ஓவியம்: தமிழ் 
கல்கி

சிறுகதையில் ஒரு குறுநாவல் முயற்சி!

கல்கி டெஸ்க்

-SL நாணு

(1)

செல்லாயி கிழவியிடம் எப்படி விஷயத்தைச் சொல்லப் போகிறோம் என்று ஏட்டு சிவாவுக்கு தயக்கமாக இருந்தது. செய்தி கேட்டு கிழவி உடைந்து போய் கதறப்போகிறாள் என்ற நினைப்பே அவன் மனதை சங்கடப்படுத்தியது.

சிவா வசிக்கும் அதே தெருவில்தான் செல்லாயி கிழவியின் குடிசையும் இருந்தது. அவனுடைய சின்ன வயதிலிருந்தே கிழவி ரொம்பவே பழக்கம். அதனால்தான் இன்ஸ்பெக்டர் இந்தப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கிழவி.. இதை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள்… தான் போய் சொல்வதற்குள் வேறு யாராவது அவளிடம் விஷயம் சொல்லியிருக்க மாட்டார்களா என்று சிவாவின் மனம் ஏங்கியது. அப்படியென்றால் அவனுடைய வேலை சுலபமாகிவிடும். ஆனால், ஊர் இன்னும் தூக்கம் கலைக்காத இந்தப் பிரம்ம முகூர்த்தத்தில் யார் பார்த்திருக்கப் போகிறார்கள்? யார் பாட்டியிடம் சொல்லியிருக்கப் போகிறார்கள்?

பனியுடன் கலந்த காற்று சில்லென்று உரசிச்செல்ல மனதோடு சேர்ந்து உடம்பிலும் கொஞ்சம் நடுக்கத்துடன் சைக்கிளை மிதித்தான் சிவா.

(2)

நிலா வெளிச்சம் படர்ந்திருக்கும் அந்த இரவு வேளையில் ஆற்று மணலில் அந்த இருவரைத் தவிற வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை. நீரோட்டத்தின் நிதானமான சலசலப்பு அந்த இரவு நிசப்தத்தில் துல்லியமாகக் கேட்டது.

“ஏய்.. ஊழ்த்துடா”

மாரி வாய் குழறினான். ரொம்பவே கலைந்திருந்தான். கண்கள் சிவந்திருந்தன. நிலா வெளிச்சத்தில் தெரியவில்லை. சட்டை பித்தான்கள் விடுதலையாகி நெஞ்சாங்கூடு மந்தமாகத் தெரிந்தது. இடுப்பில் லுங்கி அவிழ்ந்தும் அவிழாமலும்…

“வாணாம் மாரி… தலைக்கு மேல போதை ஏறிருச்சு. போதும். நிப்பாட்டிக்க...”

உடன் இருந்த ஆதி எச்சரித்தான்.

“ஏய்… ஊழ்த்து… இன்னும்... இன்னும்... சோலி சோலின்னு பட்டணத்துலயே கெடந்து எம்புட்டு நா கழிச்சு இங்க வந்திருக்கேன். சந்தோஷமா இருக்குல…”

“சொல்றத கேளு. ஏற்கனவே வவுறு முட்ட சோறு துண்ணுருக்கே. இதுக்கு மேல வேணாம்.”

“ஏ.. ஊழ்த்து.. இல்லை நெக்கிழுவேன்.”

ஆதிமூலம் மறுபடியும் பிளாஸ்டிக் டம்ளரை நிரப்பினான்.

(3)

“பாவிப்பெண்ணே இப்படி ஏமாத்திட்டியே… நா என்ன பண்ணுவேன்?”

உத்திரத்திலிருந்து சேலையில் தொங்கும் பதினெட்டு வயது மகள் பொம்மியின் உடலைக் கண்டு கதறினாள் அஞ்சலை. பொம்மி அவளுக்கு ஒரே மகள். கணவனை இழந்த அஞ்சலைக்கு பொம்மிதான் உலகம்.

அஞ்சலையைத் தேற்ற முயன்ற நெருக்கங்கள் தோற்றுப் போனார்கள். அவள் கதறின கதறலில் அந்தப் பகுதியே நிலைகுலைந்தது.

“அஞ்சலை கொஞ்சம் சுதாரிச்சுக்க...”

“முடியலையே… வேணாம் வேணாம்னு முட்டிக்கிட்டேன். பாவிமக கேட்கலையே. பாரு… பாரு… என் பேச்சைக் கேட்காம சீரழிஞ்சு கடைசில இப்படித் தொங்கறா. ஐயையோ… நான் என்ன பண்ணுவேன்?”

இதற்கிடையே போலீசுக்கு தகவல் சொல்ல சிலர் கிளம்பினார்கள்.

(4)

சிவா செல்லாயி கிழவியின் வீட்டை அடைந்தபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. ஊரும் அடங்கித்தானிருந்தது. வழக்கமாக கிராமங்கள் விடிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழித்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால், எல்லாம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் கிராமங்கள் சோம்பல்முறித்து கொஞ்சம் விச்ராந்தையாகத்தான் விழித்துக்கொள்கின்றன.

கிழவியின் குடிசைக் கதவு மூடியிருந்தது.

சிவா சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு குடிசையின் பக்கவாட்டில் இருந்த சிறு ஜன்னல் துவாரம் வழியாக எட்டிப் பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை. அலைபேசி டார்ச்சை உசுப்பேற்றி பார்த்தான்.

உள்ளே தரையில் கிழவி சுருண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது.

சிவாவுக்குத் தெரியும்.. ஏற்கனவே கிழவிக்கு சிக்கனமான உடற்கட்டு. இந்த எண்பத்தைந்து வயதில் அது இன்னும் சுருங்கியிருந்தது. சேலையை முழுதுமாகச் சுமக்க வலுவில்லாமல் தாவணியையே சேலையாகச் சுற்றியிருப்பாள். ரவிக்கை அணிய மாட்டாள். பஞ்சு போன்ற தலைமுடி. முகத்தைப்போலவே உடம்பு முழுவதும் சுருக்கக் கோடுகள். கொஞ்சம் கூன் விழுந்திருந்தாலும் தடுமாறாத நடை. சமையலிலிருந்து எல்லா வேலைகளையும் அவளேதான் கவனித்துக்கொள்வாள்.

தூக்கத்திலிருந்து கிழவியை எழுப்ப சிவாவுக்கு மனது வரவில்லை. அவள் எழுந்திருக்கட்டும் என்று வாசலில் சிகரெட் பற்றவைத்து காத்திருந்தான்.

ஓவியம்: தமிழ்

(5)

“ஊழ்ழு.. ஊழ்ழு..”

மாரி குரலிலேயே தடுமாறினான்.

காலி சரக்கு பாட்டிலை எடுத்து இப்படியும் அப்படியும் ஆட்டினான் ஆதி.

“சரக்கு தீர்ந்துபோச்சு மாரி. கிளம்பு… மணி பன்னெண்டு தாண்டியாச்சு.”

மாரிக்கு சுர்ரென்று ஏறியது.

“என்ன சொன்னே? சழக்கு தீழ்ந்து...”

ஆத்திரத்துடன் சீறியபடி எழுந்திருக்க முயன்றவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் சரிந்தான்.

“மாரி… மாரி...”

அசையாமல் கிடந்த மாரியின் மூக்கில் ஆதிமூலம் விரல் வைத்துப் பார்த்தான்..

சுவாசம் நின்றிருந்தது..

(6)

“என்னாண்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்ல? ஏன் சொல்லாம இருந்திட்டே?”

அஞ்சலை அழுகையைக் கொஞ்சம் நிறுத்தி…

“அவனோட பழகாதேன்னு நா கண்டிச்சதும் சரின்னு தலையாட்டினாளே. பாவிமக மனசு மாறிட்டான்னு நினைச்சேன். ஆனா, வேஷம் போட்டிருக்குறான்னு இப்பத்தானே தெரியுது. மானங்கெட்டுப் போய் வவுத்த நிரப்பிட்டு வந்திருக்குறா. அந்தப் பாவி மவனும் சோலி முடிஞ்ச உடனே இவள ஒதுக்கிட்டான். எங்கிட்ட சொல்லி அளுதா. பதட்டமாகாதே… நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள என் பொம்மி இப்படி.. அந்தப்பாவி மவன சும்மா விடக்கூடாது. அவனை…”

முடிக்கமுடியாமல் அழுகையைத் தொடர்ந்தாள்..

“அழுவாதே… நான் பார்த்துக்கறேன்.”

(7)

சிவாவின் அலைபேசி ஒலித்தது.

இன்ஸ்பெக்டரிடமிருந்து...

“சொல்லுங்கய்யா...”

“சிவா, மாரி உடம்புல நீலம் பரவியிருக்குதாம் ஆஸ்பத்ரில டாக்டர் சொல்லிட்டாரு.”

“அப்படியா?”

“ஆமாய்யா. அவன் நெஞ்சு வலில சாவலை. விஷம் வெச்சு கொன்னுருக்காங்க”

“யாரு?”

“அதைத்தான்யா கண்டுபிடிக்கணும்... நீ கிழவிகிட்ட விசயம் சொல்லிட்டியா?”

“இன்னும் இல்லைங்கய்யா. அவுங்க இன்னும் தூக்கம் கலையலை.”

“அதுக்கெல்லாம் காத்திட்டிருக்க முடியாதுப்பா. எழுப்பி விசயத்தைச் சொல்லிட்டு சட்டுன்னு வா… இங்க நிறைய சோலி கிடக்கு.”

“சரிங்கய்யா.”

கால் பேசி முடித்த சிவா வானத்தைப் பார்த்தான்.

இப்போது கொஞ்சம் விடிந்திருந்தது.

(8)

“பாவி மவனே… ஏண்டா இப்படிப் பண்ணிப்புட்டே?”

செல்லாயி கிழவி கண்களில் நீருடன் புலம்பினாள்.

மாரி அவளை அடக்கினான்.

