இன்று நாற்பது வயதைத் தாண்டியவர்கள் பெரும்பாலானவர்களுக்கு உள்ள பிரச்னை நீரிழிவு நோய். சர்க்கரை நோய் என்று அறியப்படும் இந்தப் பிரச்னை வாலிபப் பிராயம் முதற்கொண்டு முதியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு நோயாகக் கருதப்படுகிறது. இந்த உடல் பிரச்னை தீர மருத்துவம் மட்டுமின்றி, ஆன்மிகத்திலும், அதாவது கோயில் வழிபாட்டிலும் தீர்வு கிடைக்கும் என்றால் ஆச்சரியமாகத்தானே உள்ளது. ஆம், சர்க்கரை நோயைப் போக்கும் மாமருந்தாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வெண்ணி கிராமத்தில் வீற்றிருக்கும் வெண்ணி கரும்பேஸ்வரர். சர்க்கரை நோயால் அவதிப்படும் அன்பர்கள் இங்கு வந்து இத்தல ஈசனை வழிபட்டால் அவர்களின் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக் கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாவார். காவிரித் தென்கரையில் இது 102வது தலமாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தி ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் ஏதோ சர்ச்சையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், ‘இந்த இடம் கரும்புக்காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு’ என்றும், மற்றொருவர் ‘இல்லையில்லை, இது நந்தியாவர்த்தம் நிறைந்த இடம். எனவே, நந்தியாவர்த்தம்தான் தலவிருட்சம்’ என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களின் விவாதத்தைக் கேட்ட மன்னர், 'இந்த இடத்தில் ஆலயமே இல்லையே? இவர்கள் இருவரும் தல விருட்சத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களே' என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். முனிவர்களின் விவாதத்தில் குறுக்கிட்டால் ஏதாவது சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில் அமைதியுடன் அவர் நின்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று வானத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவர்த்தம்!’ என்று அந்தக் குரல் ஓங்கி ஒலித்தது.
உடனடியாக, அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது ஒரு லிங்க பாணம் வெளிப்பட்டது. சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் சக்கரவரத்தி. முசுகுந்த சக்கரவர்த்தியின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது எனலாம். ஆனால், அதற்கும் முன்னதாக எத்தனை வருடங்களாய் இந்தக் கரும்பேஸ்வரர் இங்கே மண்ணில் புதையுண்டு கிடந்தாரோ? ஆக, இந்த லிங்க மூர்த்தி எத்தனை காலம் பழைமையானவர் என்பதை கணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. இந்தத் தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் நாவுக்கரசர் பதிகங்கள் இரண்டுமாக மூன்று பதிகங்கள் உள்ளன.
மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கோயிலுக்கு எதிரே சூர்ய புஷ்கரணி தீர்த்தம், கோயிலுக்கு வலதுபுறம் சந்திர புஷ்கரணி தீர்த்தம் எனும் சிறப்பைக் கொண்டது இந்தத் திருக்கோயில். கோவில் மிகச் சிறியதுதான். ஆனால், உள்ளே நுழைந்ததும் அந்த அழகும், அமைதியும் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. இங்கே குடி கொண்டிருக்கும் அம்பிகையின் திருநாமம் அருள்மிகு சௌந்திரநாயகி. ராஜகோபுரத்தைத் தாண்டியதும் பலிபீடமும் நந்திதேவரின் திருவுருவமும் இருக்கின்றன. ஒரே ஒரு பிராகாரம்தான். உள்ளே மகா மண்டபம், வலது புறம் விநாயகர், பிறகு நர்த்தன கணபதி. கருவறையைச் சுற்றி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ துர்கையம்மன், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் காட்சியளிக்கின்றன. ஈசான்ய மூலையில் இந்த ஆலயத்தின் தல விருட்சம் நந்தியாவர்த்தம் பசுமையாகக் காட்சி தருகிறது.
கருவறையில் கரும்பே உருவாய் காட்சியளிக்கிறார் மூலவர். 'திருமேனி கரும்புக் கட்டுடைத்து' என்று திருமூலர் பாடியுள்ளபடி கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல, கரும்புக் கட்டுகளை சேர்த்து வைத்தாற்போல், பாண வடிவம் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது நமக்கு இந்த வடிவம் நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமானது. மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால் கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால் அபிஷேகம் கூட ஒற்றி எடுப்பதுதானாம். நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம் போன்ற விசேஷ தினங்கள் இந்தக் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்தத் தலத்தில் பிரார்த்தனை செய்து கொண்டால் சர்க்கரை நோய் நீங்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால் அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை கரும்பேஸ்வரர் எடுத்துக் கொள்வதாக ஐதீகம். இறைவனுக்கு சிறப்பு நிவேதனமாக ரவை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட கலவை படைக்கப்படுகிறது. 'ரசமணியோடு வெல்லம் கலந்து கோயிலை வலம் வந்து சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால் குருதியில் சர்க்கரை குறையும்' என்று காகபுஜண்டர் பாடியுள்ளார்.
ஆனால், இன்றைய விலைவாசியில் ரசமணியை வாங்கி வந்து படைப்பது என்பது சாத்தியமல்ல என்பதால், பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு ரவை வாங்கி அதில் சர்க்கரை கலந்து நிவேதனமாகப் படைத்து இறைவனை வலம் வந்து வணங்கி பிராகாரத்தில் சுற்றித் தூவுகின்றனர். எறும்புகள் அதை உண்ணும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும் என்னும் நம்பிக்கை இருப்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இங்கே வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் இக்கோயிலுக்கு மறுபடியும் வந்து கரும்பேஸ்வரரை தரிசித்து சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். சர்க்கரை நோயைப் போக்கும் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் அவசியம் ஒருமுறை சென்று தரிசனம் செய்து ஸ்ரீ கரும்பேஸ்வரரின் அருளைப் பெற்று வாழ்வில் நலம் பெற வேண்டும்.