பைஜ்நாத் மகாதேவ் கோயில் 
தீபம்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா? இது என்ன ஆச்சர்யம்!

A.N.ராகுல்

ந்தியா முழுக்க பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதில் மத்திய பிரதேசத்தில், அகர் மால்வாவில் உள்ள ஓர் ஆலயத்திற்குத் தனித்துவம் உள்ளது. அதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

பிரிட்டிஷ் இணைப்பு

இந்தியாவின் மையப் பகுதியில், மத்திய பிரதேசத்தில் உள்ள அகர் மால்வாவின் அழகான நிலப்பரப்புகளுக்கு மத்தியில், ‘பைஜ்நாத் மகாதேவ் கோயில்’ உள்ளது. இப்போது, ​​இந்தியாவில் உள்ள பல கோயில்கள் பண்டைய கால கட்டடக்கலையை நினைவுபடுத்தவும், சிக்கலான சிற்பங்களின்  வடிவமைப்பையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கோயில் ஒரு தனித்துவமான சிறப்பு மற்றும் பந்தத்தைக் கொண்டுள்ளது. காரணம் இது ஆங்கிலேயர்களின் விருப்பத்தால் கட்டப்பட்ட ஒரு பொக்கிஷம்.

லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின்(Colonel Martin)

இது 1880கள், பிரிட்டிஷ் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின், அகர் மால்வாவில் தன் ஆட்சியின் அடையாளமாக ஒன்றை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணினார். பொதுவாக பிரமாண்டமான தேவாலயங்கள் மற்றும் கதீட்ரல்களை (cathedrals) பிரிட்டிஷ் பேரரசுகள் இந்தியா முழுவதும் தங்களுடைய அடையாளத்திற்காக விட்டுச் சென்றார்கள். ஆனால் கர்னல் மார்ட்டினுக்கு (Colonel Martin) சற்று வித்தியாசமான விருப்பம் அவர் மனதுக்குள் இருந்தது போலும். 

தெய்வீக தலையீடு

கர்னல் மார்ட்டினின் மனைவி, அகர் மால்வாவில் ஒரு நாள் பைஜ்நாத் மகாதேவ் கோயிலைக் கடந்து குதிரையில் சென்றபோது, ​​அவரின் இதயத்தில் ஒரு தாக்கத்தை உணர்ந்தார். அதற்கேற்றவாறு கோயில் மணிகள் ஒலிக்க, மந்திரங்கள் காற்றின் வாயிலாக தன் காதில் விழ, தன்னை மறந்து ஒரு மன ஆறுதலுக்காக ஆலயத்துக்குள் நுழைந்தார்.

பிராமணரின் அறிவுரை

கோவில் பூசாரிகள் அவரின் சோகத்தைக் கண்டு விசாரித்தனர். அப்பெண்மணி தனது கணவரின் பாதுகாப்பு குறித்த தனது அச்சத்தைப் பகிர்ந்துகொண்டு தனது பயத்தை  வெளிப்படுத்தினார். அங்கிருந்த பிராமணர் ஒருவர், “சிவபெருமான் உங்கள் அனைத்து நேர்மையான பிரார்த்தனைகளையும் கேட்பார்” என்று உறுதியளித்தார். “நீங்கள் நினைத்தது நிறைவேற ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை 11 நாட்கள் உச்சரிக்கவும்“ என்றும் அறிவுறுத்தினார்.

ஒரு உறுதிமொழி

திருமதி மார்ட்டின் ஒரு சபதம் செய்தார்; அவரது கணவர் போரில் இருந்து பாதுகாப்பாகத் திரும்பினால், அவர் இந்தக் கோயிலை மறுசீரமைப்பு செய்து காட்டுவார் என்று. அதேபோல் தன் வேண்டுதலுக்கு ஏற்றவாறு கர்னல் மார்ட்டினும்  திரும்பி வந்தார். போரில் நடந்ததை தன்  மனைவியிடம் விவரித்தார்.  போரின்போது ஒரு இந்திய யோகி - நீண்ட கூந்தலுடன், புலி - தோல் அணிந்தவாறு, திரிசூலத்துடன் அவர்களை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை விவரித்தார். இதைக் கேட்ட  திருமதி மார்ட்டின் தன் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து சிவபெருமான் அனுப்பிய தூதுவர்தான் அவர் என்று கூறினார்.

மறுசீரமைப்பு மற்றும் மரபு

இந்தத் தெய்வீகத் தலையீட்டை உணர்ந்த மார்டின் தம்பதி, 1883 ஆம் ஆண்டில் கோயிலின் மறுசீரமைப் பிற்காக 15,000 ரூபாயை நன்கொடையாக அளித்தனர். அதை பறைசாற்றும் விதமாக கோயிலில் இப்போது அவர்களின் பெருந்தன்மையை நினைவு கூறும் வகையில் இச்செய்தி பொறிக்கப்பட்ட தகடு உள்ளது. இவர்களின் பக்தி அகர் மால்வாவிலே முடியவில்லை. இங்கிலாந்தில், அவர்கள் தங்கள் வீட்டிலும் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார்கள். அங்கு அவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை பிரார்த்தனை செய்தனர்.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே கோயில்

பைஜ்நாத் மகாதேவ் கோயில், பிரிட்டிஷ் அதிகாரி களுக்கும் இந்திய ஆன்மிகத்திற்கும் இடையே உள்ள அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்பாராத கூட்டணியின் சான்றாக இப்போது வரை நிற்கிறது. ஆங்கிலேயர்களின் அங்கீகாரத்துடன் இந்தியா வரலாற்றில் உள்ள ஒரே கோயில் இதுவே!

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT