இன்று (அக்டோபர்-19) ஐப்பசி மாத கார்த்திகை அழகன் முருகனை வணங்க வேண்டிய ஒரு அற்புதமான நாள். சண்முகா என்று கூறியவர்களுக்கு சங்கடங்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருகன் பல்வேறு ஆலயங்களில் பல்வேறு அழகு முருகனாய் காட்சியளிக்கிறார். இப்பதிவில் 10 முருகன் கோயில் முருகனின் சிறப்பு தரிசனம் பற்றி பார்ப்போம்.
1-நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.
2-ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோயிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்யாசமான ஆலயமிது.
3-மகாபலிபுரம் அருகே 'வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் சந்நதியில கண்ணீர் வடித்த நிலையில் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார்.
4-மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கை குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.
5-திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.
6-புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது 'ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் இறைவன் ஒரு கரத்தில் ஜெபமாலையுடனும் மறுகரத்தில் 'சின்' முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
7-கனக்கிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
8-செம்பனார் கோயில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் 'ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்க மாலை கொண்டு தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.
9-மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது திருவிடைக்கழி. இங்குள்ள முருகன் கோயிலில் குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
10-மாம்பழத்திற்காக கோபம் கொண்டு பழனியில் ஆண்டிக் கோலம் பூண்ட முருகப் பெருமான் 'திருநள்ளாறு' தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்தோடு காட்சி தருகிறார்.