996 Working Hour System 
கல்கி

9AM to 9PM 6 days a week - சீனாவின் 996 வேலை நேர முறை!

தேனி மு.சுப்பிரமணி

சீன மக்கள் குடியரசில், சில நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள பணி நேர அட்டவணையினை 996 வேலை நேர முறை (996 Working Hour System) என்கின்றனர். அதாவது, இந்நிறுவனப் பணியாளர்கள் நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை என்று வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பணியின் நேரம் தொடக்கம், முடிவு, வார நாட்கள் ஆகியவைகளைக் கொண்டு, 996 வேலை நேர முறை என்று சொல்கின்றனர். அதாவது, வாரத்திற்கு 72 மணிநேரம் கட்டாயமாகப் பணி செய்ய வேண்டும். (9 AM to 9PM 6 days a week)

பல சீன இணைய நிறுவனங்கள் இந்த 996 பணி நேர முறையை தங்கள் அதிகாரப்பூர்வ பணி அட்டவணையாக வைத்துக் கொண்டன. விமர்சகர்கள் 996 வேலை நேர அமைப்பு சீனச் சட்டத்தை மீறுவதாகவும், அதை 'நவீன அடிமைத்தனம்' என்றும் அழைத்தனர்.

சீனாவின் தொழிலாளர் சட்டங்களின்படி, ஒரு நிலையான வேலை நாள் என்பது எட்டு மணி நேரம், வாரத்துக்கு அதிகபட்சமாக 44 மணி நேரம் வேலை செய்யலாம். அதைக் கடந்தும் பணியாற்றும் எந்தத் தொழிலாளருக்கும் கூடுதல் உழைப்புக்கான ஊதியம் தரப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. நாட்டின் பல பெரிய நிறுவனங்களில், குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில், ஊழியர்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், கூடுதல் பணி நேரத்துக்கு பணப் பலன்கள் வழங்கப்படுவதில்லை, அதனை விடுப்பு உள்ளிட்டவைகளில் ஈடு செய்வதுமில்லை.

பல ஆண்டுகளாக ஊழியர்கள் தங்களுடைய மிருகத்தனமான பணி நேர அட்டவணையைப் பற்றி அதிருப்தி அடைந்தனர். சிலர் போராட முயன்றனர். மார்ச் 2019 இல் "996 வேலை நேர முறைக்கு எதிரான போராட்டம் கிட்ஹப் இணையம் வழியாகத் தொடங்கப்பட்டது. 'புரோகிராமர்' பதவி வகித்த குழுவினர் சிலர், குறியீடு பகிர்வு தளமான கிட்ஹப்பில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் கூடுதல் பணி நேரத்துக்கு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் வகையிலான திறந்தவெளிக் கோடுகளை அவர்கள் பதிவேற்றினர். அவர்களின் செயல்பாடு அப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.

இருப்பினும், அரசு அதனைக் கண்டு கொள்ளாமல் செயல்பட்டதால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து '996' கலாசாரத்தைத் தொடர்ந்தன. தங்களுடைய வெற்றியின் உந்து சக்தியாக இந்தக் கூடுதல் பணி நேரம் இருப்பதாக அந்த நிறுவனங்கள் கருதின. அந்த நிறுவனங்கள் உலகத் தொழிற்துறை அரங்கில் நம்ப முடியாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இணைய வழிச் சில்லறை விற்பனை நிறுவனமான அலிபாபாவை நிறுவிய ஜேக் மாவைப் போலவே, மின்னணு வணிகத் தளமான ஜேடி.காம் தலைவர் ரிச்சர்ட் லியு என்பவரும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ‘சோம்பேறிகள்’ என்று கூறி '996' பணி முறையினை நியாயப்படுத்தினார்.

996 வேலை நேர அமைப்பு சட்ட விரோதம் என சீனாவின் உச்ச நீதிமன்றத்தால் 27 ஆகஸ்ட் 2021 அன்று கருதப்பட்டது. சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள். 996 பணி முறையை என்று அறியப்படுகிற இந்த முறை கொடூரமான உழைப்புச் சுரண்டல் முறை, சட்டவிரோதமானது என அத்தகைய பணி முறையை அமல்படுத்தியிருக்கும் நிறுவனங்களுக்கு சீன ஆட்சியாளர்கள் கடுமையான நினைவூட்டலை விடுத்திருக்கிறார்கள். அப்படியும் நிறுவனங்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன. 

ஒரு பொருளின் அடக்க விலையைக் குறைக்கவும்; உற்பத்தியைப் பெருக்கவும் சீனாவில் கூடுதல் நேரப் பணிச்சுமையைச் சீன நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. கூடுதல் நேர வேலையை ஊக்குவிக்க, அலுவலகத்தில் இரவு வரை வேலை செய்யும் ஊழியர்களுக்கு வாடகை வண்டிக் கட்டணத்தை திருப்பிச் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கூடுதல் பணி நேரத்தால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை நிர்வகிப்பதற்கும், படுக்கை நேரத்தைச் செலவழிப்பதற்கும் போதிய நேரம் கிடைக்காமல் துன்பமடைகின்றனர். 

இந்த 996 வேலை நேர முறை மாற்றம் செய்யப்பட்டு, அப்பணியாளர்களுக்கு விரைவில் சரியான பணி நேர வேலை வழங்கப்பட வேண்டுமென்று நாமும் அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்!

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT