Poland Travel 
பயணம்

போலந்து பயணம் 1: போலந்து நாட்டில் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்கள்!

ரெ. ஆத்மநாதன்

மத்திய ஐரோப்பாவில் உள்ள போலந்து நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்காலந்தொட்டே இங்கு மக்கள் சிறந்து வாழ்ந்துள்ளதாக சரித்திரம் கட்டியங் கூறுகிறது. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பிலிருந்தே இங்கு வளமான வாழ்க்கை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. உலக நிலப் பரப்பில் 69 வது இடத்தையும், மக்கட் தொகையில் 38 வது இடத்தையும் கொண்ட, மக்களாட்சி நடைபெறும் இந் நாட்டில், போலிய மொழி (Polish) பேசும் போலியர்களே அதிகம் வாழ்கிறார்கள். ’ஸ்வாட்டெ’ என்பது இங்குள்ள பணத்தின் பெயர்.

அந்த நாட்டிற்கு 12 நாள் பயணமாக சுற்றுலா சென்றுவரக் கிளம்பினோம். வாசக நண்பர்களாகிய உங்களையும் உடன் அழைத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி.

தெற்கிலுள்ள ‘க்ரகோவ்’ (Krakow) நகரில் தொடங்கியது எங்கள் பயணம். இந்த பயணத்தைக் பற்றி மட்டும் இப்பதிவில் சொல்கிறேன்.

Poland

அதோ சூரிக் விமான நிலையத்தில் க்ரகோவ் (krakow) செல்லும் விமானம் தயாராக நிற்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரப் பயணந்தான். மாலை வெயில் இதம் தந்தது!

க்ரகோவ் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு காரில் கிளம்பினோம். காரை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாமே ஓட்டிக் கொள்ளலாம். திரும்பவும் விமான நிலையத்தில் காரை விட்டு விட்டு, நாம் பயணத்தைத் தொடரலாம். பன்னாட்டு ஓட்டுனர் உரிமம் (International Driving Licence) வைத்திருப்பதுடன், அந்தந்த நாட்டு சாலை விதிகளும் நமக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டலில் தங்குவதற்குப் பதிலாக வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கலாம். அங்கு, நமக்கு வேண்டிய உணவை நாமே தயாரித்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. எல்லா இடங்களிலுமே தற்போது இந்தியன் ரெஸ்டாரெண்டுகளும் உள்ளன.

Poland Places

நகரின் அழகை ரசித்தபடி தங்கும் வீட்டிற்குச் சென்றோம். இங்கு குளிர் காலங்களில் சீதோஷ்ணம் (-)டிகிரிக்குச் சென்று விடுவதால், மிகச் சில வீடுகளில் மட்டுமே ஏ.சி., பொருத்தியுள்ளார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் வெப்பம் தரும் ஹீட்டர்கள் உண்டு.

முதல் நாள், உப்புச் சுரங்கம் மற்றும் மியூசியம் (Cracow Saltworks Museum in Wieliczka) பார்க்கச் சென்றோம்.

சுமார் 130 மீட்டர் (427 அடிகள்) ஆழத்திற்கு, மரப்படிகள் மூலம், கீழே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பழமையானது என்று கூறுகிறார்கள். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டை (castle) கட்டப்பட்டுள்ளது.

அதில்தான் உப்புத் தொழிற்சாலையின் நிர்வாக அலுவலகம் இயங்கியதாம். உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை இதுவென்றும் மிக நீண்ட காலமாக இயங்கி வந்ததென்றும் கூறுகிறார்கள். உள்ளேயிருந்து உப்பை உற்பத்தி செய்ததையும், மேலே கொண்டு வந்ததையும் விளக்கமாகக் காண்பிக்கிறார்கள். ஆங்கிலம், ஜெர்மன் போன்ற பல மொழி கைடுகள் உள்ளனர்.

உலக அரங்கில் உப்பு வரலாற்றுச் சிறப்புப் பெற்றிருக்கிறது. நமது நாட்டில் காந்தி மகான் உப்புச் சத்தியாக்கிரகம் செய்தது மறக்க முடியாதது ஆயிற்றே! வேதாரண்யம் சிறப்படைய இதுவும் காரணமல்லவா?

உப்பை வெடிகளாகவும் பயன்படுத்தி, எதிரிகளை நிலை குலையச் செய்திருக்கிறார்கள்! சுரங்கத்தின் உள்ளேயே சர்ச்சும், பெரிய மண்டபங்களும், சிறிய ஏரிகளும் உள்ளன. பாதுகாப்பு கருதி, பெரும் மரச் சட்டங்களைக் கொண்டு, எல்லா இடங்களையும், தக்க முறையில் பலப்படுத்தி வைத்துள்ளார்கள்.

ஆங்காங்கே ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. ஒரு சிறு தனி உலகமாகவே நமக்குத் தோன்றுகிறது. வானமும், வட்ட நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும் மட்டுந்தான் உள்ளே தெரியவில்லையே தவிர மற்றபடி 400 அடிகளுக்குக் கீழே இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை.

டுத்த நாள் ஆகாய விமான மியூசியம் சென்றோம். சுமார் 250 விமானங்களைப் பார்வைக்கு வைத்து நம்மை மிரளச் செய்கிறார்கள். விமானங்களின் வளர்ச்சியையும், போலந்துக்காரர்களின் பங்களிப்பையும் விளக்கியுள்ளார்கள்.

Poland Aviation Museum

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திலேயே போலந்து வீழ்ச்சியடைந்தாலும், அந்நாட்டு விமானிகள் பல நாட்டுப் படைகளிலும் சேர்ந்து உயரிய பொறுப்புகளை வகுத்துள்ளார்கள். போலந்துக் காரர்களின் திறமை பிரமிக்க வைக்கிறது!

சுமார் 100 க்கும் மேற்பட்ட விமான எஞ்சின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.1908 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை உள்ளவை அவை. அவற்றோடு, அவ்வப்போது உள்ள விமானிகளின் ஆடைகள், பதக்கங்கள் என அனைத்தும் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

அதோடு மட்டுமல்லாது ஹெலிகாப்டர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்திற்குள் மட்டுமல்லாமல்,பெரிய திடலிலும் விமானங்களை நிறுத்தியுள்ளார்கள். சிலவற்றில் உள் சென்று பார்க்கவும் வசதி செய்துள்ளார்கள்.

உள்ளே மாநாட்டு (Conference) அறைகள், நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்த ஏதுவான அறைகள், இசை விழாக்கள் நடத்தும் பகுதி, சிறுவர்கள் பிறந்த நாள் கொண்டாட என்று அனைத்து வசதிகளும் உண்டு.

மூன்றாம் நாள் அங்குள்ள கோட்டைக்குச் சென்றோம். அதனையொட்டிய சிட்டி சென்டர் சிறப்பாக உள்ளது. அலங்கரிக்கப்பட்ட இரு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டிகள் வரிசையாக நிற்கின்றன… பயணிகளை நகர் வலம் அழைத்துச் செல்ல!புறாக்களும், சிறுவர்களுமாக அந்தப் பெரு மைதானமே உற்சாகத்தில் திளைக்கிறது!

அங்கிருந்து கடோவிஸ் பயணமானோம்!

- ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT