பிரதோஷங்களிலே ஏன் சனி பிரதோஷம் மிகவும் சிறப்புமிக்கதாக சொல்லப்படுகிறது என்பது தெரியுமா? தோஷம் என்ற வடமொழி சொல்லிற்கு ‘குற்றம்’ என்று பொருள். பிரதோஷம் என்றால் ‘குற்றமற்றது’ என்று பொருள். குற்றமற்ற இந்த வேளையில் ஈசனை வழிப்பட்டால், நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
புராணகதைப்படி, தேவர்கள் பார்க்கடலை கடைந்தப்போது அதிலிருந்து வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார்.
ஏகாதசி நாளன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரியோதசி நாளில் பகலும், இரவும் சந்திக்கும் சந்தியாவேளையில் எழுந்து சூலத்தை சுழற்றி, டமருகத்தை ஒலித்து ‘சந்தியா நிறுத்தம்’ என்னும் நாட்டியத்தை ஆடினார்.
சிவபெருமான் மயக்க நிலையில் இருந்து எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியது, சனிக்கிழமை திரியோதசி திதி. அதனால்தான் சனிக்கிழமைகளில் வருகிற திரியோதசி திதிக்கு மகாபிரதோஷம் என்று பெயர். தேவர்கள் மகிழ்ச்சியடையும் பொருட்டு ரிஷபத்தின் பிரண வடிவமான கொம்புகளின் நடுவிலே சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார்.
நந்தி பெருமானின் கொம்புகளுக்கு நடுவே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால், அந்த நாளில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவிலே சிவனை தரிசிப்பது சிறப்பாகும். கோவிலுக்கு செல்லும்போது வழக்கமாக இடமிருந்து வலமாக இறைவனைச்சுற்றி வந்து வங்குவோம். ஆனால் பிரதோஷ நாளில் வலமும், இடமுமாக மாறி மாறிவந்து சிவபெருமானை வணங்க வேண்டும். இதை ‘ சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று கூறுவார்கள்.
முதலில் நந்திதேவரிடமிருந்து தொடங்கி இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து நந்திதேவரை வணங்கி வலப்புறமாக கோமுகி வரை வந்து மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வலம் வந்த பிறகு நந்திதேவரின் கொம்புகளுக்கு நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை வலம் வருவதற்கு பெயர் ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று அர்த்தம். இவ்வாறு சனிபிரதோஷ நாளன்று சிவபெருமானையும், நந்திதேவரையும் வணங்கினால், அனைத்து தோஷங்களும் நீங்கி சகலமும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.