சமீபத்தில் காஞ்சிபுரத்திற்கு சொந்த வேலையாகச் சென்று விட்டு அன்னை காமாட்சியை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தேன். வழியில் உலகளந்தார் மாட வீதியில் 'பாரதி வாடகை நூலகம்' என்ற ஒரு கடையைப் பார்த்ததும் என் நினைவுகள் பின்னோக்கி சுழலத் தொடங்கின.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் லெண்டிங் லைப்ரரிகள் எனப்படும் வாடகை நூலகங்கள் பல நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் நூல்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பதென்பது பலருக்கு சிரமமாக இருந்தது. அப்படியே விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடிந்தாலும் படித்து முடித்த பின்னர் அத்தகைய நூல்களைப் பாதுகாத்து வைப்பது அதைவிட சிரமமான காரியமாக இருந்தது. வாடகை நூலகங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி உறுப்பினரான பின்னர் சிறு தொகையை வாடகையாகச் செலுத்தி நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், சரித்திர புத்தகங்கள், சமையல் மற்றும் சுயமுன்னேற்ற நூல்கள் முதலானவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து முடித்து அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதன் மூலமாக சிறிய தொகையில் நிறைய நூல்களை வாசிக்க முடிந்தது. இத்தகைய வாடகை நூலகங்களில் வார, மாத இதழ்களும் வாடகைக்குக் கிடைக்கும். அவற்றையும் சிறு தொகையை செலுத்தி வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடலாம். வாடகை நூலகங்கள் மூலமாக பலவிதமான புத்தகங்கள், வார, மாத இதழ்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்தன. மேலும் குறைந்த செலவில் பரந்த வாசிப்பு அனுபவம் ஏராளமான வாசகர்களுக்குக் கிடைத்தது.
சரி, நம்ம கதைக்கு வருவோம்...
பாரதி வாடகை நூலகத்திற்குள் நுழைந்தேன். அங்கே இருந்தவரிடம் விசாரித்தபோது அவர்தான் அந்த வாடகை நூலகத்தின் உரிமையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பெயர் ஜி.ஆறுமுகம். அவரிடம் அவருடைய நூலகம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ளப் பேசினேன்.
இந்த நூலகத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.
நான் 1995 ஆம் ஆண்டிலிருந்து இதே இடத்தில் இந்த பாரதி வாடகை நூலகத்தை நடத்தி வருகிறேன். இந்த நூலகத்தில் புதினங்கள், சிறுகதை நூல்கள், ஆன்மிக நூல்கள், மருத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. எனது நூலகத்தில் இரண்டாயிரம் வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஆனால் தற்போது இதில் இருநூறு வாசகர்கள் மட்டுமே தொடர்ந்து நூல்களை வாடகைக்கு எடுத்துப் படிக்கிறார்கள்.
இந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்? புத்தகங்களுக்கு வாடகையாக எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
ஒரு வாசகர் இந்த வாடகை நூலகத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்றால் ஐநூறு ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த தொகையானது உறுப்பினர் இந்த நூலகத்திலிருந்து விலக விரும்பினால் அவருக்கு திருப்பித் தரப்படும். புத்தகத்தை படிக்க எடுத்துச் செல்ல விரும்பினால் புத்தகத்தின் விலையில் பத்து சதவிகிதம் வாடகையாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு புத்தகத்தின் விலை 200 ரூபாய் என்றால் 20 ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும். ஒரு புத்தகத்தை பதினைந்து நாட்கள் வைத்திருந்து திருப்பித் தரலாம். அதே போல சுமார் 30 வார, மாத இதழ்கள் இந்த நூலகத்தில் வாடகைக்குக் கிடைக்கின்றன. அதற்கும் இதே தொகைதான் அதாவது விலையில் பத்து சதவிகிதம் வாடகையாக செலுத்த வேண்டும். ஒரு வார இதழ் 30 ரூபாய் என்றால் 3 ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும். புதிய வார இதழை படித்து விட்டு மறுநாள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். பழைய வார இதழ்களாக இருந்தால் ஒருவாரம் கழித்துத் திருப்பி ஒப்படைத்தால் போதும்.
ஒரு உறுப்பினர் எத்தனை புத்தகங்களை வேண்டுமாலும் கொண்டு செல்ல அனுமதிப்பீர்களா?
இல்லை. வைப்புத் தொகை அதாவது ஐநூறு ரூபாய் அளவிற்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.
இந்த தொழிலில் லாபம் கிடைக்கிறதா?
ஓரளவிற்குக் கிடைக்கிறது. ஆனால் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புத்தங்களின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இதை இத்தனை வருடங்களாகச் செய்து வருகிறேன். இந்த கடைக்கு வாடகை செலுத்த வேண்டும். கரண்ட் பில் கட்ட வேண்டும். புத்தகங்களை பராமரிக்க வேண்டும். வார இதழ்களை வாங்க வாராவராம் ஒரு கணிசமான தொகையை செலவிட வேண்டும்.
இத்தனை சிரமங்களுக்கிடையில் புத்தகங்களில் மீது உள்ள காதலால் இந்த தொழிலை விடாமல் செய்து வரும் ஜி.ஆறுமுகம் அவர்களை பாராட்டி வாழ்த்தி விடை பெற்றோம்.