Auto stand 
கல்கி

யார் வேண்டுமானாலும் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துக்கொள்ள முடியுமா?

பிரபு சங்கர்

இப்போதெல்லாம், சென்னை நகரில், ஒரே பகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுகள் உருவாகியிருக்கின்றன. ஒவ்வொரு ஸ்டாண்டிலும் குறைந்த பட்சம் ஐந்து ஆட்டோக்களாவது நின்றுகொண்டிருக்கின்றன.

யாரேனும் வெளிப் பகுதிக்குப் போக அங்குவந்து ஆட்டோ அமர்த்திக் கொள்ளும்போது, அங்கிருக்கும் ஆட்டோக்களில் ஒன்று, வரிசை முறைப்படி, அந்தப் பயணிக்கு சேவை புரிய முன்வரும். இப்படி சவாரிக்குச் செல்வதில், தனக்கு முன்னால் சென்ற ஆட்டோவுக்கு நெடுந்தூர சவாரியும், அதனால் அவருக்கு அதிக வருமானமும் கிடைத்ததே, தனக்குக் குறுகிய தொலைவு சவாரிதானே கிடைத்திருக்கிறது என்று அவர்கள் தங்களுக்குள் பொறாமை பட்டுக்கொள்வதில்லை. அதோடு, அன்று சவாரியே கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நண்பருக்குத் தனக்கு வரும் சவாரியை விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் அவர்களிடையே உண்டு.

சரி, யார் வேண்டுமானாலும் இப்படி ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துக்கொள்ள முடியுமா?

தன்னிச்சையாக இப்படி செய்துகொள்ள முடியாது. இதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர வேண்டும்.அவர்கள் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்குச் சென்று அவ்வாறு தாங்கள் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துக்கொள்ள விரும்புவதாக ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், ஆட்டோ ஸ்டாண்டு அமையும் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இருபது குடும்பத்தாரிடமிருந்து ‘அவ்வாறு அங்கே ஆட்டோ ஸ்டாண்டு அமைய தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை' என்ற தடையில்லா சான்றிதழையும் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பிறகு, காவல் துறையினர், அந்த ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்திக் கொள்ள விரும்பும் ஆட்டோ ஓட்டுநர்களின் தகுதிகளைப் பரிசீலிப்பார்கள். அவர்களுடைய ஓட்டுநர் உரிமம், அவர்களுக்கு குற்றப் பின்னணி இருக்குமானால் அந்த விவரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் ஆட்டோ சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அவர்களுடைய முகவரி, அந்த ஆட்டோ அவருக்குச் சொந்தமனதா அல்லது வாடகைக்கு எடுத்திருக்கிறாரா என்பன போன்ற விவரங்களை சோதித்து சரி பார்ப்பார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதிக்கே வந்து சான்றிதழ் வழங்கிய குறிப்பிட்ட வீட்டுக்காரர்களிடம் விசாரணையும் மேற்கொண்டு, அதன் பிறகு அங்கே ஆட்டோ ஸ்டாண்டு அமைய அனுமதி அளிப்பார்கள். நாளாவட்டத்தில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அந்த ஸ்டாண்டில் அதிகரிக்குமானால் இந்த கூடுதல் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்டோ ஸ்டாண்டுகள் ஏதேனும் கட்சி சார்ந்த அமைப்பாகவோ, தேசியத் தலைவர்கள் பெயரிலோ, ஏதேனும் தொழிற்சங்கத்தின் ஆதரவிலோ அமையலாம். ஆனால் யாராக இருந்தாலும் மேலே குறிப்பிட்டபடி, வசிப்பாளர்களின் தடையில்லா சான்றிதழும், காவல் துறையினரின் ஆய்வும், பரிசீலனையும் கட்டாயம் உண்டு.

அவ்வாறு ஆட்டோ ஸ்டாண்டு அமைவதால், தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதுதான் தெருவாசிகள் வழங்கும் தடையில்லா சான்றிதழ்.

இப்படி தெருமுனையில் அமைந்திருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுகள் பெரும்பாலும் அந்தப் பகுதியின் பாதுகாப்புக்கும் உதவுகின்றன என்றே சொல்லலாம்.

இந்த ஓட்டுநர்களுக்குப் பெரும்பாலும் அந்தப் பகுதி மக்கள் விரைவில் பரிச்சயமானவர்களாகி விடுவார்கள்.இதனால் அவர்களிடையே நட்பு உருவாகி விடுகிறது. அந்தப் பகுதியில் ஏதேனும் திருட்டோ அல்லது கொலைச் சம்பவமோ நிகழுமானால் இந்த ஆட்டோ ஸ்டாண்டு ஓட்டுநர்கள் தரும் தகவலும், ஒத்துழைப்பும் காவல்துறையினருக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதிவாச்சிகளின் அவசரத் தேவைக்கும் இவர்கள் உடனே உதவுகிறார்கள். அதோடு அந்தப் பகுதிவாசிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடும் புதியவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இதனால் பகுதிவாசிகளுக்கு அறிமுகமற்றவர்களால் ஏற்படக் கூடிய தொல்லையும் இல்லாமல் போகிறது.

அதோடு ஸ்டாண்டிலுள்ள ஆட்டோக்கள் அந்தப் பகுதி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியையும், குறிப்பிட்ட கட்டணத்தில் மேற்கொள்வதால், பெற்றோர் தம் குழந்தைகள் பாதுகாப்பாக, அவரவர் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.

ஆனால், என்ன ஒரு சங்கடம் என்றால் அந்தப் பகுதியை சேர்ந்தவர் வெளியே போகவேண்டும் என்று வந்தால், ‘‘ஸ்கூல் சவாரி காத்திருக்கு சார், வேற ஆட்டோ பார்த்துக்கோங்க,'' என்று சொல்லித் தட்டிக் கழிப்பதும் பல ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிகழ்கிறது!

அதுமட்டும் இல்லாமல், அளவுக்கு அதிகமான நெருக்கத்துடன் பழகும்போது, அதற்கான சங்கடங்களும் ஏற்படலாம். எதிலும் கவனமும் ஒர் அளவும் தேவைதானே?

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT