பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதையொட்டி அன்றிரவுப் பொழுதில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார் பார்வதி தேவி. நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார். பூஜையின் முடிவில் சிவனை வணங்கி தான் பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் சிவனுடைய திருநாமத்தால், அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்ல; மஹாசிவராத்திரி அன்று சூரியன் அஸ்தமமானது முதல் மறுநாள் காலை சூரிய உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார் பார்வதி தேவி.
திரயோதசி சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளுமே விசேஷமானவை. திரயோதசி அன்னை பார்வதியின் வடிவம். சதுர்த்தசி சிவனின் வடிவம் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. மகாபிரளய காலத்துக்குப் பின் சிவனுள் சக்தி ஒடுங்கி நின்ற தினமே மகாசிவராத்திரி. இந்த பிரபஞ்சத்தின் சக்தியாகிய அன்னையும் பிரபஞ்சப் பெருவெளியாகிய ஐயனுமாகிய இந்த இரண்டு மகா சக்திகளும் இணைந்து அருளும் தினம்தான் சிவராத்திரி என்பதால் இந்த தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த உலகில் நன்மை, தீமைகளைத் தெரிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதான். சிவராத்திரி நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். இதற்கு உதாரணமாக புராணத்தில் கதை ஒன்றிருக்கிறது. குரங்கு ஒன்று ஒரு வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பிய்த்து கீழே போட்டுக் கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடமோ லிங்கத் திருமேனி! அன்றைய நாளோ சிவராத்திரி. சிவராத்திரி இரவில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு பலனாய் இறைவன் குரங்கை மறுபிறவியில் முசுகுந்த சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார். நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர் வேத
ஸ்ரீ ருத்ரம். அந்த ஸ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல் 'சிவ' என்பது. ’சிவ’ எனும் எளிய வார்த்தையைச் சொல்ல சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மனித குலத்தின் பலவீனமே உணவும் தூக்கமும்தான். சிவராத்திரி அன்று ஒரு நாள் உணவருந்தாமல் அதற்கு பதில் பழங்கள் மட்டும் சாப்பிட்டு இரவு தூங்காமல் தேவாரம், சிவபுராணம், திருவாசகம், பெரிய புராணம் உள்ளிட்ட சிவன் தோத்திரப் பாடல்களைப் படிக்கலாம். அல்லது 'ஓம் நமசிவாய' என்று ஜபிக்கலாம். சிவராத்திரி அன்று ஒரே ஒரு வில்வ தளத்தையாவது (மூன்று இலைகள் கொண்ட ஒரு கொத்து) சிவனுக்கு 'ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்று கூறி அர்ச்சித்து வழிபட வேண்டும். சிவபெருமானின் அர்ச்சனைக்கு வில்வத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.
சிவராத்திரி வழிபாடு அனைத்து சிவஸ்தலங்களிலும் கொண்டாடப்பட்டாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது திருவண்ணாமலையில்தான். ஈசனின் முடி, அடியை திருமால் வராகமாகவும் பிரம்மா அன்னப்பறவையாகவும் வடிவெடுத்துத் தேடியபொழுது சிவபெருமான் மாபெரும் ஒளிப்பிழம்பாக காட்சி தந்தருளிய திருநாள் சிவராத்திரியாகும்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போல், சிவராத்திரி அன்றிரவு செய்யப்படும் கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றது. பௌர்ணமியைப் போல லட்சக்கணக்கில் இல்லாமல் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே கிரிவலம் செய்வதை இன்று பார்க்கலாம். சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனை நான்கு யாமமும் வழிபடுவது வழக்கம். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது வழிபட்ட பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோயில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.
இந்த வருடம் சிவராத்திரி பிப்ரவரி 18ம் தேதி வருகிறது. முடிந்தவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று அங்கு நான்கு யாமங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர கண்டு தரிசிக்கலாம். சிவபெருமானை வழிபட்டால், வாழ்வில் செல்வம், புகழ், உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை என அனைத்து வகையான வளங்களையும் ஈசனின் அருளால் பெறலாம்.