“த.., கம்னு இருக்கியா? சும்மா புலம்பாத…”

“டேய் பொண்ணுங்க பாவம் பொல்லாதது. மகமாயி. என் மவனுக்கு ஏன் இப்படியொரு தீச புத்திய கொடுத்தே?”

“நிறுத்தறயா? பசிக்குது. சோறு போடு.”

“பாவி மவனே, எப்படிடா உன்னால…”

“இப்ப சோறு போடப் போறயா இல்லை வவுறு காலியா கிளம்பவா?”

மகன் பட்டினி கிடப்பதை கிழவியால் தாங்கமுடியாது. இது மாரிக்கு நன்றாகவே தெரியும்.

கிழவி புலம்பிக்கொண்டே மாரிக்கு சோறு போட்டாள்.

(9)

சிவா குடிசை அருகே சென்று “ஆத்தா” என்று குரல் கொடுத்தான். எந்த பதிலும் இல்லை. மீண்டும் அழைத்தும் பலனில்லாமல் குடிசை வாயிலை மறைத்திருந்த ஓலைப்பலகையை மெதுவாக ஒதுக்கி குடிசைக்குள் எட்டிப் பார்த்தான். தரையில் துணி விரித்து கிழவி பக்கவாட்டில் படுத்திருப்பது தெரிந்தது. மெதுவாக அருகில் சென்று மீண்டும் “ஆத்தா” என்று குரல் கொடுத்தான். அசைவில்லை. சந்தேகம் வந்து கிழவியின் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். உடனே பதறி இன்ஸ்பெக்டரை போனில் அழைத்து..

“சார்… கிழவியும் மண்டைய போட்டுருச்சு.”

இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியுடன்..

“என்னய்யா சொல்றே?”

“ஆமா சார்… கூப்பிட்டு பதில் வரலைன்னு குடிசைக்குள்ளார வந்து பார்த்தா கிழவி அசையாம கிடந்தா. சந்தேகம் வந்து மூக்குல கை வெச்சுப் பார்த்தா.. இயற்கை மரணம்னுதான் நினைக்கறேன்.”

மறுமுனையில் இன்ஸ்பெக்டர் மௌனம்.

“ஐயா இருக்கீங்களா?”

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பரபரப்போடும் குரலில் உற்சாகத்தோடும்..

“யோவ் இப்பத்தான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். தூக்குல தொங்கிச்சே அந்தப் பொண்ணு பொம்மி… அதுக்கும் இந்த மாரிக்கும் கனெக்‌ஷனாம். அவனாலதான் அது தூக்குல தொங்கிச்சாம். மாரிய வேற விஷம் வெச்சுக் கொன்னுருக்காங்க. எல்லாம் கூடி வருது. கேஸ் வளராம முளைலயே கிள்ளி எறிஞ்சுரலாம்”

“என்னங்கய்யா சொல்றீங்க?”

“நல்லாக் கேட்டுக்க. மாரி பொம்மிய சேதமாக்கின விசயம் அவன் ஆத்தா அந்த செல்லாயி கிழவிக்கு தெரிஞ்சுபோச்சு. அவன் செஞ்சது பிடிக்காம மாரிக்கு போட்ட சோத்துல விஷத்தைக் கலந்துட்டா. என்னதான் இருந்தாலும் பிள்ளை பாசம்.. அதான் அவளும் அதே சோத்தை சாப்பிட்டு இறந்து போயிட்டா.”

“ஐயா...”

“கவலைப்படாதே… ஆஸ்பத்ரில டாக்டர்கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கறேன். கிழவி உடம்புலயும் விஷம் பரவிருச்சுன்னு சொல்ல வெக்கறேன். மவனும் போயாச்சு. ஆத்தாவும் போயாச்சு.. இதை இல்லைன்னு சொல்ல ஆளுங்க கிடையாது. காதும் காதும் வெச்ச மாதிரி கேஸை முடிச்சிரலாம். இல்லைன்னா கோர்ட், கேஸ்னு அலைய வேண்டி வரும்.”

“ஐயா...”

“எதுவும் பேசாதே. நான் சொன்னதுதான். ஆத்தா, மவனை விஷம் கலந்த சோறு போட்டு சாகடிச்சுட்டா. தானும் அதே சோத்த விழுங்கிட்டு உசிரை விட்டுட்டா. தற்கொலை. அவ்வளவுதான்… சோலி முடிஞ்சுது.”

இன்ஸ்பெக்டர் குரலில் ஏகத்துக்கு சந்தோஷம்.

சிவா எதுவும் பேசாமல் கிழவியின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

(10)

சென்னைக்குச் செல்லும் ரயிலின் ஜன்னலோத்து இருக்கையில் ஆதிமூலம் சாய்ந்திருந்தான்.

“அழுவாதே… நான் பார்த்துக்கறேன்.”

அக்கா அஞ்சலையிடம் சொன்னதுபோலவே நண்பன் மாரி சாப்பிட்ட சரக்கில் விஷம் கலந்து பொம்மியின் இறப்புக்கு அவன் பழி தீர்த்துக் கொண்ட நிம்மதியில் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT