கல்கி

பிச்சை...

சேலம் சுபா

சேலம் சுபா

  “பிச்சையெடுத்துப் பாருங்க, அப்பத்தான் தெரியும் காசோட அருமை....” இன்னும் அந்தக் குரலின் காட்டம் மனதில் ஆறாத வலியை உண்டு பண்ணியது பெரியவர் மகாதேவனுக்கு. தான் அமர்ந்திருந்த படிக்கட்டில் இருந்த தூணில் நன்றாக சாய்ந்து அமர்ந்து பெருமூச்சுவிட்டார்.

     கிறிஸ்துமஸ் என்பதால் அந்த கிறிஸ்துவ ஆலயத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வந்திருந்த அனைவரின் முகங்கள் எங்கும் பரவசக் களிப்பு. கொரோனா காலத்தடை முடிந்ததால் குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் மகிழ்ச்சியுடன் ஆண்டவனை வணங்கியும் நன்றி செலுத்திக்கொண்டும் இருந்தனர்.

     “ஓ இன்று கிறிஸ்துமஸ் தினமா? சரியா ஒரு ஒரு வருஷம் ஆயிற்றா இங்கு வந்து ?” நினைத்தவர் கைகளில் நோட்டு ஒன்று விழுந்தது.

     “அம்மா மகராசியா இருக்கணும்” பத்து ரூபாய்த்தாளுடன் ஒரு டப்பாவில் அடைத்த தக்காளி சாதத்தை அவர் கையில் பரிவுடன் தந்து புன்னகைத்த அந்தப் பெண்ணைப் பார்த்து மனதார வாழ்த்தியவர் மனதில் மருமகள் லதாவின் நினைவு வருவதை தடுக்கவே முடியவில்லை.

      இதே தக்காளி சாதம் பிடிக்குமே என்று இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு அவள் கரண்டியை சோற்றுப்பாத்திரத்தில் வேகமாக அடித்து “இந்தக் கிழத்துக்கு எப்படித்தான் பசிக்குமோ ..மத்தவங்களுக்கும் வேணும்னு தெரியாது சுயநலம்..”  முனகியபடி தன் ஆத்திரத்தைக் காட்டியது நினைவுக்கு வந்தது .

     ஒரு மனிதனுக்கு மனைவி என்பவளின் அருமை அவளை இழந்தபின் சாப்பாட்டு நேரங்களில் மட்டுமே வெகுவாகத் தெரியும். மனைவியிடம் ஆயிரம் குறைகள் சொல்லி சாப்பிட்ட ருசியான உணவு நினைவினில் வர, வீட்டில் இருக்கும் மருமகளோ மகளோ உப்புச்சப்பில்லாத அரை வயிறு சாப்பாட்டைத் தந்து அதை வேறு வழியின்றி பசிக்கும் வயிற்றை அடக்க சாப்பிடும்போது ஒருவித குற்ற உணர்வு எழுவதை மனைவியை இழந்தவர்கள் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

     மகாதேவன் வீட்டை விட்டு வெளியே வந்த நாளான கிறிஸ்துமஸ் தினம்  நினைவில் வந்தது . அன்று காலையில் இருந்தே லதாவின் போக்கு சரியில்லை. ஏதோ சஞ்சலத்துடன் புருசனிடம் வாக்குவாதம் செய்த வண்ணம் இருந்தாள்.

     “இங்க பாருங்க என் பிரண்ட்ஸ் எல்லாம் அந்த டூருக்குப் போறாங்க...நானும்தான் எத்தனை நாளைக்கு உங்களுக்கும் உங்க அப்பனுக்கும் வடிச்சுக் கொட்டிட்டே இருக்கிறது... எனக்குன்னு ரெஸ்ட் வேண்டாமா ?”

     “நானா உன்னைப் போகக் கூடாதுன்னு சொல்றேன்... சந்தோசமா போய்ட்டு வா. ஆனா காசு மட்டும் என்கிட்டே கேட்காதே... எனக்கு இதுக்கு மேல சம்பாரிக்கிற திறமை இல்லை.”

     “ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. சொல்லிட்டீங்களா... இனி நான் எப்படி மிச்சம் பிடிச்சு அவங்களோட போறேன்னு மட்டும் பாருங்க... இன்னும் ஆறு மாசத்துல சேத்திற மாட்டேன்... “

       மகன் மருமகளின் சம்பாசனை முடிந்தது. ஒரேயொரு தடுப்புச்சுவர்தான் குறுக்கே என்பதால் மகாதேவனுக்கு அவர்கள் பேசுவது காதில் விழுவது வாடிக்கை. 

      மகன் வெளியே கிளம்பியதும் லதாவின் ஆட்டம் ஆரம்பமாகியது .மூன்று சிறிய இட்லிகளை நங்கென்று வைத்து விட்டு,

     “இனிமேல் இங்க எல்லாமே கச்சிதமாதான் இருக்கும்... இது வேணும்... அது வேணும்னு... யாரும் எங்கிட்ட கேக்க வேண்டாம்”

      “ஏம்மா இப்படியெல்லாம் பேசறே? என் மகன் சம்பாரிக்கிறான். நீ சமைக்கிறதுல எனக்கும் கொஞ்சம் சேர்த்துப் போடறே அவ்வளவுதானே ? நானா ஆசைப்பட்டு ஏதாவது உன்னைக் கேட்டிருக்கேனா ? எல்லாம் உன் அத்தையோடபோச்சு...”

      “ஆமாமா இங்க உங்களுக்கு சோறு போடாம பசியோட வெச்சுருக்கோம் பாருங்க... நீங்க எல்லாம் பேசுவீங்க. வயசான காலத்துல எத்தனை பேர் நடு  ரோட்டுல பிச்சை எடுக்கிறாங்க தெரியுமா ? அப்படி உங்களை விடாம வெச்சு சோறு போட்டா எது வேணாலும் பேசுவீங்க.“

     வார்த்தைகள் வளர்ந்தது... “என்னம்மா... போற போக்குல என்னையும் பிச்சை எடுக்க சொல்வ போல... அது ஒண்ணுதான் இன்னும் செய்யல...“

      “பிச்சை எடுப்பது அவ்வளவு கேவலமா ? ஒரு நாள் வெளியே போய் பிச்சை எடுத்துப்பாருங்க அப்பத் தெரியும் காசோட அருமை...“

       இதற்கு மேல் ஒரு அவமானம் தேவையா ? மகாதேவனின் மனம் இரண்டாக உடைந்தது. நான் எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாதோ? இல்லை லதாவுக்கு நான் இங்கு இருப்பதும் எனக்காக செலவு செய்வதும் சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அன்பில்லாத இங்கு இனி சாப்பிடுவது வயிற்றுக்கு செய்யும் துரோகமாகாதா ? அது ஒருபுறம் இருக்கட்டும்... ஒருவேளை நானும் தவறானவனோ ? என் வாயால் பிச்சை எடுப்பவர்களை எப்படி தரக்குறைவாக பேசலாம் ? இதற்கு எனக்கு தண்டனை வேண்டாமா ? மனசாட்சி கேள்விகளை கேட்டது.

       அன்று யாரிடமும் சொல்லாமல் இந்த குழந்தை இயேசு ஆலயத்தில்  வந்து அமர்ந்தவர்தான்... மனம் விரக்தி அடைந்து விட்டால் மதமாவது ஒண்ணாவது... வெறுத்துவிட்ட மனதுக்கு பிள்ளையாரும் ஏசுவும் வேறு மாதிரி தெரிய மாட்டார்கள் .

       இதோ இங்கு வந்து அமர்ந்து கையேந்தி பிச்சை எடுக்கும் ஒவ்வொரு முறையும் மனம் சுருக்கென்றாலும் இங்கு உள்ள சக பிச்சைக்காரர்களின் அன்பும் அரவணைப்பும் அவருக்கு பெரும் ஆறுதலையும், லதாவிடமிருந்து விலகி வந்ததில் சிறையிலிருந்து விடுதலையானதுபோல் பெரும் மகிழ்ச்சியும் தந்தது உண்மைதான் ...

