Vel
Vel
தீபம்

மாலையில் மகாலட்சுமியை தரித்த மாலவன்!

அமுதா அசோக்ராஜா

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். இது 200 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்த குடைவரைக் கோயிலாகும். இந்த மலையும் அதன் மீது அமைந்த கோயிலும் மகாவிஷ்ணுவின் கோட்டையாகத் திகழ்கிறது. மலையின் கீழே ஸ்ரீ ரங்கநாதர், மலையின் மேலே அமைந்த கோட்டையில் ஸ்ரீ வரதர், மலையின் மேலே ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி என மூன்று அவதாரங்களில் பெருமாள் இங்கே வீற்றிருக்கிறார். மூன்று வெவ்வேறு விதங்களில் பெருமாள் அருள்பாலித்தாலும் இத்தலத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார்.

கோயிலுக்கு முன்னே பதினெட்டு அடி உயரத்தில் அனுமன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். அடுத்து, கருவறையில் பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது மூலவர் நரசிம்ம பெருமான் வலது காலை தரையில் ஊன்றியும், இடது காலை மடி மீதும் வைத்தும் அமர்ந்த நிலையில், உக்கிர திருக்கோலத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இத்தல நரசிம்மர் குடவரை மூர்த்தி என்பதால் இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. உத்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் பெருமானின் இரு புறங்களிலும் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நரசிம்ம பெருமான் திருமார்பை அலங்கரிக்கும் மாலையில் தாயார் மகாலட்சுமியை அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

நாமகிரி தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமனை தரிசிக்கலாம். பக்த அனுமனின் கண்கள் நரசிம்மரின் திருப்பாதங்களை தரிசிப்பதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டையின் மேற்கே அரங்கநாதரை தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையையும் வடக்கே காலையும் நீட்டிச் சயனித்திருக்கும் திருக்கோலம். இவரது காலடியில் சங்கரநாராயணரை தரிசிக்கலாம். அவருக்குச் சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயார் தரிசனம்.

லையிலிருந்து கீழே இறங்கி வந்தால், அனுமனுக்கு தாகம் தீர்த்த கமலாலய திருக்குளத்தைக் காணலாம். தம்மைப் பிரிந்த நாயகரை அடையவேண்டி மகாலட்சுமி தாயார் இந்தக் கமலாலய தீர்த்தக் கரையில் தவம் புரிந்தார். பெருமான் இத்தலம் வந்தடைந்ததற்கு இந்தத் தீர்த்தக் குளமும் ஒரு காரணமாகும். இரண்யனை வதம் செய்த நரசிம்மர், யாரும் நெருங்க முடியாதபடி உக்கிரத்துடன் காட்சி தந்தார். பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க, சாந்தமூர்த்தியாகி சாளக்ராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்ராம நரசிம்மரையும் கொண்டு வர, இந்தக் கமலாலய தீர்த்தத்தில் தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து கையிலிருந்த நரசிம்மரை கீழே வைத்தார். தாகம் தீர்ந்ததும் நரசிம்மரை அனுமனால் தூக்க முடியவில்லை. தம்மை நினைத்து அன்னை மகாலட்சுமி இங்கே தவம் புரிவதால் நரசிம்மரும் இங்கேயே தங்கி விட்டதாகக் கூறுவர்.

அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட இந்த நரசிம்மர், வரம் தருவதில் மிகவும் வரப்ரசாதியாகத் திகழ்கிறார். இத்தலத்துக் குடைவரைக் கோயில்கள் 1300 ஆண்டுகளுக்கு முன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவையாகும். ‘அதியேந்திர விஷ்ணு கிரகம்’ என இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரசிம்ம ஜயந்தி, அனுமன் ஜயந்தி ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் விசேஷ விழாக்கள் ஆகும். அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற நரசிம்மரை பிரார்த்தனை செய்கின்றனர் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் நரசிம்மருக்கு அபிஷேகம் செய்தும், வெற்றிலை மாலை சாத்தியும் மற்றும் புது வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

கணித மேதை ராமானுஜம், நாமகிரி தாயாரின் பரம பக்தர். கடினமான கணக்குகளுக்கு கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். இப்படி இவருக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளதாக முன்னோர்கள் கூறுவர் என்பது கூடுதல் செய்தி.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT