அழ.வள்ளியப்பா... 
கோகுலம் / Gokulam

குழந்தைகளோடு குழந்தையாய் பழகி மகிழ்ந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா!

ஆர்.வி.பதி

அழ.வள்ளியப்பா அவர்கள், புகழ் பெற்ற கவிஞராக இருந்தாலும் வங்கியில் உயர் பதவியில் பணியாற்றினாலும் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாய் பழகி மகிழ்வார். அவருடைய வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை நேரத்தில் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் கூடி விடுவார்கள். காரணம் வள்ளியப்பா குழந்தைகளுக்கு அன்று தன் வீட்டில் கதைகளைச் சொல்லுவார். இப்படியாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று கதை கேட்பதற்காக வந்த ஒரு சிறுவனுக்குப் பிறந்தநாள். பிறந்தநாள் அன்று அந்த சிறுவன் புதிய உடை அணிந்து வந்திருந்தான்.  அந்த சிறுவனுக்கு அன்று பிறந்த நாள் என்பதை அறிந்த ஒரு சிறுமி அவனிடம் “நீ ஞாயிற்றுக்கிழமை பிறந்தாய்.  நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்” என்றாள்.  உடனே அருகில் இருந்த மற்றொரு சிறுவன் “நான் புதன்கிழமை பிறந்தேன்” என்றான்.  குழந்தைகளின் இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த வள்ளியப்பா அப்பொழுதே ஒரு பாடலை இயற்றிப்பாடினார்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை

நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்

திங்கட்கிழமை பிறந்த பிள்ளை

தினமும் உண்மை பேசிடுமாம்

செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை

செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்

புதன்கிழமை பிறந்த பிள்ளை

பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்

வியாழக்கிழமை பிறந்த பிள்ளை

மிகவும் பொறுமை காட்டிடுமாம்

வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை

வேண்டும் உதவிகள் செய்திடுமாம்

சனிக்கிழமை பிறந்த பிள்ளை

சாந்தமாக இருந்திடுமாம்

இந்தக் கிழமை ஏழுக்குள்

எந்தக் கிழமை நீ பிறந்தாய் ?

வள்ளியப்பா காரைக்குடியில் வசித்தபோது அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் இருந்த சிறுவன் அண்ணாமலை வள்ளியப்பாவின் வீட்டிற்கு வந்து அங்குள்ள சிறுவர்களுடன் இணைந்து விளையாடி மகிழ்வான்.  அண்ணாமலையைக் கண்டவுடன் மற்ற குழந்தைகள் “அண்ணாமலை அண்ணாமலை அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமில்லை” என்று பாடி அவனை கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.  இதை கவனித்து வந்த வள்ளியப்பா ஒருநாள் குழந்தைகளிடம் “அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமில்லையா ?” என்று கேட்டார்.  தொடர்ந்து 

அண்ணாமலை அண்ணாமலை 

அண்ணாந்து பார்த்தான் 

ஆடி ஆடிப் பறக்கும் பட்டம் 

அண்ணாந்து பார்த்தான் 

என்று தொடங்கி அண்ணாமலை முன்னாலே என்ன பார்த்தான் பின்னாலே என்ன பார்த்தான் என்று விவரித்து ஒரு பாடலை இயற்றினார்.  அந்த பாடலை வள்ளியப்பா ஒரு முறை குழந்தைகளிடம் பாடிக்காட்ட, அவர்கள் அதைத் திருப்பிப் பாடத் தொடங்கிவிட்டார்கள்.  நாளடைவில் 'அண்ணாமலை அண்ணாமலை அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமில்லை' என்ற அவர்களுடைய பழைய வரிகளை அவர்கள் மறந்தே போய்விட்டார்கள்.

எதையும் கூர்ந்து கவனிப்பவர் அழ.வள்ளியப்பா.  குழந்தைகளின் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும்; நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பியவர். ஒரு நல்ல பாடல் குழந்தைகளின் மனதில் பதிந்து விட்டால் அது அவர்களின் எண்ணத்தை நேர்மறையாக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் சிறந்த உதாரணங்களாகும்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் 5 Stoic கொள்கைகள்! 

சருமப் பராமரிப்பில் இந்தத் தவறுகள் மட்டும் வேண்டாமே! 

சாளக்கிராம கல் உருவான வரலாறு தெரியுமா?

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

SCROLL FOR NEXT