Strong Person 
கல்கி

இதெல்லாம் டிக் ஆகுதா? அப்படீன்னா நீங்க strong ஆன ஆளு தான்... Don't Worry!

வித்யா குருராஜன்

இந்தக் காலகட்டத்தில் திடமனம் கொண்டவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடிகிறது.‌ குடும்பம், படிக்கும் இடம், பணி செய்யும் இடம் என்று எங்கெங்கிலும் நம்மை உடைக்கச் சில நேரங்களில் சில மனிதர்கள், சில சூழ்நிலைகள், சில சிக்கல்கள், சில முட்டுக்கட்டைகள் என்று பஞ்சமில்லாமல் இருக்கிறதே! 

சவாலான சூழ்நிலைகளைச் சந்தித்து சமாளித்துத் தொடர்ந்து இயங்கவும், உடைந்தே போய்விட்டாலும் மீண்டும் பொறுக்கிச் சேர்த்து ஒட்டிப் பூசி மீண்டு வரவும் வெறும் அறிவு மட்டும் போதாது அல்லவா! திடமனம் தேவையாய் இருக்கிறதே!

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்” என்ற வாசகத்துக்கிணங்க திடமான ஆளுமையா நீங்கள்?

இந்த 8ல் எத்தனை உங்களிடம் இருக்கிறது என்று டிக் போட்டுக்கொண்டு “நாம strong தான்” என்று உங்கள் தோளில் நீங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்...

  • உதவி கேட்க தயங்கமாட்டீர்கள்:

என்னடா இது! Strong ஆன ஆட்கள் என்றாலே யாரையும் சாராமல் தனியாய்ச் சமாளிப்பவர்கள் என்று நினைத்தால் முதல் பாயிண்டே இப்படி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? திடமான மனம் கொண்டவர்கள் உண்மையில் அனைத்தையும் தனியாய்ச் சமாளிப்பவர்கள் அல்லர். எங்கே, எப்போது, எவ்வளவு, என்ன உதவி தேவையாய் இருக்கிறதென்று திடமனம் கொண்டவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும். யாரிடம் எப்படி அந்த உதவியைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும் தெரியும். தயங்காமல் உதவி கேட்டுப் பெற்று சிக்கலைச் சமாளிப்பதும், முன்னேற்றப் பாதையில் நகர்வதும் strong minded ஆட்களுக்குக் கைவந்த கலை. நீங்கள் எப்படி?

  • தவறு செய்தால் பரவாயில்லை என்பீர்கள்:

தவறு செய்வது மனித இயல்பு. யாரும் perfect இல்லை. அநேக‌ நேரங்களில் சொதப்புவதே நாமாகத்தான் இருக்கிறோம். நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட சறுக்கல்களைத் தடைகளாகப் பார்க்காமல் அதிலிருந்து கற்றுக்கொண்டு மாற்றிக்கொண்டு டியூன் செய்துகொண்டு அந்தச் சறுக்கலில் இருந்து மீண்டு வர திடமனம் கட்டாயம் தேவை. 'Learning from mistakes' திடமாக இருப்பவர்களுக்கே சாத்தியப்படும். நீங்களும் உங்கள் தவறுகளிடமிருந்து கற்கும் மனப்பான்மை கொண்டவரா என்று சிந்தித்துப் பாருங்களேன்...

  • பாராட்டுவீர்கள்:

திடமான மனம் கொண்டவர்கள் திமிராக கெத்தாக இருப்பார்கள் என்று ‌ஒரு‌ பொதுக்கருத்து உண்டு. ஆனால் அது தவறு. திடமான ஆளுமைகளால் தான் அடுத்தவர்களைப் பாராட்ட முடியும்.‌ இந்த குணத்தினால் அவர்களின் சமூக வட்டமும் பெரிதாகவே இருக்கும். அனைவரும் ஏங்குவது ஒரு சின்ன பாராட்டுக்காகத்தானே.. பலவீனமானவர்கள் பாராட்ட பயப்படுவார்கள். எங்கே பாராட்டிவிட்டால் நம்மை விட உயர்ந்துவிடுவார்களோ என்ற பயம் திடமானவர்களுக்கு இருக்காது. அடுத்தவர்களைப் பாராட்டுவதோடு தன்னிடம் இருப்பவற்றையும் பாராட்டிக்கொள்வார்கள். இதனால் குறை சொல்லும் குணம் மறைந்து இருப்பவற்றுக்கு மதிப்பளித்து அதை முழுதுமாக உபயோகித்து வளர்ச்சி நோக்கி நகர அவர்களால் முடிகிறது. நீங்களும் அப்படித்தானா?

  • வேலைக்கு அஞ்சமாட்டீர்கள்:

Strong people are never lazy. இறங்கி வேலை செய்வார்கள். ஒழுக்கத்தோடு முழு அர்பணிப்போடு விரும்பி வேலை செய்வார்கள். உழைக்காமல் எதுவும் கிடைத்துவிடாது என்ற புரிதல் உங்களிடம் இருக்கிறதென்றால், வேலை என வந்துவிட்டால் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு சேலையைத் தூக்கிச் செருகிக்கொண்டு களத்தில் குதித்துவிடுவீர்கள் என்றால்.. நீங்கள் strong தான்..

  • மாற்றத்தை ஏற்பீர்கள்:

மாற்றம் மட்டுமே மாறாதது. ஆனால் அந்த மாற்றத்தை அனைவரும் சட்டென்று ஏற்றுக்கொண்டு விடுவதில்லை. பெரும்பான்மையானோர் மாற்றத்திற்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறார்கள். காரணம் அது பரிச்சயம் இல்லை அல்லது அது வசதியாய் இல்லை என்ற எண்ணம். ஆனால் நீங்கள் திட மனம் கொண்டவராக இருந்தால் கண்டிப்பாக மாற்றங்களை எதிர்க்க மாட்டீர்கள். மாற்றங்களைச் சகித்து, மாற்றங்களை ஏற்று, அதைக் கையாண்டு, அந்த மாற்றங்களோடு வளர உங்களுக்கு தெரியும்.‌ வீக்கானவர்களின் சமநிலையை பாதிக்கும் அதே மாற்றங்கள் உங்களைப் பொறுத்தவரை ஒரு சவாலாக மட்டுமே பார்க்கப்படும். சமநிலையைப் பாதிக்க விட்டுவிடாமல் மாற்றங்களை நின்று எதிர்கொள்வீர்கள்.

  • எதார்த்தத்தைப் பார்ப்பீர்கள்:

எதார்த்தத்தில் இருந்து விலகிப் போகாமல் இருப்பதற்கு மிகப்பெரிய மனோபலம் தேவை. வீக்கானவர்களைப் போல் கடந்த காலத்தில் உழலாமல் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டுகொண்டு இருக்காமல், திடமான மனம் கொண்டவர்கள் நிகழ் காலத்தில் கால் ஊன்றி நிற்பார்கள். அதீத கற்பனை, நடக்காத ஒன்று நடந்துவிடுமோ என்ற பயம், குழப்பம், அழுத்தம் என்றில்லாமல், தன்னுடைய சிந்தனைகள், உணர்வுகள் பற்றிய தெளிவு அவர்களிடம் அதிகம் இருக்கும். அதனால் நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதன் மேல் முழுக் கவனம் செலுத்த முடியும். தெளிந்த நீரோடையாய் மனமும் செயல்களும் இருக்கும். அடுத்தவர்களின் நாடகத்தன்மைகளும் திரித்தல்களும் பாதிக்காதவன்னம் தன்னுடைய மனநலனை வைத்துக்கொள்வார்கள். தன்னை அழுத்திக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பார்கள். நீங்களும் அப்படித்தானா?

  • அடுத்தவர்கள் மீது பழி சொல்லமாட்டீர்கள்:

வீக்கானவர்கள் எதற்கும் பொறுப்பேற்க அஞ்சுவார்கள். அடுத்தவர் மீதே பழி போட்டுக் காலந்தள்ளுவார்கள். ஆனால் திடமனம் கொண்டவர்கள் தன் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்பார்கள்.‌ அதனால் தன் தவறுகளை உணர்ந்துகொள்ளவும் திருத்திக்கொள்ளவும் முன்னேறவும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்வார்கள். அடுத்தவர் மீது பழி போடுவதைத் தவிர்த்து அவர்கள் நிலையில் தன்னைப் பொருத்தி அவர்களைப் புரிந்துகொள்ளும் ‘எம்பதி’யும் திடமானவர்களிடம் நிறையவே இருக்கும். 

  • வைராக்கியம்:

அத்தனை சுலபத்தில் விட்டுவிடுபவர்கள் அல்ல திடமானவர்கள். Resilience மிக அதிகம் அவர்களுக்கு. எந்த கஷ்டமாயினும் வைராக்கியத்தோடு விட்டுவிடாமல் போராடுவார்கள். கடினமான, மோசமான ஒன்று நடந்த பிறகு மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க திடமானவர்களால் மட்டுமே முடியும்.

  • உங்களை நம்புவீர்கள்:

நிறைவாக, திடமானவர்கள் தன்னை, தன் திறமைகளை என்றைக்கும் சந்தேகிக்கமாட்டார்கள். Strong ஆன நபர்கள் தன்னை‌‌ நன்றாகப் புரிந்துவைத்திருப்பார்கள். தன் பலம், பலவீனம், பொறுப்புகள், கடமைகள், இலக்குகள், ஆசைகள் அனைத்தையும் துல்லியமாய்த் தெரிந்து வைத்திருப்பார்கள். தன்னை நேசிப்பார்கள். தன்னை உடலளவிலும் மனதளவிலும் நன்றாய்ப் பார்த்துக்கொள்வார்கள். தன்னைத் தண்டித்துக்கொள்ளும் குணம் அவர்களிடம் இருக்காது. அடுத்தவர்களைக் கூட எளிதாய் மன்னித்துவிடலாம். ஆனால் நம்மை நாமே மன்னித்துக்கொள்ளத் தான் பெரிய பலம் தேவை. உறுதியானவர்களால் மட்டுமே தன்னை மன்னிக்க முடியும். தன்னோடு நல்ல கூட்டணி வைத்துக்கொள்ள முடியும். தன்னோடு தொடர்பில் இருந்து, தன்னை நம்பி, தன்னைப் பேணி, தன்னைத் தானே தாங்கிக்கொள்வார்கள் strong minded நபர்கள். 

எத்தனை டிக் வாங்கியிருக்கிறீர்கள்? எட்டுக்குமே டிக் என்றால் வாழ்த்துகள். உலகின் 95% நபர்களை விட நீங்கள் உறுதிமிக்கவர்.

இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடுவதுதான் பெஸ்ட்! 

அழியும் தருவாயில் உள்ள அழித்து அழித்து எழுதிய சிலேட்டுகள்!

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் அதிக ஆரோக்கிய நன்மைகள்!

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?

SCROLL FOR NEXT