Eskimo igloo house 
கோகுலம் / Gokulam

எஸ்கிமோவர்கள் வாழும் பனிக்கட்டிக் குடில்கள்!

தேனி மு.சுப்பிரமணி

ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில் வசிக்கின்றனர். இவ்வீடுகளைப் பனிக்கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்கின்றனர். இவ்வீடுகள் பார்ப்பதற்கு அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது என்றாலும், உண்மையில் இது பரவளையவுரு (Paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் மிக அழுத்தத்தில் அந்தப் பனிகட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக்கட்டிக் குடில் பெரும்பாலும், கனடாவின் வட எல்லையில் வாழும் பழங்குடிகளான இனூயிட் மக்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இங்கே மழைக்காலத்தில் வேட்டையாடுபவர்களால் இந்தப் பனிக்கட்டி வீடுகள் தற்காலிக வாழும் இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பனிக்கட்டிகளை வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்க வேண்டியது அவசியம். காற்றினால் அடித்து வரப்பட்ட பனியே பனிக்கட்டிக் குடில் கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிகளை வெட்டியெடுக்கும் போது உண்டாகும் பள்ளம், வழமையாகப் பனிக்கட்டிக் குடில் உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற்கதவைத் திறக்கும் போது, காற்று உள்ளே செல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை போன்று அமைக்கப்படும். பனிக்கட்டிகள் வெப்பத்தைக் கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும்.

மத்திய எஸ்கிமோவர் டேவிஸ் நீரிணை சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°c இலிருந்து 10-20°c வரை உயர்த்தக்கூடியது.

கட்டிடக்கலை வழியில் பனிக்கட்டிக் குடில் தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளைத் தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன் மூலம் இதன் அரைக்கோளவடிவ 'கவிமாடம்' ஐக் கட்டியெழுப்ப முடியும். 'இக்லூ', என்பது இனுக்டிடுட் மொழியில் 'வீடு' என்ற பொருள்படும்.

பொதுவாக மூன்று வகை பனி வீடுகள் உண்டு. அவற்றின் பரப்பளவும், நோக்கமும் வெவ்வேறானவை. மிகச் சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிகத் தங்குதலுக்கு, அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்க இவை பயன்படுகின்றன. நடுத்தர அளவு இக்லூக்கள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்றவை. இவை ஒரே ஒரு அறை கொண்டவை. இதில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் தங்க முடியும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படிக் கட்டப்படும். குடியிருப்பு அல்லது கிராமமாக இவை விளங்கும்.

அடுத்து மிகப் பெரிய பனிக்குடில் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாகத் தங்குவதற்கும். மற்றொன்று நிரந்தரமாகத் தங்குவதற்கும். இவற்றில் ஐந்து அறைகள் கூட இருக்கும். அதிகபட்சம் இருபது பேர் கூடத் தங்கலாம். சிலசமயம் சின்னச் சின்னப் பனிக்குடில்களைச் சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்துப் பல குடும்பங்கள் அங்கே தங்கப் பயன்படுத்துவது உண்டு.

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

SCROLL FOR NEXT