Police 
கல்கி

குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றலாமா?

தா.சரவணா

தவறு செய்யும் போலீசாருக்கு, 'ஆயுதப்படைக்கு மாற்றம்' என அவ்வப்போது செய்திகள் வரும். அதை பார்த்ததும் பொதுமக்கள், 'ஐயோ பாவம், ஆயுதப் படைக்கு மாத்திட்டாங்களே' என பரிதாபப்படுவது உண்டு. சிலர் இந்த தகவலை பேசிப் பேசியே பரபரப்பு ஏற்படுத்துவதும் உண்டு. ஆனால் அவர்கள் நினைப்பது போல ஆயுதப் படைக்கு மாற்றம் என்பது சாபம் அல்ல. வரமாகும்.

ஒரு ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அறிவிப்பார்கள். இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரி என்றால் டி ஐ ஜி இந்த உத்தரவை பிறப்பிப்பார். இவர்களுக்கு இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் அந்தந்த மாவட்ட தலைநகரில் இயங்கி வரும் ஆயுதப்படை பிரிவில் சென்று தங்களை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் ஏதாவது விஐபி பந்தோபஸ்து இருந்தால் மட்டுமே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பணியாக இருக்கும். அப்படி எதுவும் இல்லை என்றால் காலை 6:00 மணிக்கு ரோல் கால் வந்து விட்டு வீட்டுக்கு சென்று விடலாம். இடையே ஏதாவது இவர்கள் தேவைப்படும் பட்சத்தில் ஆயுதப் படையில் உள்ளவர்கள் தகவல் அளித்து வர வைப்பார்கள். இவை அனைத்தும் ஆப் த ரெக்கார்டு ஆக நடக்கும்.

ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து விட்டால் இவர்களுக்கான சம்பளம் எதுவும் குறைக்கப்படாது. அவர்கள் வாங்கும் லஞ்சத்தொகை மட்டும் வருவதில் சற்று சந்தேகம். ஆனாலும் ஒரு சிலர், நான் மீண்டும் அங்கேயே பணிக்கு கண்டிப்பாக வருவேன் எனக் கூறி தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் ஆயுதப்படைக்கு ஒருவர் மாற்றப்பட்டால் அதை பெரிய மானப் பிரச்சினையாக கருதிய போலீசார் தமிழகத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் 90% பணியில் நேர்மையாக இருந்தனர். அதையும் மீறி தெரியாமல் தவறுகள் செய்யும்போது இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டால் பிறர் முகத்தை பார்ப்பது எப்படி? என யோசித்தபடியே பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இப்பொழுது ஆயுதப்படை மாற்றம் செய்வதை பெரிய விஷயமாக தவறு செய்யும் போலீசார் எடுத்துக் கொள்வதில்லை. யார் யாரையோ பிடித்து மீண்டும் ஸ்டேஷன் பணிக்கும் வந்து விடுகின்றனர்.

அதனால் இனியாவது ஆயுதப்படைக்கு மாற்றம் என்பது மிகவும் கடுமையான தண்டனையாக இருக்க வேண்டும். அந்த தண்டனை என்பது அவர்கள் செய்யும் தவறை அவர்களுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். தவறுக்கு தண்டனை என்பது நியாயம். ஆனால் தவறுக்கு சுதந்திரமாக சுற்றலாம் என்பது எந்த வித நியாயம்? தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT