Kuthu Vilakku 
தீபம்

சீன நாட்டின் ஜனாதிபதிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட 108 முகங்கள் கொண்ட குத்துவிளக்கு எங்கு செய்யப்பட்டது தெரியுமா?

ராதா ரமேஷ்

வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ எந்த ஒரு சுப காரியங்கள் நடைபெற்றாலும் முதலில் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்குவது தான் வழக்கம். ஏனெனில் சுப காரியங்களை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கும் போது அந்த காரியம் மங்களகரமாக தொடங்கப்பட்டு நல்ல விதமாக முடியும் என்பது  நம்மிடையே  தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. அத்தகைய குத்து விளக்குகளுக்கு மிகவும் பெயர் பெற்ற நாச்சியார் கோயில் குத்துவிளக்கின் பின்னணி என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது நாச்சியார் கோவில். நாகர்கோவிலில் இருந்து நாச்சியார்கோவிலுக்கு இடம்பெயர்ந்த  கம்மாளர் பிரிவை சேர்ந்த கைவினை கலைஞர்களால் பிரத்தியேகமாக செய்யப்படுவது தான் இந்த நாச்சியார் கோவில் குத்துவிளக்குகள். பாரம்பரியமாக பல தலைமுறைகளாக நாச்சியார் கோவில் குத்துவிளக்கானது செய்யப்பட்டு வருகிறது. அடித்தளம், நீளமான தண்டு, எண்ணெய் கொள்கலன் அல்லது தாங்குலி மற்றும் மேல் உச்சி என நான்கு பாகங்களாக தனித்தனியே தயாரிக்கப்பட்டு திருகுகள் போன்ற அமைப்பை பயன்படுத்தி அவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன.

பித்தளை, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் மற்றும் மெழுகு வார்ப்புகள், வண்டல் மண் போன்றவை விளக்கு தயாரிப்புக்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன. நாச்சியார் கோவில் விளக்குகள்  தயாரிப்பதற்கு முக்கியமானபொருளாக பார்க்கப்படுவது நாச்சியார் கோவிலின் ஆற்றுப் படுகைகளில் உள்ள வண்டல் மண். இந்த ஆற்று படுகை மண் நன்கு சலித்து பவுடர் போன்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டு அதன் பின்பு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மரப்பெட்டியில் மண்ணை எடுத்து அதில் குத்துவிளக்கு அச்சினை வைத்து, உலோக கலவையை ஊற்றி, அதற்கு மேலும்  மண்ணை போட்டு நன்கு தட்டி எடுத்து அதன் பின், பூச்சு வேலைகள், அலங்காரம், பாலிஷ் என பல்வேறு படிநிலைகளை கடந்து தான் ஒரு குத்துவிளக்கானது தயாரிக்கப்படுகிறது. 

இந்த குத்துவிளக்கு செய்முறையும் கிட்டத்தட்ட சிற்பம் செய்வது போன்று மிகவும் நுணுக்கமான ஒரு வேலைப்பாடு தான். அதில் அலங்காரங்கள் செய்யும் போது அதன் உள் அமைப்புகள்  கடினத் தன்மையோடு இருந்தால்தான் விரும்பிய டிசைன்களை அதில் கொண்டு வர முடியும் என்பதாலே விளக்குகளுக்குள் மண் வைத்து செய்யப்படுகிறது. மிகவும் அதிக வேலைப்பாடு உடைய, அதே சமயம் அதிக நேரத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய தயாரிப்பு முறைகளைக் கொண்டதுதான்  இந்த குத்து விளக்கு. இங்கு ஆண், பெண் இருவரும் சேர்ந்து குத்துவிளக்கு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

நம் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்த நாச்சியார் குத்துவிளக்கு 2010 ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. 2019 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வருகை தந்திருந்த சீன நாட்டின் ஜனாதிபதிக்கு 108 முகங்கள் கொண்ட அஷ்டோத்திர குத்துவிளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு முகம் மட்டும் கொண்ட ஏக தீப விளக்கும் இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. கும்பகோணத்தைச் சுற்றி ஏராளமான நவக்கிரக கோவில்கள் உள்ளன. இக் கோவில்களுக்கு பல்வேறு பரிகாரங்களுக்காக  வரும் பக்தர்கள் நாச்சியார் கோவில் திருவிளக்குகளை வாங்கிச் செல்வது பாரம்பரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இங்கே செய்யப்படும் குத்துவிளக்குகள் அனைத்து மதத்தினரும் பின்பற்றும் வகையில் விநாயகர், லட்சுமி, சிலுவை, மாதா போன்ற பல்வேறு கடவுள்களை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாரம்பரியமான நாச்சியார் கோவில் குத்துவிளக்குகள் தொன்மையான பாரம்பரியத்தோடு கூடிய சிறப்பு வாய்ந்த, சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகின்றன.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT