குழந்தைகளே! நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மழைக்குப்பின் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றது தான்! சில நேரங்களில் நம்மால் அதனை ரசிக்க முடியுமே தவிர அதனை கையில் பிடித்து வைத்துக் கொள்ள நம்மால் ஒரு போதும் முடியாது. அதையும் தாண்டி நம்முடைய வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களை மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டுமானால், நாம் நாமாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நமக்கான வழியில் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
அவ்வாறு நமக்கேற்றவாறு வாழாமல், பிறருடைய பிம்பங்களை பார்த்து பின்பற்றினோமானால் நம்முடைய சொற்ப மகிழ்ச்சிகளும் கூட நம்மை விட்டு தொலைந்து போய் விடக்கூடும்.... இதோ இந்த சிங்கத்திற்கு நேர்ந்ததைப் போல!
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் தைரியமாகவும், தனித்தன்மையுடனும் காட்டை ஆட்சி செய்து வந்தது. காட்டிற்குள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் முன்பு வந்துதான் பிரச்சனையை தீர்த்துக் கொண்டன. புதிதாக ஏதேனும் விலங்குகள் காட்டிற்குள் வந்தால் அவை கட்டாயம் சிங்கத்தின் முன் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறாக பல்வேறு சட்ட திட்டங்களை போட்டு காட்டை மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தது சிங்கம்.
காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் தலைமையின் கீழ் அமைதியான வாழ்க்கை முறையை நடத்தி வந்தன. ஒரு நாள் சிங்கம் நன்கு சாப்பிட்டுவிட்டு மதிய வேளையில் ஓய்வாக படுத்திருந்தது. அப்போது சிங்கத்தின் குகைக்கு எதிராக இருந்த மரக்கிளையில் இருந்து சரக்..சரக்.. என்று ஒரு சத்தம் வந்தது. தூக்கம் கலைந்து விட்ட சிங்கம் மிகவும் எரிச்சலுடன் கண்ணை திறந்து பார்த்தது. அந்த மரத்துக்கு அடியில் வெள்ளை நிற முயல் ஒன்று இங்கும் அங்குமாக துள்ளிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் வெண்மையாக பனிக் குவியல்களை மொத்தமாக வடித்து செய்ததைப் போல் இருந்த முயலைப் பார்த்ததும் சிங்கத்தின் கோபம் காணாமல் போய்விட்டது. அந்த முயலைப் பார்த்துக் கொண்டே இருந்த சிங்கம் அதன் அழகில் தன்னையே மறந்தது.
மறுநாள் சிங்கம் காட்டிற்குள் வேட்டைக்கு செல்லும்போது அங்கே ஒரு இடத்தில் காட்டுச் செடிகள் எரிக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் அடர்த்தியாக சாம்பல் கிடந்தது. அதைப் பார்த்தவுடன் சிங்கத்திற்கு முந்தைய நாள் பார்த்த முயலின் ஞாபகம் வரவே, 'தானும் முயலை போல் வெண்மையாக மாறினால் எப்படி இருக்கும்?' என நினைத்து சாம்பலில் படுத்து நன்கு உருள ஆரம்பித்தது. தன் உடல் முழுக்க சாம்பலை பூசிக்கொண்டு வெள்ளையாக காட்டுக்குள் நடமாடும் சிங்கத்தைப் பார்த்த மற்ற மிருகங்கள் அனைத்தும் பயமின்றி மிகவும் சாவகாசமாக காட்டுக்குள் நடமாட ஆரம்பித்தன. இதைப் பார்த்தவுடன் சிங்கத்திற்கு கோபம் வந்தாலும் அதற்கான உண்மையான காரணம் என்ன? என்பதை அதனால் அறிந்து கொள்ள முடியவில்லை.
மற்றொரு நாள் சிங்கம் நடந்து செல்லும் போது குளக்கரையில் முயல் ஒன்று ஆரஞ்சு நிற கேரட்களை வைத்து அழகாக கொறித்துக் கொண்டிருப்பதை பார்த்தது. முயல் சாப்பிடும் அழகை பார்த்தவுடன் சிங்கத்திற்கு கேரட்டை சாப்பிட வேண்டும் என ஆசை வந்தது. உடனே அதுவும் குளக்கரைக்கு சென்று அருகில் உள்ள கேரட்டுகளை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தது. சிங்கம் கேரட் சாப்பிடுவதை பார்த்து அந்த வழியாக சென்ற காட்டு மாடு ஒன்று மிகவும் சத்தமாக சிரித்துக் கொண்டே சென்றது.
மறுநாள் முயல் ஒன்று பாறைக்கு அடியில் உள்ள தன்னுடைய வளையில் சென்று விளையாடுவதை பார்த்த சிங்கம், 'முயலின் அழகான வீட்டை ஒரு முறையாவது நாமும் பார்த்து விட வேண்டும்' என நினைத்து தன்னுடைய தலையை பாறைகளுக்கு இடையில் சிக்க வைத்து விட்டது. பாறைகளுக்கு இடையே தலை நன்கு சிக்கிக் கொள்ளவே வலி பொறுக்க முடியாமல் சிங்கம் அலறி துடித்தது. சிங்கத்தின் அலறலைக் கேட்டு காட்டில் உள்ள அத்தனை விலங்குகளும் கூடிவிட்டன. எப்படியோ ஒரு வழியாக போராடி சிங்கத்தை காப்பாற்றின. பின் அங்கு நின்ற அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பரிதாப நிலையை பார்த்து கலகலவென சிரித்தவாறே தம்முடைய இருப்பிடம் நோக்கி சென்றன.
தன்னைப் பார்த்து அனைத்து மிருகங்களும் ஏன் சிரிக்கின்றன? என்பதன் காரணம் அறியாமல் சிங்கம் திருதிருவென முழித்தது. அப்பொழுது அங்கு நின்ற ஒரு வயதான கரடியை பார்த்து, 'காட்டில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ஏதாவது ஆகிவிட்டதா? ஏன் அனைவரும் என்னை பார்த்து சிரிக்கின்றார்கள்? இவர்கள் அனைவருக்கும் என் மேல் இருந்த மரியாதை போய்விட்டது! நாளை என்ன செய்கிறேன் பார்!' என்று கம்பீரமாக கர்ஜித்தது.
உடனே அங்கு இருந்த வயதான கரடி, 'அரசரே அவசரப்படாதீர்கள்! சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். மாறியது காட்டில் உள்ள மற்ற மிருகங்கள் அல்ல, தாங்கள்தான்! உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது மற்றவர்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது ஏதோ ஒரு முயலின் தோற்றத்தாலும், செய்கையிலும் ஆசைப்பட்டு உங்களை நீங்கள் முயலாக மாற்றிக் கொள்ள முயற்சித்தது உங்களுடைய முட்டாள்தனம்! ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள் அரசே! உங்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நீங்கள் நீங்களாவே இருக்கும் வரை மட்டுமே!' என்று கூறியது. அதற்குப் பின்பு தான் சிங்கத்திற்கு தான் எங்கே தவறு செய்தோம் என்பது புரிய ஆரம்பித்தது. எனவே தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு மீண்டும் முன்பு போல் கம்பீரமாக ஆட்சி செய்ய வேண்டும் என முடிவெடுத்தது சிங்கம்.
குழந்தைகளே! இந்த சிங்கத்தை போல் தான் நம்மில் பலரும் பல நேரங்களில் நம்முடைய தனித்தன்மைகளை அறியாமல், பலம், பலவீனங்களை அறிந்து கொள்ளாமல், நம்மை சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகளால் சில நேரம் கவரப்பட்டு அவர்களைப் போலவே வாழ முயற்சிக்கிறோம். அப்படி வாழ முயற்சிக்கும் போது நாம் நம்முடைய தனித்தன்மையை இழந்து ஒரு போலியான பிம்பத்தையே அடைய முயற்சிக்கிறோம். அத்தகைய முயற்சி ஒரு நாளும் தொடர் வெற்றியை தராது. அழகாக இருக்கிறது என்பதற்காக பொருந்தாத காலணிகளை நம்முடைய பாதத்தில் அணிந்து கொண்டு ஒரு நாளும் நடை போட முடியாது என்பதை நாம் புரிந்துவேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் தானே!