Vinayagar Chaturthi 
கோகுலம் / Gokulam

வினைகள் போக்கும் விநாயகருக்கு HAPPY BIRTHDAY! கொண்டாடுவோமா குட்டீஸ்?

தா.சரவணா

குழந்தைகளே,

நாளை செப்டம்பர் 7 - விநாயகர் பூஜை; விநாயகர் சதுர்த்தி... பக்தியோடு கொண்டாட ரெடியா?

வீடுகளில் விரதம் வழிபாடு, சுப காரியங்களை ஆரம்பிக்கும் போது விநாயகரை வணங்கிய பின்னர் ஆரம்பிப்பதுதான் நம் வழிபாட்டு முறை. எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முதல் வழிபாடு என்பது விநாயகர் பூஜையில் இருந்து தான் தொடங்கும்.

விநாயகர் வழிபாட்டுக்கு கோயில்களைத் தவிர பல இடங்களில் ஆகம விதிகள் பார்க்க வேண்டியதில்லை. அவர் உருவம் கூட மிக எளிமையானது தான். பிடித்து வைத்தால் பிள்ளையார் தான். ஒரு பிடி மஞ்சளிலோ, சந்தனத்திலோ, பசு சாணத்திலோ, களிமண்ணிலோ, அரிசி மாவிலோ என சுலபமாக கிடைக்கும் இவற்றில் ஏதோ ஒன்றை எடுத்து, அது நீரில் போதுமான அளவுக்கு கலந்து பிடித்து வைத்தால் அவரே பிள்ளையார்.

விநாயகர் வழிபாடு செய்வதும் எளிமையானது. விநாயகர் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பிரதிஷ்டை செய்யலாம். எளிதில், எங்கும் கிடைக்கும் அருகம்புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தை சொல்லியும், விநாயகர் அகவல் முதலான துதி பாடல்களை படித்தும் அவரை வழிபாடு செய்தால் நமக்கு தேவையான நல்ல கல்வி, நிலையான வேலை என்று அனைத்தையும் அருள்வார்.

மற்ற கடவுள் கோயில்களை விட விநாயகருக்கு தான் நாட்டில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. காரணம் விநாயகர் அருள் பாலிக்கும் கோவிலும் மிக எளிமையானது தான். மக்கள் அதிகமாக வந்து செல்லும் குளக்கரை, ஆற்றங்கரை, அரச மரத்தடியில் என எல்லா இடங்களிலும் அமர்ந்திருந்து அருள் பாலிப்பவர் விநாயகர் மட்டுமே. எந்த கடவுளுக்கும் இல்லாத எளிய அணுகுமுறை இவரிடம் மட்டுமே உண்டு.

எளிமையின் மறுபெயர் என சொல்லும் அளவுக்கு பெருமை பெற்ற முழு முதல் கடவுளான விநாயகர், ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி நாளில் அவதரித்தார். அதனால் தான் அந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் நீராடி நித்திய கருமங்களை முடிக்க வேண்டும். பெண்கள் விரதம் இருந்து, கொழுக்கட்டை, சுண்டல் முதலான பிரசாத பொருட்களை தயார் செய்ய வேண்டும். வீடுகளில் நிலைகளில் பூ மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தை சுத்தப்படுத்தி மாக்கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வழிபடுவது விசேஷம். முடியாதவர்கள் கடைகளில் கிடைக்கும் பிள்ளையார் சிலை வாங்கிக் கொள்ளலாம். அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி அருகம்புல், வெள்ளருக்கு, மாலை சாத்தி, சந்தன குங்கும திலகமிட்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக மோதகம், அப்பம்,  கடலை, தேங்காய் புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவல் பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் படைக்க வேண்டும்.

ஒருமுக சிந்தனையோடு உள்ளன்போடு விநாயகர் வழிபாடு செய்தால் நம் கர்ம வினைகள் எல்லாம் தீர்ப்பார். பெண்களின் திருமணத்தடை நீங்கும். கால சர்ப்ப தோஷத்தால் உண்டான கொடுமை நீங்கும். இரு பாலருக்கும் நல்ல வாழ்க்கை துணை அமையும். மழலைச் செல்வம் பாக்கியம் கிடைக்கும். இல்லறம் இனிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கேது, சனி ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும் என்பார்கள்.

என்ன குழந்தைகளே... இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பக்தியோடு கொண்டாட, உங்கள் கைகளால் விநாயகர் சிலை செய்ய கிளம்பிட்டீங்களா?                                     

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT