TNPSC  
கல்கி

'குறைந்தபட்சம் 15 ஆயிரம் காலி பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்' - போட்டித் தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தா.சரவணா

கால் காசு என்றாலும் அது கவர்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்பது சொலவடை ஆகும். அதாவது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், அது அரசு சம்பளமாக இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

காலை 10 மணிக்கு அலுவலகம் சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பலாம். இருக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். இடையே 11 மணிக்கு டீ டைம். ஒரு மணிக்கு மதிய சாப்பாடு நேரம். மாலை 4 மணிக்கு மீண்டும் டீ டைம். 6 மணிக்கு வீட்டுக்கு சென்று விடலாம். நம் வேலையை நாம் சரியாக பார்த்து முடித்து விட்டால் யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை. இதுபோன்ற காரணங்கள்தான் நம்மில் பலரையும் அரசு வேலையை நாடிச் செல்ல உந்து சக்தியாக உள்ளன.

ஆனாலும் அரசு வேலை என்பது, புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் என அரசு வேலை பணியாற்றுபவர்கள் நினைக்கின்றனர். ஆனாலும் அரசு நடத்தும் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளிலும் காலிப் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், லட்சக்கணக்கில் தேர்வர்கள் எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று நீதிமன்றங்களில் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கும். அப்போது அந்த தேர்வுக்கு அடிப்படை கல்வி தகுதி பத்தாவது பெயில், பன்னிரண்டாவது பெயில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதாக இருக்கும். ஆனால் அதை எழுதும் நபர்களின் கல்வித் தகுதியை பார்த்தால் அசந்து போய் விடுவோம். எம் இ., எம் பி ஏ., படித்தவர்களும் அந்தத் தேர்வில் பங்கு கொண்டு அரசு வேலைக்காக போட்டியிடுவார்கள்.

இப்படியாக நாடு முழுவதும் அரசு பணிக்காக போட்டி தேர்வுகளில் பங்கு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் காலிப்பணியிடங்களோ குறைவாக காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தேர்தல்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், வனப் பாதுகாவலர் உட்பட 6,244 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பி எஸ் சி) கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தியது. தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினர். முடிவு அடுத்த மாதம் வெளியாகிறது.

இதற்கிடையே கடந்த 11ஆம் தேதி குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக டி என் பி எஸ் சி அறிவித்தது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. ஆனால் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி க்கு அழுத்தம் தந்து வருகின்றனர். இந்நிலையில் 6724 என்ற எண்ணிக்கையை பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் 2018ல் - 11 ஆயிரத்து 949, 2019ல் - 9 ஆயிரத்து 684, 2023ல் -10 ஆயிரத்து 139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தேர்வு நடக்கும் போது அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறைவாக இருந்தாலும், தேர்வு முடிந்து அதற்கான பணிகள் முடியும் போது ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்துள்ளன.

அதேபோன்றுதான் இப்போதும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொதுவாகவே ஒரு தேர்வு மூலம் குரூப் 4 பணியிடங்கள் 30 ஆயிரம் வரை நிரப்பலாம். அந்த அளவுக்கு காலி பணியிடங்கள் உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகிறார். அதே போல நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் இதையே வற்புறுத்தி வருகின்றனர். இதை தேர்வர்களும் வரவேற்கின்றனர்.

அதே நேரம் 2018 இல் பன்னிரண்டாயிரம் பணியிடங்கள் வரை நிரப்பப்பட்டன. அதனால் இந்த முறை 20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இப்போது 7 ஆயிரத்துக்குள் தான் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 12,000 பணியிடங்களை நிரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் 15 ஆயிரம் காலி பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும். அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் வரை நிரப்பலாம் என தேர்வர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் தேர்வர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது...                                     

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

SCROLL FOR NEXT