Komodo dragon 
கோகுலம் / Gokulam

கொமோடோ டிராகன்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா பட்டூஸ்?

ஆர்.வி.பதி

கொமோடோ டிராகன் (Komodo Dragon) அப்படின்ற பேரைக் கேட்கும் போதே ஏதோ வித்தியாசமான உயிரினம் அப்படின்னு தோணுது இல்லே ? உண்மைதான். இது ஒரு வித்தியாசமான உயிரினம்தான். வாங்க இப்ப நாம அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.

நாம நம்ம வீடுகளில் வசிக்கும் பல்லியைப் பார்த்திருக்கோம். அந்த பல்லி திடீர்னு ஒரு இருநூறு மடங்கு வளர்ந்தா எப்படி இருக்கும். இதை நீங்க கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. அதுதான் கொமோடோ டிராகன்.

கொமோடோ டிராகன்கள் இந்தோனேஷியா நாட்டில் அமைந்த கொமோடோ, ரின்ஜா, படார், கிலி, மோடா மற்றும் ப்ளோர்ஸ் ஆகிய தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வேகமாக அழிந்து வரும் இந்த உயிரினத்தைப் பாதுகாக்க இந்தோனேஷிய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கொமோடோ டிராகன் இனத்தை யாரும் வேட்டையாடக் கூடாது அப்படின்னு இந்தோனேஷிய அரசு தடைவிதிச்சிருக்கு.

கொமோடோ டிராகனின் அறிவியல் பெயர் Varanus komodoensis என்பதாகும். இவ்வினம் ஓரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஊர்வன வகையைச் சேர்ந்த பல்லி இனத்தில் மிகப்பெரிய ஒரு உயிரினமே கொமோடோ டிராகன் ஆகும். ஆண் டிராகன்கள் சுமார் பத்து அடிகள் வரை வளர்கின்றன. மேலும் இவற்றின் எடை சுமார் நூற்றி இருபத்தைந்து கிலோ அளவிற்கு உள்ளன. பெண் டிராகன்கள் எட்டு அடிகள் வரை வளர்கின்றன. பெண் கொமோடோ டிராகன்களின் எடையும் ஆண் டிராகன்களைவிடக் குறைவாகவே உள்ளது.

கொமோடோ டிராகன்கள் பிரௌன் நிறத்தில் காணப்படுகின்றன. இவற்றின் கழுத்து சற்று நீளமாக அமைந்திருக்கும். வாலானது உடலைவிட சற்று பெரியதாகவே காணப்படுகிறது. கால்கள் பலமானதாகவும் நகங்கள் கூரியதாகவும் அமைந்துள்ளன. இவை பகல்பொழுதில் சுறுசுறுப்பாகக் காணப்படும். இவற்றின் பார்வையும் மிகவும் கூர்மையாக அமைந்திருக்கும். டிராகன்கள் அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் இவை மிக வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றுள்ளன. குறைந்த தொலைவை மிக வேகமாகக் கடக்கும் ஆற்றலுடையவை. மேலும் இவை நன்றாக மரங்களில் ஏறும் திறமையையும் பெற்றுள்ளன. டிராகன்கள் மிக நன்றாக நீந்தும் சக்தியையும் பெற்றுள்ளன. டிராகன்களுக்கு அறுபது பற்கள் காணப்படுகின்றன. இவற்றின் பற்கள் விழுந்தால் உடனே முளைத்தும் விடுகின்றன. தலையானது மென்மையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இவற்றால் கடினமான உணவுகளை சுலபமாக விழுங்க இயலுகிறது.

பொதுவாக கொமோடோ டிராகன்கள் காட்டுப் பன்றிகள், மான்கள், ஆடு மற்றும் காட்டெருமை போன்றவற்றை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அதிக பசி எடுக்கும் வேளைகளில் வேறு உணவு கிடைக்கவில்லை என்றால் சில வேளைகளில் சிறிய டிராகன்களைக் கூட இவை உணவாக உட்கொள்ளுகின்றன. இவை தங்கள் உணவை வேகமாக உட்கொள்ளும் தன்மை படைத்தவை. உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கப்படும் டிராகன்களுக்கு எலிகள் உணவாகத் தரப்படுகின்றன.

பெண் டிராகன்கள் நூற்றி இருபத்தி ஐந்து கிராம் எடையுள்ள முட்டையை இடுகின்றன. ஒவ்வொரு முறையும் சுமார் முப்பது முட்டைகள் வரை இடுகின்றன. டிராகன்களின் முட்டைகள் பார்ப்பதற்கு கோழி முட்டைகளைப் போல இருமடங்கு பெரியதாகக் காணப்படும். இவை சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர் பொரிந்து முட்டைக்குள்ளிருந்து குட்டி டிராகன்கள் வெளியே வருகின்றன. பிறந்த டிராகன்கள் சுமார் பதினைந்து அங்குல நீளத்தில் காணப்படுகின்றன. குட்டி டிராகன்கள் பூச்சிகள், பறவைகள், பறவைகளின் முட்டைகள் மற்றும் சிறுசிறு பாலூட்டிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஐந்து வருடங்களில் முழுவளர்ச்சியை அடைகின்றன.

கொமோடோ டிராகன்கள் சுமார் இருபது வருடங்கள் முதல் அதிகபட்சமாக நாற்பது வருடங்கள் வரை வாழ்கின்றன.

என்ன குட்டீஸ். இன்னைக்கு கொமோடோ டிராகன்களைப் பற்றி ஓரளவு தெரிஞ்சிகிட்டீங்க இல்லையா? அப்புறம் வேற ஒரு வித்தியாசமான உயிரினத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்றேன். சரியா?

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT