தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைத் தொடர் என்றால் அது நீலகிரி மலைத்தொடர்தான். அதற்கு தேயிலைத் தோட்டங்கள், அழகான மலைச் சரிவுகள், பாறைகள் என எண்ணற்ற இயற்கையின் வரப்பிரசாதங்களே காரணம். கோடைக்காலங்களில் வெயிலிலிருந்து தப்பிக்க நீலகிரிக்குச் செல்லலாம். மேலும் இது தமிழ்நாட்டில் உள்ளதால் சிறிய பட்ஜெட்டில் மனத் திருப்தியுடன் பயணம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வகையில் நீலகிரிக்கு மூன்று நாள் பயணமாக எந்தெந்த இடங்களுக்குச் செல்லலாம் என்பதைப் பார்ப்போம்.
முதல் நாள் பயணத்தை காலை ஊட்டி ஏரியிலிருந்து ஆரம்பிக்கலாம். அங்கு படகு சவாரி செய்துக்கொண்டு மலைகளின் அழகை நீரிலிருந்து ரசிக்கலாம். பின்னர் அந்த இடத்திலேயே இயற்கை அழகை ரசிப்பதற்கு ஏற்றவாரு ஒரு ஹோட்டல் தேர்ந்தெடுத்து உணவருந்திவிட்டு அந்த ஏரியின் அருகே காலைப் பொழுதைக் கழிக்கலாம். அதேபோல் மதியம் இந்தியாவிலேயே பெரிய பூங்காவான அரசு ரோஜா பூங்காவிற்கு சென்று பல வண்ணங்களில் இருக்கும் பூக்களை கண்டு ரசிக்கலாம். அதன்பின்னர் மதிய உணவு எடுத்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக்கொள்ளலாம். சூர்யன் மறையும் நேரத்தில் ஊட்டி பொட்டானிக்கல் பூங்காவிற்கு சென்று இரவு வரை நேரத்தைச் செலவிடலாம்.
இரண்டாம் நாள் காலையில் குன்னூருக்கு சென்று நீலகிரி மலையின் அழகை ரசிக்கலாம். அதன்பிறகு சிம்ஸ் (Sims) பூங்காவில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று தேயிலை உற்பத்தி செய்வதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். மதியம் போல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமான நீலகிரி மலை ரயில் மூலம் குன்னூரிலிருந்து ஊட்டிக்கு செல்லலாம். இந்த ரயிலிலிருந்து மலைகளை ரசிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஊட்டியில் மதிய உணவு சாப்பிட்டப் பின்னர் மாலையில் செயின்ட் ஸ்டிஃபன் சர்ச் (St. Stephan church) சென்று அமைதியான நேரங்களை செலவிடலாம். அந்த சர்ச்சின் கலைநயமிக்க கட்டடங்களைப் பார்த்து ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பலாம். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பயணத்திற்கு சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாம் நாள் காலையில் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் கூடலூர் பழங்குடி அருங்காட்சியகத்திற்கு சென்று பழங்குடி மக்களின் கலாச்சாரத்தைப் பற்றியும் கலைப் பொருட்களைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம். அதன்பின்னர் நீடில் ராக் வியூ பாய்ண்ட் (Needle rock view point) சென்று அங்கேயே மதிய உணவு எடுத்துக்கொண்டு அந்த பல்லத்தாக்குகளைப் பார்த்து ரசிக்கலாம். இதனையடுத்து ஃப்ராக் ஹில் வியூ பாய்ண்ட் ( Frog hill view point) என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள தனித்துவமான பாறை வடிவமைப்புகளைப் பார்த்து பொழுதைக் கழிக்கலாம். இறுதியாக கூடலூர் தேயிலை எஸ்டேட் பகுதியில் இரவு நேரங்களைக் கழித்துவிட்டு நீலகிரி பயணத்தை முடித்துக்கொள்ளலாம்.