Octopuses 
கோகுலம் / Gokulam

எட்டு கைகள் கொண்ட அதிசய உயிரினம்!

ஆர்.வி.பதி
gokulam strip

க்டோபஸ் கடலில் மட்டுமே உயிர் வாழும் ஒரு அதிசய உயிரினமாகும். இவை பொதுவாக இளஞ்சூடான கடற்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. ஆக்டோபஸ் களைப் பற்றி நம்முடைய முன்னோர்கள் சுமார் இரண்டு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

ஆக்டோபஸ்கள் சராசரியாக இரண்டு முதல் ஐந்து அடிகள் நீளம் வரை வளர்கின்றன. ஆக்டோபஸ் நச்சுத் தன்மையைக் கொண்ட ஒரு உயிரினம். ஆனால் பொதுவாக அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இவை தங்களுடைய உணவை அதாவது நண்டுகள் சிப்பிகள் போன்றவற்றின் உடலில் ஒருவித நச்சுத்தன்மை வாய்ந்த திரவத்தை அவற்றின் உடலுக்குள் செலுத்தி அவற்றைச் செயல் இழக்கச் செய்யும் தன்மை உடையன.

ஆக்டோபஸ்ஸின் உடலானது ஒரு தர்பூசணிப்பழத்தைப் போல காணப்படும். அதைத் தொடர்ந்து எட்டு கைகள் போன்ற அமைப்பு அமைந்திருக்கும். ஆக்டோபஸ்ஸின் உடலானது மிகவும் மென்மையானதாக காணப்படும். ஆக்டோபஸ்ஸிற்கு காதுகள் கிடையாது. இதனால் இவற்றிற்கு கேட்கும் திறன் இல்லை. ஆக்டோபஸ்களுக்கு கால்களும் கிடையாது. இவை நல்ல பார்வைத் திறனைப் பெற்றுள்ளன. ஆக்டோபஸ் அறிவுக் கூர்மை மிக்க ஒரு உயிரினம். ஆக்டோபஸ்கள் தங்களுடைய உடலை சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப பல்வேறு நிறத்தில் மாறி அமைந்து தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்கின்றன.

ஆக்டோபஸ்கள் பகலில் சற்று நேரம் ஓய்வெடுக்கும். இவை கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் பள்ளத்தைத் தோண்டி அதற்குள் தங்களை நுழைத்து ஓய்வெடுக்கும். இவை பகல் நேரம் முழுதும் இத்தகைய குகைக்குள் ஓய்வெடுத்துக் கொள்ளுகின்றன. இரவானதும் இவை இத்தகைய குகைக்குள்ளிருந்து வெளியே வந்து தங்களின் உணவைத் தேடிப் பிடிக்கின்றன.

ஆக்டோபஸ்கள் பொதுவாக ஓடு உடைய உயிரினங்களை உணவாக உட்கொள்ளுகின்றன. கடல் நண்டு, கடல் சிப்பி போன்ற உயிரினங்களை இவை சாப்பிடுகின்றன. இவை தங்களுடைய உணவைப் பிடிக்கும் விதமே அலாதியானது. முதலில் இத்தகைய உயிரினங்கள் ஆக்டோபஸ்ஸிடம் மாட்டிக் கொண்டால் ஆக்டோபஸ் விஷத்தன்மை உடைய ஒரு திரவத்தை அவற்றின் உடலுக்குள் செலுத்திவிடும். இதன்காரணமாக அத்தகைய உயிரினங்கள் செயலிழந்து போகும். பின்னர் செயலிழந்த உயிரினங்களை இவை சாப்பிடுகின்றன.

ஆக்டோபஸ்ஸிற்கு உள்ள எட்டு கைகளிலேயும் ஒவ்வொரு கையிலேயும் இரண்டு வரிசைகளிலே உறிஞ்சுவான் எனும் அமைப்பு காணப்படுகிறது. இப்படி சுமார் ஒவ்வொரு கையிலேயும் சுமார் இருநூற்றி ஐம்பது உறிஞ்சுவான்கள் அமைந்துள்ளன. இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் ஆக்டோபஸ்ஸின் கைகளில் மொத்தம் இரண்டாயிரம் உறிஞ்சுவான்கள் காணப்படுகின்றன.

நம்முடைய கைகளில் அமைந்துள்ள விரல்களின் உதவியாலே பொருட்களைப் பிடித்துக் கொள்கிறோம். இதேபோலத்தான் ஆக்டோபஸ்கள் எதையாவது பிடிக்க வேண்டும் என்றால் இந்த உறிஞ்சுவான்களைப் பயன்படுத்துகின்றன. ஆக்டோபஸ்ஸிற்கு அமைந்துள்ள எட்டு கைகளில் ஏதேனும் ஒன்று எதிர்பாராதவிதமாக துண்டாகிப்போனால் அந்த கையானது மீண்டும் வளர்ந்துவிடும்.

ஆக்டோபஸ்கள் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. இவை கோழிகளைப் போல முட்டைகளை அடைகாக்கும். ஒரு சமயத்தில் பெண் ஆக்டோபஸ் அதாவது தொடர்ந்து பதினைந்து நாட்களில் ஏராளமான முட்டைகளை இடுகின்றன. இம்முட்டைகளை இவை தொடர்ந்து சுமார் ஐம்பது நாட்கள் அடைகாக் கின்றன. அடைகாக்கும் சமயத்தில் இவை அந்த இடத்தைவிட்டு எங்கும் செல்லாமல் இருக்கும். இச்சமயங்களில் இவை சாப்பிடுவதும் இல்லை. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் பெரும்பாலம் பெண் அக்டோபஸ் இறந்து போய்விடும்.

ஆக்டோபஸ்கள் ஓரளவிற்கு நன்றாகவே நீந்தும். இவை மணிக்கு சுமார் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். ஆனால் இவை ஒரு அதிசயமான முறையிலேயே நீந்துகின்றன. ஆக்டோபஸ்கள் பொதுவாக முன்னோக்கி நீந்துவதில்லை. இவை எப்போதும் பின்னோக்கியே நீந்துகின்றன.

Mutual Fund vs. Stocks: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

"நாங்கள் பிள்ளை பெறும் இயந்திரமா?" மகளிரிடையே பலத்த எதிர்ப்பு! எங்கே?

கொடுக்காய்ப்புளியின் பல்வேறு பயன்கள்!

எடை குறையணுமா? இந்த ரெசிபிகளை டிரை பண்ணுங்க..!

மனிதர்களின் பசி, தூக்கத்திற்குக் காரணமான ட்ரிப்டோஃபனின் நன்மைகள்!

SCROLL FOR NEXT