காதலர் தினத்திற்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இதய வடிவத்தில் இருக்கும் இடங்களுக்கு ஒரு விசிட்டை போட வேண்டியது அவசியமாகும். அதுவும் அப்படிப்பட்ட இடங்கள் இந்தியாவிலேயே இருக்கிறது என்று சொன்னால் போகாமல் இருக்க முடியுமா என்ன?
கேரளாவில் உள்ள வயநாடில்தான் செம்பரா ஏரி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ளது. பார்ப்பதற்கு இதயத்தின் வடிவத்தை அப்படியே கொண்டிருக்கும் இந்த ஏரி பச்சைபசேல் புல்வெளி மற்றும் மலைத்தொடருக்கு நடுவிலே அமைந்துள்ளது. இவ்விடத்தை அடைவதற்கு 3.5கிலோ மீட்டர் மலையேறி போக வேண்டியிருக்கும்.
அதன் இதய வடிவத்தின் காரணமாக இந்த ஏரியை “ஹிரதயசாரஸ்” என்றும் மக்கள் அழைப்பதுண்டு. இதற்கு இதய வடிவத்தில் உள்ள ஏரி என்று பொருள். இந்த ஏரியை காண்பதற்காகவே சாகச பிரியர்கள் மலையேற்றம் செய்து வந்து, இந்த ஏரியின் அழகை ரசித்துவிட்டு செல்கிறார்கள்.
மன்னவணூர் ஏரியும் பார்ப்பதற்கு இதய வடிவத்திலேயே இருக்கும். இது கொடைக்கானலிலே உள்ள பூம்பாறை என்னும் ஊரிலே அமைந்துள்ளது. இயற்கை அழகுடன் சேர்த்து இதய வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரிதான் உலகத்திலேயே மிக பெரிய இதய வடிவத்தில் இருக்கும் ஏரி என்று உலக சுற்றுலா மாநாடு அறிவித்திருக்கிறது. இதை உலகத்தின் இதயம் என்று குறிப்பிடுகிறது. இந்த ஏரி முஸி ஆற்றில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் நடுவிலே புத்தர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை அழகுடன் கூடிய இவ்விடத்தில் படகு சவாரி செய்யவும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நேத்ரானி தீவு இந்தியாவில் உள்ள அரேபிய பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய இதய வடிவத்தில் இருக்கும் தீவாகும். இதை பாஜிரங் தீவு, புறா தீவு, இதய தீவு என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உள்ள ஒரே இதய வடிவிலான தீவு இதுமட்டுமேயாகும். இங்கே அதிகமாக ஆடுகளும், புறாக்களும் வசிக்கின்றன.
அதனாலேயே இவ்விடத்திற்கு புறா தீவு என்ற பெயரும் வந்தது. மேலிருந்து கழுகு பார்வையில் பார்க்கையில், இந்த தீவு இதய வடிவத்தில் இருக்கும். இங்கே ஸ்கூப்பா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளும் இருக்கிறது. பிரபலமான ஜெய் பாஜிரங்பாலி கோவில் இங்கே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜிரங்பாலி ஒரு பழமையான அனுமன் கோவிலாகும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவதுண்டு. அனுமன் இவ்விடத்திற்கு வந்து ராமரின் களிமண் சிலையை இங்கே நிறுவி வழிப்பட்டார் என்பது புராணக்கதை.
எனவே காதலர் தினத்தையொட்டி இதுபோன்ற சுற்றுலாத்தலத்திற்கு சென்று வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.