     “அதோ அங்க பாருங்க தாத்தா... ஹை.... தாத்தா“ ... கூவியபடி ஓடி வந்த குழந்தைகளைப் பார்த்தார். அட பேரனும் பேத்தியும் இப்போது என்ன செய்யலாம் ? குழம்பினார்... அவர்கள் வருவதற்குள் மறைந்து விடலாமா? இருந்தாலும் மகனைப் பார்க்க வேண்டும் எனும் பாசம் அவர் கால்களை நகரவிடாமல் கட்டிப் போட்டது .

        அருகில் வேகமாக வந்தனர் மகனும் மருமகள் லதாவும்.

       “அப்பா என்ன இப்படிப் பண்ணிட்டீங்க ? நாங்க உங்க பிள்ளைங்கப்பா... நீங்க வீட்டை விட்டுப்போனதுல இருந்து லதா அழுதுகிட்டே இருக்கா.. என்னாலத்தானே உங்கப்பா போயிட்டாருன்னு தினம் தினம் அவ அவளாகவே இல்லை. அவ போகணும்னு நினைச்ச டூரை கேன்சல் பண்ணிட்டு, அந்தக் காசுல விடுமுறை தினங்களில் உங்களைத் தேடி அலைஞ்சோம். எங்கள் முயற்சி வீண் போகல... வாங்கப்பா வீட்டுக்குப் போகலாம்...”

      மகன் பேசிக் கண்கலங்க... லதா மகாதேவனின் கால்களில் விழுந்தாள். பதறிப்போய் அவளைத் தூக்கினார் .

     “மாமா நான் பண்ணியது, பேசியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு நீங்க இல்லாதபோது நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது .என்னதான் காசு இல்லைனாலும் உங்ககிட்ட அப்படி நான் காட்டமா பேசியிருக்கக் கூடாது . சத்தியமா நீங்க வீட்டை விட்டுப் போகனும்னு நான் நினைக்கவில்லை மாமா. அது உங்க வீடு... நான் தப்பு பண்ணியிருந்தா கண்டிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னை மன்னிச்சு வீட்டுக்கு வாங்க மாமா ..” அழுகையின் ஊடே திணறினாள் லதா .

       “லதா உன் மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லைமா. நானும் கொஞ்சம் பார்த்துப் பேசியிருக்கணும். வருமானம் பத்தலைங்கற உன் ஆதங்கம் எனக்கும் புரியுது . அதுக்காக நான் இங்கு வரவில்லை . ‘பிச்சை எடுப்பது கேவலமான விஷயம்‘ என்று சொன்னேன் அல்லவா ? அது என் மனதை உறுத்தியது. எனக்கு நானே தண்டனை தரத்தான் பிச்சை எடுத்தேன் . இப்பத்தான் தெரியுது இவங்களின் வலியும் வேதனையும்.”

      பாச உணர்வுகள் மகாதேவனின் மனதை மாற்றத் துவங்கியது. இறுதியாக அவர்களுடன் செல்ல சம்மதித்த மகாதேவன் கண்களைத் துடைத்துக்கொண்டு அருகிலிருந்தவர்களிடம் கனத்த மனதுடன் பிரியாவிடை பெற்றார்.

     “நான் வீட்டை விட்டு வந்ததால்தான் மருமகளின் மனது மாறியது...சில சமயங்களில் இப்படிப்பட்ட பிரிவுகள் உறவுகளின் மகத்துவத்தை புரியவைத்து கசப்புகளை அடித்துச் சென்று, மனங்களை தூய்மைப் படுத்த உதவுகிறது “..என்று நினைத்து பேரன் பேத்தியின் கரங்களை ஆதரவாக பிடித்துக்கொண்டு நடந்தார்.

      வழியில் வந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவரின் சேட்டைகளை ரசித்து, ‘இனி நானும் இப்படித்தான் முகமூடிக்குள் மகிழ்ந்து இருக்கப் போகிறேன்... வேறு வழியில்லை, வயதாகி விட்டது‘ என்று மனதில் நினைத்தவாறு நடந்த மகாதேவன் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT