெளிவாக, ஐந்து நிறங்களில் தெரியும் ஒரு ஏரியைப் பார்த்தால், யாரால்தான் அந்தக்காட்சியை நம்ப முடியும் சொல்லுங்கள் ! பாதி ஏரி தான் இந்தியக்கட்டுப்பாட்டில் இருக்கிறதாம். மீதி பாதி திபெத்திடமும் சீனத்திடமும் இருக்கிறதாம். அந்தப் பாதி ஏரியையே முழுவதும் பார்க்க இரண்டு நாள் ஆகுமாம்.
பாங்காங் ஏரியில் பெரும்பாலும் 3idiots படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட இடத்தில் தான் சுற்றுலாப் பயணிகளை இறக்கி விடுகிறார்கள். படத்தில் கரீனா கபூர் ஓட்டி வரும் அந்த மஞ்சள் ஸ்கூட்டர் கூட இங்கே நிற்கிறது. இதில் ஒருவர் ஒரு புகைப்படம் எடுக்க 70ரூ கட்டணம். சரி அது கிடக்கட்டும்; நாம் ஏரியைப் பார்ப்போம்.
ஏரி நீர் கண்ணாடி போல் இருக்கிறது. சில்லென்றும் இருக்கிறது. குளிர் காலத்தில் இந்த ஏரி முற்றிலுமாக உறைந்து போய்விடுமாம். இதில் சறுக்கு விளையாட்டு விளையாடவே ஒரு கூட்டம் வருமாம். ஆனால் இது உப்புநீர் ஏரி. இத்தனை உயரத்தில் எப்படி உப்பு நீர் என்று யோசித்தால் மில்லியன் ஆண்டுக்கு முன்னர் இந்த இடம் கடலாய்த்தானே இருந்ததென்று நினைவுக்கு வருகிறது. ஸீகல் பறவைகளும் இந்த நீர்ப்பரப்பின் மேல் வட்டமடிக்கின்றன.
காற்றும் மலையும் ஏரியின் அழகும் நம்மைக் கனவுலகில் இருப்பது போல் உணரச் செய்கின்றன. புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏரியின் பின்புலம் வேற லெவல் தான். மனமே இன்றி அங்கிருந்து கிளம்பி அடுத்த இடம் நோக்கிச் செல்ல வேண்டியது தான். மீண்டும் கடாமுடா பயணமா என்று பயம் வேண்டாம். அடுத்த இடம் இராணுவத்தினர் பயன்படுத்தும் வழியில் பயணித்து அடைய வேண்டியது என்பதால் சாலைகள் சுமாராக உள்ளன. பாங்காங் ஏரியில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் நாம் அடையும் அடுத்த இடம் சங்லா கணவாய் – Changla Pass
செங்கல் நிற இமயம் என்பதால் சங்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்தினம் பார்த்த கார்துங்லா போல் இதுவும் ஒரு கணவாய் தான். இயற்கையாகவே மலைகளுக்கிடையில் பயணிக்க உருவான வழி தான். மோட்டார்வாகனம் மூலம் பயணிக்க முடிகிற உயரமான இடத்தில் உள்ள சாலைகளில் இது உலகத்திலேயே பத்தாவது இடம் பிடிக்கிறது. (கார்துங்லா முதலாவது)
கடல் மட்டத்திலிருந்து 17586அடி உயரத்தில் இந்த சங்லா பாஸ் அமைந்திருக்கிறது. இங்கே அழைத்துச் செல்லும் பாதையானது செங்குத்தாக இருக்கிறது. பைக், கார் ஓட்டுவது சவால் தான். இங்கேயும் நல்ல குளிர் நிலவுகிறது. ஆக்சிஜன் பிரச்சனையும் ஏற்படலாம். இந்த இடத்திலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை. பனி மூடி வைத்திருக்கும் சங்லா சிகரத்தையும், கணவாயையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் லே நோக்கிச் சட்டென்று கிளம்பவிட வேண்டியதுதான்.
தலைநகர் லே நோக்கிச் செல்லும் சாலை மிகவும் நன்றாகவே இருக்கிறது. சுமார் 4 மணி நேர பயணத்தில் மீண்டும் லேவிற்கு வந்து சேர்ந்து விடலாம். வழியில் ஒரு பிரும்மாண்டமான புல்வெளியும் அதில் மேயும் லடாக்கின் பஷ்மினா செம்மறி ஆடுகளும் பார்க்கலாம்.
மறுநாள் கண்டிப்பாக ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு எண்ணற்ற புகைப்படங்களுடனும் நினைவுகளுடனும் நம் ஊர் நோக்கித் திரும்பலாம்.
நான்கு நாட்கள் லடாக் சுற்றுலா இனிதே நிறைவுற்றது.
குழந்தைகள், நடுத்தர வயதினர், வயது மூத்தவர்கள் என அனைவரும் உள்ளபடியானதொரு குடும்பம், லடாக் பகுதியில் ஆறு நாட்கள் தங்கி அதில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்க்கும் படியான ஏற்பாட்டினைத் தான் இந்தப் பயணத்தொடர் விளக்கி இருக்கிறது.
குடும்ப சுற்றுலா மட்டும் தான் என்றில்லாமல் நண்பர்களோடு சேர்ந்து சாகசப் பயணமாகவும் லடாக் சென்று வரலாம். Rafting, Para Gliding, Zip Line போன்ற சாகச விளையாட்டுகளும் இங்கே உள்ளன. புதுமணத் தம்பதியரும் தேனிலவு சுற்றுலாவுக்காக லடாக் போய் வரலாம். மலைச்சாலைகளில் பைக்குகளில் சுற்ற விரும்புபவர்களுக்கும் லடாக் ஏற்ற இடம். ஜியாலஜிஸ்ட்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவைகளைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் லடாக் ஏற்ற இடமாக விளங்குகிறது. அணுகுபவருக்கேற்ப அவரின் எதிர்பார்ப்புக்கேற்ப லடாக் தன் நிறம் காட்டி வியக்கவைக்கும்.
மொத்தத்தில் மனிதர்களின் குறுக்கீடு இன்னும் பெரிதாக இல்லாத, முழுக்க முழுக்க, இயற்கையின் Rawவான அரசாட்சி நடக்கும் இடமாக லடாக் இருக்கிறது.
மருந்துக்கு கூட பச்சை இல்லாத கட்டாந்தரை மலைகள், மலைகள் இணையும் இடங்களில் விரிந்து கிடக்கும் பாலைவன சமவெளி, இடையில் பாய்ந்தோடி வரும் நதி, ஆனால் இது மொத்தமும் இருப்பது ஒரு பள்ளத்தாக்கு. இப்படிப்பட்ட லொகேஷனை யாரால் சிந்தித்து விட முடியும்? இப்படிப்பட்ட காம்பினேஷனை யாரால் உருவாக்கி விட முடியும்? இயற்கையைத் தவிர… கண்டிப்பாக இந்த இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் உதித்திருக்கும். நிச்சயமாக நன்கு திட்டமிட்டுப் போய் வாருங்கள். (ஐவர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆறு நாள் சுற்றுலாவுக்கு ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய் செலவாகலாம்.)
பயணம் முடிந்தது... மனம் நிறைந்தது!