short story 
கோகுலம் / Gokulam

சிறுவர் கதை- கடவுளின் பிரசாதம்!

சேலம் சுபா

"புவி இங்க வா அப்படியே இந்த பொங்கலை கொண்டு போய் அங்க மாமா வீட்டுல கொடுத்துட்டு வாம்மா"…

ஏழாம் வகுப்பு படிக்கும் புவி என்கிற பூமிகாவிற்கு  கோபமாக வந்தது. "இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார் சாமி சாமி என்று சாமி கும்பிடுகிறார்கள். அட சாமி கும்பிடுவது இருக்கட்டும். செய்யற பிரசாதத்தை மாமா வீட்டுல கொண்டு போய் கொடுக்க சொல்லி என்னையும் வற்புறுத்தறாங்க." மனதுக்குள் நொந்து கொண்ட புவி அம்மா தந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு மாமாவின் வீட்டுக்கு தனது சைக்கிளில் பறந்தாள்.

வழியில் உள்ள கோவிலில் எப்போதும்போல் பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்து  பிச்சை கேடடுக்கொண்டிருந்தார்கள். புவிக்கு எப்பொழுதுமே அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். தான் நன்கு படித்து நிறைய சம்பாதித்து அவர்களுக்கு ஒரு இல்லம் கட்ட வேண்டும், பிச்சைக்காரர்களே இல்லாத உலகத்தை ஆக்கி காட்ட வேண்டும் என்றெல்லாம் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

"ஏன் இப்படி இவர்களுக்கு இந்த நிலை என்று எப்போதும் யோசிப்பாள். கடவுள் எல்லாருக்கும் எல்லாமே தருவாங்கன்னு சொல்றாங்க. ஆனா, கடவுள் இருக்கிற இந்த கோவில் வாசலிலே இந்த பிச்சைக்காரர்கள் எல்லாம் இருக்காங்களே ஏன் கடவுள் இவங்களுக்கு எல்லாம் எதுவும் தரல என்பது போன்ற கேள்விகள் எப்போதுமே புவிக்கு தோன்றும். இப்போதும் அதே போல் தோன்றியது.

இதோ மாமா வீடு வந்து விட்டது. உள்ளே அத்தையின் பேச்சு குரல் கேட்டது "இன்னிக்கு சத்யநாராயணா பூஜை செய்திருப்பாள். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க தங்கச்சி வீட்டில் இருந்து பிரசாதம் வரும். தினமும் இதே வேலையா போச்சு.  வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா நாமளும் இங்க வக்கணையா செஞ்சு சாப்பிட்டுட்டுத்தான் இருக்கோம். நல்லா அண்ணன் பாசம். ஊரில் இல்லாத அண்ணன். வந்தா நீங்களே கொட்டிக்கோங்க. போன வாரம் நாம வெளியே போனதால் அவள் கொடுத்ததை கீழே தான் கொட்டினோம். இதபோய் சொல்ல முடியுமா அவகிட்ட..?"

புவிக்கு மனசு உடைந்து போனது என்ன இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? அம்மா எவ்வளவு நம்பிக்கையுடன் அண்ணனுக்காக தான் செய்த பிரசாதத்தை தந்து விடுகிறார்கள் ஆனால் அத்தை ஏன் இப்படி பேசுகிறார்கள்?

எதற்கோ கதவைத் திறந்த அத்தை புவியை பார்த்ததும் துணுக்குற்றாள். இருந்தாலும் எதுவும் தெரியாதது போல் "வா புவி. வந்து நிறைய நேரம் ஆச்சா? நீ பிரசாதம் எடுத்துட்டு வருவேன்னு இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் வா வா.. உங்க மாமா பசியோட இருக்குறார். உங்க அம்மாவுடைய கை மணமே தனிதான். "சொல்லிக் கொண்டே புவியியிடம் இருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டாள் அத்தை. எப்படி இப்படி எல்லாம் மாற்றிப் பேசுகிறார்கள்? 

புவி உள்ளே மாமாவை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினாள். உள்ளே அத்தை சொல்வது கேட்டது காதுகளில் "என்ன இந்த பொண்ணு இன்னைக்கு இப்படி வேகமாக போறா…"

இது நடந்து சில நாட்கள் கழித்து வந்தது கந்த சஷ்டி பெருவிழா. அம்மா முருகனுக்கு அபிஷேகம் எல்லாம் பண்ணி கலவை சாதம் சர்க்கரை பொங்கல் எல்லாம் பண்ணி படைச்சாங்க வழக்கம் போல ஒரு பெரிய டிபன் பாக்ஸ் எடுத்து அம்மா மாமா வீட்டுக்கு தயார் பண்ணிட்டிருந்தாங்க. பார்த்தாள் புவி, 'அம்மா ஒரு நிமிஷம் இந்த தடவை இந்த பிரசாதத்தை எல்லாம் நாம் மாமா வீட்டுக்கு தர போறதில்லை.."

புவியின் அம்மா அவளை ஆச்சரியமாக பார்த்தாள். "என்ன பெரிய மனுஷி மாதிரி  பேசுற ஏன் என்ன ஆச்சு?"

"இல்லம்மா மாமா வீட்டிலயும் விதவிதமா செய்யறங்க. தேவையுள்ளவங்களுக்கு தருவதுதான் கடவுள் சேவைன்னு டீச்சர் சொன்னாங்க. இதை நாம உட்கார்ந்து ஒரு பத்து பாக்கெட் பண்ணுவோம் வாங்க"  என்று சொன்னவள்தானே பத்து கவர் எடுத்து வந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சாதம் வைத்து பேக் பண்ணினாள் அவற்றை ஒரு கூடையில் வைத்தவள்
ஆச்சர்யமாக பார்த்த அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு கோவில் அருகில் வந்து அங்கு கையேந்திய ஒவ்வொருவருக்கும் அதை தந்தாள். அவர்கள் ஒவ்வொரு முறையும் "நீ மகராசியா இரு கண்ணு" என்று வாழ்த்தும்போது புவியின் முகம் மலர்ந்தது. அதைக் கண்டு அவள் அம்மாவின் அகமும் மகிழ்ந்தது.

கனவில் எந்த விலங்கு வந்தால் என்ன பலன் தெரியுமா?

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

SCROLL FOR NEXT