வளர்ந்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, நம் உலகிற்கு ஒரு பெரும் கவலையாக இருக்கிறது, அதில் சில நாடுகள் கொஞ்சம் வேறுபட்டு குறைந்த அளவு மது மற்றும் போதைப்பொருள்களின் பயன்பாடு உள்ள நாடுகளாகக் காணப்படுகின்றன. இந்த நிலையைத் தக்க வைக்க இந்த நாடுகள் பல பயனுள்ள உத்திகளைச் செயல்படுத்தியுள்ளன. அது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
போதைப்பொருள் பயன்பாட்டில் குறைவாக காணப்படும் நாடுகள்:
சவுதி அரேபியா (Saudi Arabia), குவைத் (Kuwait) மற்றும் ஈரான் (Iran) போன்ற மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் குறைந்த ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு பெயர் பெற்றவை. இந்த நிலைக்கு காரணம், பெரும்பாலும் அவர்களால் கடைபிடிக்கப்படும் கலாச்சார மற்றும் மத நம்பிக்கையே, இதுவே காலப்போக்கில் இந்த பொருட்களின் பயன்பாடு அங்கு குறைய காரணமாக இருக்கிறது. கூடுதலாக, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் கடுமையான விதிமுறைகள் மற்றும் சில கடுமையான சட்ட விதிகளின் காரணமாக குறைந்த அளவிலான போதைப்பொருள் பயன்பாடே அங்கு காணப்படுகின்றன.
எவ்வாறு இந்த நிலையை அவர்களால் கடைபிடிக்க முடிகிறது..?
கலாச்சார மற்றும் மதம்: பல மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்லாமிய போதனைகள், மது மற்றும் போதைப்பொருளின் பயன்பாட்டை தவிர்க்க ஊக்கப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. காரணம், அனைவரும் பின்பற்ற வேண்டிய சமூக விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் (Respect) போன்ற விஷயங்கள் இந்த மதக் கொள்கைகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது, இதுவே அவர்களை தேவையற்ற பொருள்களின் பயன்பாட்டை சமூகத்திற்கு எதிரானது போல் ஏற்றுக் கொள்ள வைக்கிறது.
கடுமையான சட்ட வடிவமைப்பு: சிங்கப்பூர் போன்ற நாடுகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் உள்ளன. இப்படிப்பட்ட கடுமையான தண்டனைகள் மூலம் தனிநபர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதை தடுக்க சட்ட அமைப்பு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி: போதைப்பொருள் உட்கொள்வதால் வரும் அபாயங்களை சுட்டிக்காட்டும் கல்வி பிரச்சாரங்களும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மிகவும் முக்கியமாக கடைபிடிக்கப்படுபவை. இந்த முன்முயற்சிகளால் மது மற்றும் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய அபாயங்களை புரிந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் அடுத்து வரும் தலைமுறை செல்வங்கள், இதன் வலையில் சிக்காமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் இனியும் அதில் சிக்காமல் இருப்பார்கள்.
அணுகக்கூடிய ஆதரவு அமைப்புகள்: இதற்கு அடிமையாகி வெளியேற போராடுபவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய மறுவாழ்வு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவது மிகவும் அவசியம். குறைந்த போதை பொருள் உபயோகம் உள்ள நாடுகள் பெரும்பாலும் வலுவான ஆதரவு அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை தேவைப்படும் நபர்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டுதலை தொடர்ந்து வழங்குகின்றன.
இந்த தொகுப்பை படித்தவுடன் சிலருக்கு இந்த வகையான சட்டங்கள் ஏன் நம் நாட்டில் இருக்கவில்லை? அப்படி ஒரு சில இருந்தாலும் ஏன் இந்த நிலை? என்று தோன்றும், ஆனால் என்னை பொறுத்தவரை இந்த வகை சட்டங்கள் நம் நாட்டில் கட்டாயம் அமலாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் 'இந்த சட்டத்தின் ஆரம்பப் புள்ளியே நம் வீடுதான். ஆறறிவு பெற்ற நமக்கு தெரியாததா? எது சரி! எது தவறு! என்று. இப்படி ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொருமே தன் நிலை மற்றும் அடுத்த தலைமுறை பற்றிய ஒரு சரியான முடிவு எடுத்தாலே, அது நாடு முழுக்க எதிரொலித்து சட்டம் அமலாகவும் வழிவகை செய்யும், வருகின்ற அடுத்த தலைமுறையை இந்த தீங்கில் சிக்காமல் இருக்க செய்யும்'.