இந்தியாவிலிருக்கும் பஞ்சாப், அரியானா எனும் இரு மாநிலங்களின் தலைநகராக இருக்கும் சண்டிகர் நகரம், இந்திய அரசின் ஒன்றியப் பகுதியாக இருந்து வருகிறது. இந்நகரத்தில் சிற்பத் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் இத்தோட்டத்தை சண்டிகர் பாறைச் சிற்பத் தோட்டம் (Rock Garden of Chandigarh) என்றும், இத்தோட்டத்தை உருவாக்கிய நேக் சந்த் என்பவரின் பெயரைக் கொண்டு, நேக் சந்த் பாறைச் சிற்பத் தோட்டம் (Nek Chand Saini's Rock Garden) என்றும் அழைக்கின்றனர்.
தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் மற்றும் தேவையில்லையென்று தூக்கியெறியப்பட்ட பொருட்களிலிருந்து 40 ஏக்கர் பரப்பளவில் இந்தச் சிற்பத் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பத் தோட்டத்தில் நீர்வீழ்ச்சிகள், குளங்கள், பசுமைப் புல்வெளிகள் என்று இயற்கையான சூழல்களும் அமைந்திருக்கின்றன.
இந்தச் சிற்பத்தோட்டம் அமைந்தது ஒரு சுவையான வரலாறு.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சகர்பூர் (தற்போதைய பாகிஸ்தானில் நரோவல் மாவட்டத்திலிருக்கிறது) எனுமிடத்தில் 1924 ஆம் ஆண்டு பிறந்த நேக் சந்த், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, 1947 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் சண்டிகர் நகரத்துக்குக் குடிபெயர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் சண்டிகர் நகரில் பொதுப்பணித்துறையில் சாலை ஆய்வாளராகப் பணியைத் தொடங்கிய அவர், அப்பணியை முடித்து ஓய்வு நேரங்களில், நகரிலுள்ள கட்டிடங்களின் இடிப்புகளிலிருந்து கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து வந்தார்.
தான் சேகரித்த கழிவுப் பொருட்களையெல்லாம் சுக்னா ஏரிக்கு அருகிலுள்ள காட்டில் ஒரு பள்ளத்தாக்கைத் தேர்வு செய்து அங்கு கொண்டு போய்ச் சேர்த்து வைத்திருந்தார். அந்தப் பள்ளத்தாக்கு வனப்பாதுகாப்பு பகுதியாக இருந்ததுடன் அங்கு எந்தவொரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்கிற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. எனவே அந்தப் பகுதிக்குள் யாரும் செல்வதில்லை.
பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதியில் யாருக்கும் தெரியாமல், 1958 ஆம் ஆண்டு முதல் நேக் சந்த், தான் சேகரித்து வைத்திருந்த பாட்டில்கள், கண்ணாடிகள், வளையல்கள், ஓடுகள், பீங்கான் பானைகள், மூழ்கிகள், மின் கழிவுகள், உடைந்த குழாய்கள் போன்ற பல்வேறு கழிவுப் பொருட்களைக் கொண்டு பல்வேறு சிற்பங்கள், பாதைகள், நீர்வீழ்ச்சிகள், கோயில்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய அழகிய சிற்பத் தோட்டத்தை வடிவமைத்தார்.
இத்தோட்டம் 12 ஏக்கர் (4.9 ஹெக்டேர்) பரப்பளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல்வேறு முற்றங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முற்றத்திலும் நடனக்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் விலங்குகள் உருவங்களிலான மட்பாண்டங்களால் மூடப்பட்ட பைஞ்சுதைப்பூச்சுச் சிலைகள் (Concrete Sculptures) போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.
நேக் சந்த்தால் அமைக்கப்பட்ட இந்தச் சிற்பத் தோட்டம் 1976 ஆம் ஆண்டு வரை வெளியில் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. 1976 ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, வனப்பகுதியில் சட்ட விரோதமாக இந்தச் சிற்பத் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கிருந்த சிற்பத் தோட்டத்தை அழிக்க முடிவு செய்தனர்.
அவ்வேளையில் நேக் சந்திற்கு ஆதரவாகப் பொதுமக்கள் பலரும் போராடத் தொடங்கியதால், அச்சிற்பத் தோட்டத்தை அழிக்கும் முடிவு கைவிடப்பட்டது. அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டில் இப்பகுதி பொதுப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. நேக் சந்துக்குச் சிற்பத் தோட்டத்தை அமைத்துக் கண்காணிக்கும் துணைக் கோட்டப் பொறியாளர் பணி வழங்கப்பட்டதுடன், அவரின் கீழ் பணியாற்றுவதற்காக 50 தொழிலாளர்களும் வழங்கப்பட்டனர். அவர்களைக் கொண்டு நேக் சந்த் தான் திட்டமிட்டபடி ஒரு அழகிய சிற்பத் தோட்டத்தை உருவாக்கினார்.
இச்சிற்பத் தோட்டப் பணி நிறைவு செய்யப்பட்ட பின்பு, உலகம் முழுவதுமிருந்து இச்சிற்பத் தோட்டத்தைப் பார்வையிடச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்த நிலையில் அனைவராலும் பார்வையிடக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இச்சிற்பத் தோட்டம் அமைந்திருக்கிறது.
1983 ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை இத்தோட்டத்தின் ஒரு பகுதியை அஞ்சல்தலையாக வெளியிட்டுச் சிறப்பித்தது. 1984 ஆம் ஆண்டில் நேக் சந்திற்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் இந்தச் சிற்பத் தோட்டம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
இச்சிற்பத் தோட்டப் பகுதியில் 2017 ஆம் ஆண்டில், நேக் சந்தின் இரண்டாவது நினைவு நாளின் போது, 2015 ஆம் ஆண்டில் மறைந்த நேக் சந்த் 1970 ஆம் ஆண்டில் கழிவுத் துணிகளைக் கொண்டு உருவாக்கி வைத்திருந்த 200 கந்தல் பொம்மைகளைக் கொண்ட அருங்காட்சியகத்தை அப்போதைய சண்டிகர் ஒன்றியப் பகுதியின் நிருவாக அதிகாரி வி.பி. சிங் பந்தோர் திறந்து வைத்தார். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் பொம்மைகளையும் பார்வையிடலாம்.
சண்டிகர் பாறைச் சிற்பத் தோட்டத்தினைப் பார்வையிட காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர் கட்டணமாக, இந்தியாவைச் சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.30/- என்றும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.200/- என்றும் கட்டணம் பெறப்படுகிறது.